ஆண்கள் தாலி அணிய நேர்ந்தால் இது மாதிரியான விவாதப் பொருளாக ஆகியிருக்காது என்று நம்புகிறேன். 'தாலி' என்பது 2013 - ல் எவ்வளவு பெரிய வேடிக்கை என்பது எல்லோரும் அறிந்ததே.
என்றாலும், திருமணம் என்று வரும் போது தாலி கட்டாமல் கல்யாணம் செய்வதோ அல்லது, சாதி பாராமல் திருமணம் செய்து கொள்வதோ இன்றும் பரவலாக இல்லை. இன்னும் சொல்லப்போனால், முற்போக்குக் கருத்துகளை உதிர்க்கும் ஆண்களுக்குக் கூட அவரவர் திருமணத்தின் போது, இது பெருத்த குழப்பமாக இருப்பதைப் பல பார்த்திருக்கிறேன்.
ஆண்கள் 'முற்போக்கு'க் கருத்துகளைப் பேசும் அளவுக்குத் தம் வாழ்க்கையில் அதை நிலைநிறுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதே நான் காண்பது. ஏனெனில், அது உடன் வாழும் பெண்ணின் சமத்துவத்தையும் அதிகாரத்தையும் விடுதலையையும் உள்ளடக்கியது என்பதால். ஆண்களின் 'முற்போக்கு'க்கருத்துக்கள், 'பெண்நிலை' அற்றவையே பெரும்பாலும்!
பெண் - ஆண் பாலுறவு வைத்துக்கொண்டாலே திருமணம் நடந்ததாகத்தான் அர்த்தம் என்ற இன்றைய தீர்ப்பு கூட பல வகைகளில் பெண்ணுக்குச் சாதகமானதே. இருப்பினும், இம்மாதிரியான சட்டங்களும், தீர்ப்புகளும் நடைமுறை என்று வரும் போது உலர்ந்து ஆவியாகிவிடுவதை பல வழக்குகளில் காண முடிகிறது. 'பெண் சொத்துரிமை' என்பது இன்னும் எட்டாக்கனியாகவே இருப்பது போல.
இன்னும் ஒரு விஷயத்தையும் குறிப்பிடவேண்டும். 'தாலி' என்பது இந்து மதத்தின், அதன் நிறுவன வடிவமான சாதிப்பிரிவுகளின் குறியீடாகவே இன்றும் நடைமுறையில் உள்ளது. ஆகவே, மேலே குறிப்பிட்ட தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால், இந்து மதத்தின் அடிமை முறைகளிலிருந்து பெண் விடுதலை அடைய முதன்மையான வழியாக இருக்கும்.
என்றாலும், ஆண்கள் தாலி அணியும் முறையை இது போன்ற ஏதேனும் தீர்ப்புகள் கொண்டு வரின் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். திருமணம் ஆன ஆண் என்பதன் அடையாளமாய், அவர்கள் கழுத்தில் தாலி தொங்குவதே சமூகத்தின் முற்போக்காக இருக்கமுடியும். பெண் தாலியால் பெண்களுக்குக் கிடைக்காத சமூக உரிமைகள், ஆண் தாலியால் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஏன், முற்போக்கு ஆண்கள் இதற்கு முன்வரக்கூடாது? ஏதேனும் ஒரு வகையிலேனும், ஆண்கள் 'அடிமைத்தளையை' உணரும் போது தான் விடுதலையின் முழுமையான பொருளை உணரமுடியும், இல்லையா? பெண்களின் விடுதலை அவர்கள் பற்கடிக்கு உள்ளாவதைக் காணச்சகிக்கவில்லை!
குட்டி ரேவதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக