சித்த மருத்துவப்பட்டப்படிப்பின் நிறைவில் அரைவருட மருத்துவப்பயிற்சிக்காகத் தான் சென்னை வந்தேன். 1999. அதில் ஒரு மாதம், எந்த நவீனமருத்துவமனையிலும் நாங்கள் விரும்பிய பயிற்சியை எடுத்துக்கொள்ளலாம் என்ற வாய்ப்பு. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், பிரசவ வார்டில் பகலும் இரவும் என்ற பயிற்சியை நான் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். சித்தமருத்துவத்திற்கான அரசின் ஆதரவும் நவீனச்சமூகத்தின் புரிதலும் மிகவும் அற்பமானது என்பதால், அப்பொழுது எனக்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் மிகவும் அருமையாகவும் முக்கியமாகவும் கருதினேன். அதன் ஒவ்வொரு அனுபவத்தையும் சேர்த்துக்கொள்ளத் துடித்தேன்.
அரும்பாக்கத்தில் நான் தனியே தங்கியிருந்த வீட்டிலிருந்து, தினமும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை சென்று வரவேண்டும். அன்றைய நாட்கள், முறையற்ற காலஅட்டவணையைக் கொண்டிருந்தன. சென்னை இன்றைய பொழுதுகளை விட மெதுவாகவும் குறைந்த சலனங்களுடனும் நகர்ந்ததாக ஞாபகம்.
பிரசவ வார்டு முழுக்க, எப்பொழுதும் பெண்கள் வலியில் கதறியபடி இருப்பார்கள். அரைகுறை வளர்ச்சியில் தாயின் உடலுக்குள்ளேயே மரித்துப் போன சிசுக்களின் கருவழிப்புப் பணியும் நடக்கும். எப்பொழுதும் நொய்மையும் பதட்டமும் நீடிக்கும் மருத்துவப்பகுதியாக அது இருந்தது. ஒவ்வொரு முறை உடலுறவின் போதும் பெண்ணின் தொடையில் சிகரெட்டுகளால் சூடிட்ட வடுக்களைக் கொண்ட பெண்ணையும், நீண்ட காலம் குழந்தையில்லாமல் கருவுற்ற சிசுவும் கருவழிந்து போனநிலையில் தன் உயிருக்காகப் போராடிய பெண்ணையும், உடலெல்லாம் எலும்புகள் துருத்தி நிற்க வயிறு மட்டும் அளவுக்கதிகமாகப் புடைத்திருக்கும் வறுமை சூழ்ந்த பெண்களையும், பிரசவத்தின் பொழுது மரித்துப் போன பெண்களையும் அங்கு தான் கண்டேன். அதிக வலியில் பெண் கதறி அழும்போதோ, 'புருஷனுடன் படுக்கும்போது இனிச்சிது இல்ல, எப்ப என்ன கத்துற!' என்ற குரல் பின்னாலிருந்து கேட்கும்.
பெண் உடலின் வலிமையையும் அவலத்தையும் ஒருசேர 'பிரசவ வார்டில்' தான் உணரமுடியும். வார்டுக்கு வெளியே, குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் எல்லோரும் தோய்ந்துபோயிருக்க, உள்ளே தாய் வலி குறையும் நிம்மதியுணர்வில் ஆழ்ந்திடத்தொடங்கியிருப்பாள். சமீபத்தில், என் தோழியின் ஏழுமாதக் கருஉடலில் மருத்துவர்கள் ஊனம் கண்டறியக் கருவின் இயக்க நிலையைத் துண்டிக்கவேண்டியிருந்ததாகக் கூறினாள். அது அவளுக்கு மிகுந்த மனப்பேதலிப்பைக் கொடுத்ததாகக் கூறினாள். ஆனால், அது கிட்டத்தட்ட குழந்தையை ஈன்ற மனநிலைக்கே தன்னைக் கூட்டிச்சென்றதாகவும், கொடுமையான கனவுகள் பீடித்த உறக்கம் கொண்டதாகவும் கூறினாள்.
பெண் உடல், ஓர் இயந்திரம். சமூகப்பாத்திரம். தாய்மை, பெண்மை என்றெல்லாம் போற்றப்படும் பெண்ணின் உடல் கருவுறும்போது கொள்ளும் வளர்சிதை மாற்றங்களும், உருச்சிதைவும், சுமக்கும் அவலங்களும் நிறைய. இதில், பெண் வகிக்கும், ஏற்கும் சமூகப்பொறுப்பும், ஆளுமையும் கூட அதிகம். ஆனால், அதுவெல்லாம், கவனத்தில் கொள்ளப்படாது, சமூகத்தின் எல்லா தாழ்வான முறைகேடுகளையும் சுமக்கும் ஒரு பெண்ணாக அழுத்தப்படுவதும் இந்நிலையில் தான்.
குட்டி ரேவதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக