நம் குரல்

இனி வரும் நம் நாட்களை மரணதண்டனை ஒழிப்பு நாட்களாய் அறிவிப்போம்!







நண்பர்களே, முன்னெப்போதினும் இப்பொழுது தான் மரண தண்டனையை ஒழிப்பதற்கான அவசியமும் அவசரமும் தேவைப்படுகிறது.


ஏனெனில், ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை அழித்தொழிப்பதற்காக ஆதிக்க சமூகத்தினால் நீதி என்னும் பெயரில் வடிவமைக்கப்பட்ட தண்டனை முறையே 'மரணதண்டனை'.


நம்மீதான இந்த ஆதிக்கத்தை நிறுத்துவதற்கு நம் எதிர்ச்சமூகமாகிய பார்ப்பனீய, ஆதிக்க சக்தியினரைத் தான் எதிர்த்துப் போராடவேண்டியிருக்கிறது என்றில்லை. நம்மக்களே இதன் விபரீதங்களையும், முறைகேடுகளையும் அறியாத நிலையில் இருக்கின்றனர். 'மரண தண்டனை'யை ஆதரிக்கின்றனர்.


'மரண தண்டனைக்கு'ப் பின் இருக்கும் ஆதிக்க அரசியல், நீடிக்கும் ஒடுக்குமுறை, நம்மக்களின் அறியாமை அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நாம் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. 


நாம் எங்கெங்கு இருந்து என்னென்ன செய்து கொண்டிருக்கிறோமோ அதன் ஒரு பகுதியாக, 'மரண தண்டனை' ஒழிப்புக்கான போரை நிகழ்த்துவோம்.


ஒவ்வொரு நாளும் அதை அழித்தொழிப்பதற்கான பாதை நோக்கி நகர்ந்து கொண்டே இருப்போம்.


நம் சமூகத்தில் நிறைய தமிழ் அறிஞர்கள், பகுத்தறிவாளர்கள்  இது பற்றிய ஆழமான உரையாற்றுவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். மக்களுக்கு விழிப்புணர்வூட்டவும், இக்குற்ற ஒழிப்புக்கு ஆதரவாக மக்கள் எல்லோரும் ஒரு பெருஞ்சக்தியாகத் திரள்வதற்கும் அவ்வறிஞர்களைப் பயன்படுத்துவோம். 


குறிப்பாக, விடுதலை ராசேந்திரன், இத்தண்டனை முறை எப்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கும் தமிழர்களுக்கும் எதிரானது என்று வரலாற்றுப்பூர்வமாகவும் அறிவுப்பூர்வமாகவும் பேசுவதில் வல்லவர். 


நமக்குள்ளேயே அரங்கக்கூட்டங்கள் என்றில்லாமல் பொதுமக்களுக்கு எட்டும் வண்ணம் தெருமுனைக்கூட்டங்கள், பொதுவெளிக் கூட்டங்கள் நடத்துவோம்.


ஒரே சமயத்தில் பல வடிவங்களில் இப்போராட்டத்தை இயக்கமாக்கினால் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் ஒருமித்த நிர்ப்பந்தத்தை நாம் கொடுக்கமுடியும். மக்களின் ஒருமித்த ஆற்றலால் தான் அது சாத்தியம்.


ஒரே கணத்தில் நம் விழிப்புணர்வும் இயக்கமும் காட்டுத்தீ போல இயங்கினால் தான் இக்காட்டுமிராண்டித்தண்டனையும் குற்றமுறையையும் அழித்தொழிக்கமுடியும்.


நம் பகுத்தறிவு வெளிச்சம் பெறட்டும். 


நம் எழுதுகோல், எழுத்து, ஓவியம், நூல், பாடல், இசை, அக்கறை, கனவு, இலட்சியம், நம்பிக்கை எல்லாமும் மரண தண்டனை ஒழிப்பாகட்டும்.


'மரண தண்டனை ஒழிப்பு' கவனக்குவிப்பு சிற்றதழ்கள், இலக்கியங்கள், செய்வோம். திரையிடல்கள் நிகழ்த்துவோம்.

நம் கலை, பண்பாட்டை அது குறித்த சிந்தனையாக புணரமைப்போம்.

சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்களை அவரவர் கைபலத்துக்கு எட்டிய மட்டில் பரவலாக்குவோம்.


நான் அறிந்த நண்பர் ஒருவர் இது பற்றிய ஆவணப்படம் ஒன்றை எடுத்துள்ளார். விரைவில் அது பொதுத்திரையிடலுக்கு வருகிறது.


இன்னொரு பாடலாசிரியர் அருமையான விழிப்புணர்வுப் பாடல் ஒன்றை எழுதியுள்ளார். விரைவில் அதுவும் வெளியிடப்படும்.


இன்னொரு நண்பர் முழு நீள திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கான திரைக்கதையுடன் களம் புகுந்திருக்கிறார்.


நண்பர்களே, நாம் என்ன செய்யப்போகிறோம்?


குட்டி ரேவதி





கருத்துகள் இல்லை: