நம் குரல்

நட


நடந்த கால்கள் களைக்க
திசை அழியும் எல்லையிது


நட நட என்கின்றன கால்கள்
முள் உறுத்தும் வெளியிலும்

ஒட்டுமுகங்கள் நோக்கியும்
சலிக்காத ஒரு பொழுதும் இது

குளத்தில் கல்லெறிந்த வட்டங்கள்
எட்டும் மட்டும் விரிந்து கரைபோக

சேற்றில் அமிழ்ந்த காலை
எடுத்து வைத்து நகர்ந்திடு

காலைப்பற்றியிழுக்கும் சேறு
எல்லையிடும் வட்டங்கள்

வேர்க்கால்கள் விழுதிடும் முன்
ஊர்சேர ஊர்கின்றன கால்கள்

உள்ளத்தனிமை வெள்ளம் போல்வர
ஆற்றிலும் கால்கள் வீசும் கைகள்

ஊன் இளகி எலும்பு உருக்கும்
நோவையும் தீர்த்து நடந்திடு

கால்களை இயக்கிடு
வேறு கால்கள் உனக்காக நடந்திடா

நடநட என்கின்றன கால்கள்
சூடு கொப்புளிக்கும் பாலையிலும்.

குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: