இந்திய அரசியல் சாசனம் ஏற்கப்பட்டு 66 வருடங்களாகின்றன.
என்றாலும் நாம் அம்பேத்கரின் விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை நோக்கிக் கொஞ்சமும் நெருங்கவில்லை.
நாட்டுப்பற்று, ஒருமைப்பாட்டினால் உருவாவது. ஒருமைப்பாடு உருவாக, மனிதரிடையே ஏற்றத்தாழ்வுகள் அகலவேண்டும். ஏற்றத்தாழ்வுகள், மதம், சாதி, பால் என அதிகார வேறுபாடுகளைக் கட்டாயப்படுத்தும் அமைப்புகளிலிருந்து உருவாகின்றன.
ஏற்றத்தாழ்வுகள் அகல, விடுதலை + சமத்துவம் + சகோதரத்துவம் நிறைந்த உணர்வுகள் குடிமக்களிடையே வலுப்படவேண்டும்.
சென்றவருடம், இந்தியா முழுவதும் தீபாவளியைக் கொண்டாடிக்கொண்டிருக்க, மகாராஷ்ட்ராவில், 'ஜவ்கடே கால்சா' என்ற கிராமத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த 'சஞ்சய் ஜாதவ்' என்பவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். உடல்கள் பல துண்டங்களாக வெட்டப்பட்டு ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள கிணற்றுக்குள் வீசப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
"இச்சம்பவம் குறித்து புகார் வராததால் நாங்கள் விசாரணை நடத்தவில்லை" என்று அங்கிருந்த காவல்துறையினர் கூறினர். இதன் பின்னணியில் அக்கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்கச் சாதியினரின் தொடர்பு இருப்பதாலேயே ஆளும் கட்சியும் காவல்துறையும் மெளனமாக இருந்தது.
இந்தியாவும், ஒட்டுமொத்த இந்தியக் குடிமக்களும் கூட மெளனமாகத்தான் இருந்தோம்.
'"அடிமைகளுக்கும், ஆள்பவர்களுக்கும், சலுகை பெற்ற பிரிவினர்களுக்கும் இடையேயான வேறுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வேறு விதமாகச் சொன்னால் இந்தியாவிலுள்ள ஆதிக்க வகுப்பினர் கடைந்தெடுத்த சமூக விரோதிகளாக இருந்து வருகின்றனர்", என்ற அம்பேத்கரின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.
நாட்டின் குடியரசு, நாட்டுப்பற்று, அம்பேத்கரின் அரசியல் அமைப்பு, விடுதலை + சமத்துவம் + சகோதரத்துவம் இவற்றில் இருந்தெல்லாம் வெகுதூரத்தில் இருக்கிறோம்.
வெற்றுப்பெருமிதத்தை மிகையாக வெளிப்படுத்தி அதைக் குடியரசு தினமென்று கொண்டாடிக்கொள்கிறோம்.
குடியரசு என்றால் கொண்டாட்டம் மட்டுமே அன்று. நாட்டுப்பற்று கொண்டோர், விடுதலை + சமத்துவம் + சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படை நம்பிக்கைகளாகவும் நீதிகளாகவும் கொண்ட அரசியலமைப்பை உறுதிசெய்வது தான்.
கீழே காணும், இரண்டு புகைப்படங்களையும் ஒன்றாகப்பதிவதை நீங்கள் விரும்பமாட்டீர்கள். எனக்கும் தான் இதில் விருப்பமில்லை. என்றாலும், இது தான் குடியரசுக்கும் வாழ்நிலைக்கும் இடையே உள்ள தூரம்.
தூரம் அறியாமல் எப்படி கொண்டாட்டத்திற்குப் போய்ச் சேருவது?
குட்டி ரேவதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக