நம் குரல்

எத்தனை பெட் ரூம்கள் இருந்தாலென்ன!


இரு படுக்கையறைகள், மூன்று படுக்கையறைகள் கொண்ட வீடுகள் விற்பனைக்கு என்று விளம்பரங்கள் எப்பொழுதும் காதுகளில் விழுந்தவண்ணம் இருக்கின்றன.

நவீன சமையலறை, பூஜையறை, ஃபுல்லி ஃபர்னிஷ்டு லிவிங் ரூம், கழிவறை, குளியலறை, சன்னல், கதவு என்று அடுக்கிக்கொண்டே போகிறார்கள்.


எந்த விளம்பரமும், வீட்டில் மூச்சடைக்காது உயிர்வாழ நூலகம் அவசியம் என்று உணர்ந்து நூலக அலமாரியைக் குறிப்பிடுவதே இல்லை.

அப்படியே, மரங்களும் செடிகளும் கொண்ட தோட்டமும் அவசியம் என்று குறிப்பிடுவதில்லை.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது, விசாலமான அகண்ட வெளி. பரந்த வெளியில் குழந்தைகளை விட்டுப்பாருங்கள். அவர்கள் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. உண்மையில் இத்தகைய பரந்த வெளிகளே, குழந்தைகளுக்கு நிறைந்த கற்பனையையும், தயக்கமற்ற படைப்புத்திறனையும் தருகின்றன.

சன்னல் வழியே அறைகளுக்குள் நீளும் மரக்கிளைகள் இல்லாமல், அதன் வழியே அணில்களும் குருவிகளும் வீட்டிற்குள் வந்துபோகாமல், சன்னலில் வந்து காகங்கள் அமர்ந்து காதடைக்கும் இரைச்சலுடன் கரையாமல் வீடென்ன வீடு!

ஆனால், இதையெல்லாம் யாரும் கருத்திற்கொண்டாற்போலில்லை. திரும்பும் திசையெல்லாம் சுவர்முட்டும் அறைகள் கொண்ட வீடுகள், எத்தனை இலட்சத்திற்கென்றாலும் அவை யாருக்குத்தான் வேண்டும்?

வீடுகள் தமக்குள் நுழையும் மனிதர்களுக்குக் காலாதீத உணர்வைத் தானே தரவேண்டும்!

இத்தகைய வீடுகள், மனிதர்களை உயிருடன் புதைக்கும் கல்லறைகள் இல்லையா?


குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: