'அபாய கிரகம்' என்ற பெயரில் வெளியாகியிருக்கும் 'ஆஃப்டர் எர்த்' படம் பார்த்தேன். நாம் வாழும், இந்தப் பூமி ஆயிரம் வருடங்களுக்குப் பின் 'அபாயகிரகம்' என்று சித்திரிக்கப்படும் ஓர் அறிவியல் புனைகதை.
நண்பர் ஒருவர் 'குட்டிப்புலி' பார்த்துவிட்டு, அதில் இடம்பெற்றிருக்கும் ஒரு காட்சியைக் குறிப்பிட்டு கண்டிப்பாய், அந்தப்படத்திற்குக் குழந்தைகளை அழைத்துச்செல்லவேண்டாம் என்று எல்லோரிடமும் அறிவுறுத்திக் கொண்டே இருந்தார். பெரும்பாலான நேரங்களில், நான் பெரியவர்கள் மட்டுமே (அடல்ஸ் ஒன்லி) பார்க்கக் கூடிய படங்களைப் பார்க்க விரும்புவதில்லை. குழந்தைகளால் பார்க்கமுடியும் படங்களைப் பார்த்தாலே போதும் என்று தோன்றுகிறது. குழந்தைகளை அழைத்துச் சென்று காட்டவேண்டிய படம், 'அபாய கிரகம்'.
வசூலில் மிகப்பெரிய சரிவு என்றும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட திரைக்கதையாகவும் எதிர்கொள்ளப்பட்ட, 'ஆஃப்டர் எர்த்' - ஐ, தோல்வியின் கண்களால் மட்டுமே பார்க்கமுடியவில்லை. 'பயம்' என்பதை ஓர் அசாதாரண உயிரியாகச் சித்திரித்ததுடன் மட்டுமல்லாமல், அது ஒரு கண்மூடித்தனமான உணர்வு என்ற நிலையிலும் தத்துவார்த்தமான நிலையில் அணுகப்பட்ட திரைக்கதை. ஒரு பெரிய கேள்விக்கு, நேரடியான ஒற்றை பதில். அவ்வளவே படம். வில் ஸ்மித்தும் அவருடைய மகன் ஜேடன் ஸ்மித்தும் நடித்திருக்கின்றனர்.
பயம், வலி, மரணம் போன்றவை மானிட இனத்திற்கு காலந்தோறும் எழும்பி நிற்கும் கேள்விகள் என்றாலும், மானுட பரிணாம வளர்ச்சிக்கு ஏற்றவகையில் விடை காணும் வித்தையில் தேர்ந்தவர் 'புத்தர்'. பெரும்பாலும், கீழைத்தேய நாடுகளின் சிந்தனை, இவற்றின் தோற்றவாயை ஆராய்ந்தவிடத்து, மேலைத்தேய சிந்தனைகள், இந்த உணர்வுகளை வெல்லும் வழிகளை ஆராய்ந்து கொண்டிருக்கும்.
'குட்டிப்புலி' பார்க்காமல் நான் ஏதும் விமர்சிக்க முடியாது என்றாலும், ஓர் இனப்படுகொலையைச் சந்தித்த நமக்கு இனி வன்முறையை ஒரு காலும் கருணையிலிருந்து பிரித்துப் பார்க்கமுடியாத மரத்துப் போன இதயம் வாய்த்துவிட்டதோ என்று தோன்றுகிறது. 'காட்சிப் படிமங்கள்' ஏற்படுத்தும் தாக்கத்திலிருந்து விடுபடமுடியாத பரிணாம வளர்ச்சியின் கட்டத்தை நாம் எய்தி விட்டோம் என்பது எவ்வளவு பெரிய அபாயகரமான எச்சரிக்கை!
குட்டி ரேவதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக