நம் குரல்

'உன்னத இலக்கியம்' என்று ஏமாற்றிய அந்தக்காலம் மலையேறிப் போனது!


முன்பெல்லாம், ஒரு கவிதை அனுப்பிவிட்டு, அது இதழில் இடம்பெறும் ஆச்சரியத்திற்காகக் காத்திருக்கவேண்டும்.

ஒரு குறிப்பிட்ட நூலைத் தேடி, நூலகம் நூலகமாக அலையவேண்டியிருக்கும். இல்லை, அந்த நூலைப் பாதுகாத்து வைத்திருக்கும் நண்பரைத் தேடிச்சென்று அவரிடம் அந்த நூலைக் கடன் கேட்டு வாங்க வேண்டியிருக்கும். நூலை, நகல் எடுக்கலாம். அல்லது, சொந்தக்கையெழுத்தில் பிரதி எடுத்துக் கொள்ளலாம்.


பதிப்பாளர்களும் உடனே கிடைக்கமாட்டார்கள். ஒரு நூல் வரத்திற்காக, ஆறு மாதம் முதல் ஒரு வருட காலம் வரை காத்திருந்து நூலைப்பதிப்பில் பார்க்கவேண்டியிருக்கும்.

அந்தப் பொறுமையில், காத்திருத்தலில் அந்தக்காலத்திற்கான நியாயங்களும் இருந்தன.

ஆனால், இன்று வரை எந்த எழுத்தாளரின் படைப்பும் முன்னூறிலிருந்து ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாவதில்லை.

இதற்கும் அதிகமாய் விற்பனையாக, அந்த எழுத்தாளர் நிறைய சர்க்கஸ் வேலைகள் செய்யவேண்டியிருக்கிறது. பொதுஅரங்கில், தன்னுடைய கோமாளித்தனங்களைக் காட்சிப்படுத்தவேண்டியிருக்கிறது.

எல்லாவற்றையும் வேகவேகமாக நிகழ்த்திவிடும் அவசரகதிக்கு ஆட்பட்ட இலக்கியப்பழக்கத்திற்கு வந்துவிட்டனர் என்று தோன்றுகிறது
சிற்றிதழ் மரபின் தொடர்ச்சியாகவே எல்லாமும் சிந்திக்கப்பட்டு, படைப்பின் நேர்மை என்பதும் பார்க்கப்பட்டிருந்த நவீன இலக்கியச்சூழலில் இருந்த எல்லாம் இன்று காணாமல் போனது.

நூல் விற்கும் எண்ணிக்கைக்கும், எழுத்தின் தாக்கத்திற்கும் எந்தத்தொடர்பும் இல்லை. பொதுமக்கள் ஒரு நுகர்வாளராக மட்டுமே இன்று இல்லை. பங்கேற்பாளராகவும், பயன்பாட்டாளராகவும் மாறியுள்ளனர். சமூகத்துடன் நேரடியாகக் குறுக்கிடாத படைப்பைக் கேள்வி எழுப்பும் அறிவுப்புலத்தைக் கொண்டிருக்கின்றனர்.

எழுத்து என்பதும் இலக்கியம் என்பதும் 'தூய்மை மற்றும் புனிதம் மற்றும் உன்னதம்' என்பதான வரையறைகளுக்குள் இயங்கியது போய், பொதுத்தளத்தில் வேகமாக இயங்கத் தொடங்கியிருப்பதைப் பார்க்கிறோம்.
கலைஞன், இலக்கியவாதி, சிற்றிதழ் இவற்றிற்கான கருதுகோள்கள் எல்லாம் மாறிவிட்டன.

புத்தகத்திருவிழாவைப் பயன்படுத்தி, முந்தைய கருதுகோள்களுக்குக் கட்டுப்பட்டு இயங்கியவர்களாகக் காட்டிக்கொண்டவர்கள் கூட, சமீப காலங்களில் தங்கள் போக்கை மாற்றிக்கொண்டுள்ளனர்.

ஆனால், மேலை நாட்டு இலக்கியங்களின் உன்னதத்தைக் காட்டி, தாங்களும் உன்னத இலக்கியங்கள் படைப்பவர்கள் என்று தங்களுக்குத்தாங்களே பறைசாற்றிக்கொண்ட பிதாமகர்கள் கூட அம்பலமாகியிருக்கின்றனர்.

ஒடுக்குமுறை இலக்கியமும், அடிமை கருத்து இலக்கியமும் உன்னதஇலக்கியம் இல்லை என்பதை யாரும் கைகாட்டாமலேயே, விமர்சர்கள் தேவையில்லாமலேயே இன்று வாசகர்கள் உணர்ந்துள்ளனர்.
எழுத்து, வேறு திசை நோக்கி நடக்கவேண்டும். எந்தத்திசை என்பதைத் தீர்மானிப்பதில் இப்புத்தகத்திருவிழா, மாற்றுக்கருத்து இல்லாமல் ஒரு பண்பாட்டுக்கருவி என்பதை நாம் கூர்மையாக அறிந்துணரும் வாய்ப்பு.

நல்வாய்ப்பாக, புத்தகத்திருவிழா மீண்டும் நிகழ்கிறது. தொடர்ந்தும் நிகழ்கிறது. எழுத்தை உரசிப்பார்க்கவும், படைப்பாளிகளின் பக்குவம் நோக்கவும் உதவியாக இருக்கிறது.


குட்டி ரேவதி

2 கருத்துகள்:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

தாங்கள் படைப்பதுதான் உன்னத இலக்கியம் என்று பல முன்னணி எழுத்தாளர்கள் வாதாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதிவிட்டு விலையும் அதிகம் வைத்து விட்டு வாசிப்பவர்கள் குறைந்துவிட்டனர் என்று புலம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் எழுத்தாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. ஆளுகொரு பதிப்பகம் வைத்திருக்கிறார்கள். இதைத்தான் புத்தகக் கண்காட்சி உணர்த்துகிறது

ஆரூர் பாஸ்கர் சொன்னது…

உள்ளத்தில் ஊற்றேடுப்பது கவிதை என்ற நிலை
மாறி, காயை கனிய வைக்கும் முயற்சி தொடங்கிய
போதே ஒரு நல்ல கவிதை கொல்லப்படுகிறது. என்பது
என் தாழ்மையான கருத்து.