நம் குரல்

ஆனந்தவிகடன் பத்திரிகைக்கு என் கண்டனம்!








இயக்குநர் மணிவண்ணனைப் பற்றிய இயக்குநர் பாரதிராஜாவின் பதிவு கடந்த வாரம் ஆனந்தவிகடனில் வெளியாகியிருந்தது எல்லோரும் அறிந்ததே. 'ஆனந்தவிகடன்' பத்திரிகை அதை அப்படியே வெளியிட்டிருக்கவேண்டாம் என்பது என் கருத்து!

இயக்குநர் பாரதிராஜா அப்படிச் சொல்லியிருப்பது உரையாடலுக்கும் விவாதத்திற்கும் உட்பட்டது என்றாலும், பத்திரிகைகள் இதுமாதிரியாக ஒரு மனிதர் பிறரைப் பற்றிச் சொல்லும் அவதூறுகளை வெளியிட்டுத் தம்முடைய வணிகச்சந்தையை நிலைநிறுத்திக் கொள்ள முயல்வது ஒரு சமூகக் குற்றமே.

இதை ஒது தனிமனிதரின் கருத்துச் சுதந்திரம் என்றோ, பத்திரிகைகளின் உரிமை என்றோ சொல்லமுடியாது. இது ஒன்றும் கருத்தும் இல்லை. உரிமையும் இல்லை. ஒரு பதிவின் விபரீதங்கள் அறியாத குருட்டுச் செயல்பாடு தான்.  சமீப காலங்களில், தமிழ் உரையாடல்கள் எல்லாம் பிற மனிதர்களைப் பற்றிய அவதூறுகளாலேயே நிறைந்திருக்கின்றன. அது போன்ற ஒன்று தான், இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் மணிவண்ணனைப் பற்றிச் சொல்லியிருப்பதும், அதைப் பதிவுசெய்திருப்பதும். இப்படியான இரு ஆளுமைகளின்  உறவு விரிசலைக் கொண்டாடும் மனநிலை, சமூகத்திற்கு ஆரோக்கியமானது அன்று.

நம் பண்பாட்டை மெல்ல மெல்ல அவதூறுகளின் பண்பாடாக்கிக் கொண்டிருக்கிறோம். இரு சகோதர்கள் சண்டையிட்டுக் கொள்வதைப் பார்த்து ரசிக்கும் மனம் மேலோங்கி நிற்கிறது.  இத்தகைய வன்மம் எல்லோருக்குள்ளும் பாம்பின் படம் போல் தலைதூக்கி நிற்கிறது. அது மட்டுமன்று. சமூகத்தில் பொது மனிதராய் இயங்கிக் கொண்டிருக்கும் பலரின் சமூகச்செயல்பாடுகளை மறுப்பதற்கு அவருடைய சொந்தவிஷயங்களைத் தனிமனிதப் பார்வையில் அள்ளிவீசி அவரை முடக்க நினைக்கின்றனர். 

சமூகத்தின் மையத்தளத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் 'ஆனந்தவிகடன்' இது போன்ற பதிவுகளைத் தவிர்க்கும் படிக் கேட்டுக் கொள்கிறேன். பத்திரிகையின் தர்மத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது, ஆனந்தவிகடனில் வெளியாகியிருக்கும் அவதூறு! 







குட்டி ரேவதி

1 கருத்து:

maruthapaandiyan சொன்னது…

பாரதி ராஜாவின் எந்த கருத்தையும் வெளியிடாமல் இருப்பதே எல்லோருக்கும் நல்லது. எந்த ஒரு கருத்தையும் போகிற போக்கில் வாரி இறைக்கும் கலைஞர் அவர். எளிதில் உணர்ச்சி வசப்பட்டு எதையாவது பேசிவிடும் மனப்பாங்கு கொண்டவர்... ஆனந்த விகடன் அந்த கருத்து வாந்தியை அப்படியே வெளியிட்டிருக்க வேண்டாம் என்பதே பெரும்பாலானவரின் கருத்தும்....

தமிழன்புடன் - மருதபாண்டியன் -