நம் குரல்

நாம் என்ன மாதிரியான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறோம்?


புற்றுநோய் கொண்ட என்னுடைய இரு நண்பர்கள் சந்தித்துக்கொண்டனர். 
இருவருமே நீண்ட நாள் மருத்துவத்திற்குப்பின் தேறி வரும் நிலையில் உள்ளவர்கள். 
ஒரு நண்பரின் நீண்ட நெடிய போராட்டத்தை நான் ஏற்கெனவே கண்ணுற்றிருக்கிறேன். 

இருவரும் அவரவர் அனுபவங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டதுடன், தங்களின் தீவிர மன உறுதியையும் வெளிப்படுத்திக்கொண்டனர்.

அப்படி அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்பொழுது, அவர்கள் இருவரும் இந்த உலகத்திலிருந்தே மிகவும் அன்னியப்பட்டு இருப்பது போலவும், தாளமுடியாத வலியையும் நோவையும் தன்னந்தனியே தாங்கிவந்த அயர்ச்சிக்குப் பின், உறுப்புகளின் சிதைவுக்குப் பின், கடுமையான உடல் மெலிவுக்குப் பின் தன்னையொத்த வலி கடந்த ஒருவரைக் கண்டு ஆறுதல் கூறி இளைப்பாறுவது போலவும் இருந்தது.
புற்றுநோய்க்கான நவீன மருத்துவமுறை கடுமையான வலியையும் தொடர் மருத்துவமுறையையும் கொண்டதால், அது அவர்களை அன்றாட வாழ்விலிருந்தும், 
நாம் பேசி, மகிழ்ந்து, சலித்துக்கொண்டிருக்கும் அபத்தங்களிலிருந்தும் வெகுதூரத்தில் நிறுத்தியிருந்தது.

அவர்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்ட அன்பும் அக்கறையும் மிகவும் அரியது, நெகிழ்ச்சியைக் கொடுப்பது. 
நாம் கடந்து கொண்டிருக்கும் ஒட்டுமொத்தக் காலகட்டத்தின் தன்மையையும், குறிப்பாய்ச் சொல்லும் புகைப்படம் போல அந்த நிகழ்வு அப்படியே மனதில் பதிந்தது.

இதுவே, இன்றைய காலத்தின் யதார்த்த முகம் என்றும் தோன்றுகிறது. நாம் என்ன மாதிரியான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறோம் என்பதை அக்கம்பக்கம் திரும்பிப்பார்த்து உணரவேண்டியதும் உள்ளது.


குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: