நம் குரல்

PK படமும் தமிழ்ப்படங்களும்பிகே படம் 85 கோடியில் தயாரிக்கப்பட்டு 573 கோடி வசூலுடன் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவின் வாழ்க்கைமுறையையும் மதம், சாதி, ஏழ்மை அவலங்களையும் கூர்ந்து நோக்கி, அத்தகைய பார்வையில் எடுக்கப்பட்ட படங்கள் இயல்பாகவே வெற்றிபெற்றுள்ளன. அதில் ஸ்லம் டாக் மில்லியனரும் பிகே -யும் அடங்கும்.

கடவுள், மதம், மூடநம்பிக்கைகள் குறித்த நம் மக்களின் முன்முடிவுகளும், மரபணு வரை பதியவைக்கப்படும் முட்டாள்தனங்களும் மென்னய நகைச்சுவையுடன் பிகே படத்தில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கின்றன.

இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு வந்து, ஏன் தமிழில் இப்படி படங்கள் எடுக்கப்படவில்லை என்று நண்பர் கேட்டார்.
இந்தப்படத்தில் பேசப்படும், மதம் மற்றும் கடவுள் குறித்து ஏற்கெனவே சென்ற நூற்றாண்டு முழுவதும் தீவிரமாக விவாதிக்கப்பட்ட நிலம் தான் நமது. உண்மையில், அந்தப்படத்தில் சொல்லப்படும் எல்லாமே நாம் முன்பே அறிந்த விடயங்கள் தாம். எதுமே புதியது அன்று.

என்றாலும், இந்தப்படத்தில், மதங்களின் மூடநம்பிக்கைகளால் அடிமைத்தனங்களால் ஈர்க்கப்பட்டு, பாழும் குழியில் விழுந்து கிடக்கும் மக்களைக் கைப்பிடித்து இழுக்கும் வகையில் சுவைப்படச்சொல்லியிருப்பதும் ஒரு வெகுசனக்கலைவடிவமாக மாற்றுவதில் அடைந்திருக்கும் வெற்றியுமே இப்படத்தின் சிறப்பு.

தமிழில், கடவுள் மறுப்பு, பகுத்தறிவு, சமூகவிடயங்கள் பேசும் நிறைய படங்கள் எடுக்கப்படுகின்றன. ஏற்கெனவே எடுக்கவும்பட்டிருக்கின்றன. இருந்தாலும், அவை 'கலை அனுபவமாக' மாறாமல் வெறும் பிரச்சார சினிமாவாகவே தங்கி விடுவதால் பரந்த மக்கள்கூட்டத்தின் மனதில் தங்காமல், வெற்றியும் அடையாமல் போகின்றன.

இது பெரிய குறைபாடு தான். உண்மையில், ஒரு கருத்து மக்களைச் சென்று சேரவேண்டுமானால், நம் செய்யவேண்டியது அது சார்ந்த கலையனுபவத்தை மக்களுக்கு ஏற்படுத்திக்கொடுப்பது தான். இதுவே ஒரு திரை இயக்குநனின் கடமை என்று நினைக்கிறேன்.
'மெட்ராஸ்' திரைப்படத்தின் வெற்றிக்கு, முதன்மையான காரணம் இதுவே.

நம்மிடம் இன்னொரு குறைபாடு, சமூகப்பிரச்சனை சார்ந்த படத்தை முன்வைத்தாலே, அது கலைவடிவம் இல்லை, அது ஓர் அரசியல் படம் என்று முற்றும் முழுதுமாகவே முகத்தில் அடித்தாற்போல் நிராகரித்துவிடுவது. இந்த இரண்டு முன்முடிவுகளையும் மாற்றிக்கொண்டால், நம் சினிமாவின் பயணமும் வேகமேடுத்ததாக வெற்றிபெற்றதாக இருக்கும்.

இன்னும் இன்னும், நாம் கொள்ளைப்படங்கள், கொலைப்படங்கள், கடத்தல் படங்கள், த்ரில்லர் படங்கள் எடுத்து இதுவே நம் மக்கள் விரும்புவது என்று நம்புகிறோம். உண்மையில், பிகே - வுக்கு அடுத்த நிலைப்படங்களை நம் இயக்குநர்களால் எடுக்க முடியும். ஆனால், நம் தேர்வு அவையாக இல்லை.

பிகே - படம், அது சொல்லிய விடயத்தில் தமிழ்ப்பார்வையாளர்களைப் பொறுத்தவரை அதன் தொடக்கநிலையிலேயே இருப்பதாக நம்புகிறேன். வாழ்வு மூலமாகவும் சிந்தனை மூலமாகவும் நாம் எப்பொழுதோ அந்தத் தொடக்கநிலைகளைக் கடந்துவந்துவிட்டோம். ஆனால், அதைக் கலையாக்கும் அரும்பணியில் ஈடுபடாமல் பின்தங்கியுள்ளோம் என்பதே நாம் உணரவேண்டியது.

குட்டி ரேவதி

1 கருத்து:

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

தெளிவான விளக்கம்...
நாம் இன்னும் பின்தங்கியுள்ளோம்..