நம் குரல்

2014 எதை விட்டுச்சென்றது!


எல்லோரும் 2014 - ன் சாதனைகள் என்று எதையெதையோ பட்டியலிடுகிறோம். வாங்கிய விருதுகள், எழுதிய படைப்புகள், வெற்றிகள், தொழில் முன்னேற்றம், வருமானம், வசதிகள் என்ற பட்டியல் உண்மையில் பொருளற்றவையாகவே தோன்றுகிறது.
உண்மையில், தத்துவார்த்தமாகவோ, உலகவாழ்விற்கு முற்றிலும் எதிரான அர்த்தத்திலோ இதை நான் சொல்லவில்லை.
இந்த உலகில் நல்வாழ்வு வாழ, முற்றிலும் அவசியமானது உடல்நலமே. முழுமையான உடல்நலனுக்காக நாம் எந்தெந்த வகையில் அக்கறை எடுத்துக்கொண்டோம், அதில் எந்த அளவிற்கு ஆரோக்கியமானவர்களாக முன்னேறி இருக்கிறோம் என்பது மிகவும் முக்கியமானது.

நல்ல உடல் நலன், நல்ல மனநலனைக்கொடுக்கும். நல்ல மனநலன், மேற்சொன்னவற்றையெல்லாம் கொடுக்கலாம், கொடுக்காமல் போனாலும், அதைப்பெரிதாகப் பாராட்டாமல் சுவைபட வாழ உதவலாம்.
சுற்றியிருக்கும் நண்பர்கள் உடல் நலன் பாதிக்கப்படும்போது, படும் துயர் இன்னொருவரால் பகிர்ந்து கொள்ளக்கூடமுடியாது. அவர்கள் துயருற, நாம் வெறுமனே வேடிக்கை பார்ப்பவர்களாக மட்டுமே இருக்கவேண்டிய நிலை மிகவும் கொடுமையானது. இதுபோல, பல சந்தர்ப்பங்களை இந்த வருடம் நான் கடக்கவேண்டியிருந்தது.
இந்தியா போன்றதொரு நாட்டில், மனித உடல் + தட்பவெப்பநிலை + வாழ்வியலுக்கு ஏற்றாற்போல முன்னோர்கள் வகுத்தளித்த மருத்துவ முறைகளையும் சிந்தனைகளையும் தனிமனித வழக்கங்களையும் நாம் இன்று கார்ப்பரேட், நிறுவன மருத்துவர்களிடம் கையளித்து, மீண்டும் அவர்களிடமிருந்து மருத்துவத்தைப் பிச்சையெடுப்பவர்களாக மாறிவிட்டோம்.
எல்லாவகையான சமூகச்சிந்தனைகளிலும் குறுக்கிட்டு, நாம் அவசரமாக செயல்படுத்தவேண்டியது, நம்மை ஒட்டுமொத்தமாகத் தாக்கும் நவீன நோய்களை வெல்வது தான். போட்டி, பொறாமை, வெற்றிக்கான வெறி, அவசரகதியில் ஓடும் சலிப்பான வாழ்க்கை இவையெல்லாமே உடல்நலனுக்கு எதிரானவைகள். நோய்களை வரவழைப்பவை.
முன்பெல்லாம், பணக்காரர்களின் நோயாக மட்டுமே இருந்த சர்க்கரை நோய், பின் 9% என்று மாறியது. இப்பொழுது, 35% என்று ஆகியிருக்கிறது. இனக்கொல்லி நோய்போல் பரவி வருகிறது. பசுமைப்புரட்சியினால் விளைந்த அரிசியை எதிர்க்கவேண்டும், மறுக்கவேண்டும். மில்லினிய வாழ்வின் அவசரமான வேட்கைகளைத் தவிர்க்க வேண்டும். மருத்துவம் என்ற மனித அறிவை மீண்டும் எல்லோருக்குமான பொதுவுடமையாக்கவேண்டும்.
சென்றவருடம் விட்டுச்சென்ற ஆரோக்கியத்தின் அளவை நாம் உறுதி செய்துகொள்வோம். 2015 ம் ஆண்டு இது குறித்தப் பெரிய சவாலை நம் முன்வைத்திருக்கிறது. நோயற்ற உடலே, சென்ற வருடத்தின் மிச்சம், ரொக்கம், மூலதனம் எல்லாமே.


குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: