நம் குரல்

இன்றைய கவிஞன் பற்றி…!







1. மிதித்து ஏறி வந்த படிகளால் கால் வலிக்கின்றன என்ற அளவுக்கு நான் படித்து எழுதிய கவிஞர்கள் இன்று எனக்கு கவிஞராகத் தெரியவில்லை என்று நரைத்த மீசை முறுக்குகிறான்  மூத்த கவி.


2. இன்னும் பின் காலனிய வெளியிலிருந்து சிந்தனைச் சிறகை விரிக்க முடியாத அளவிற்கு இரும்புக்கிராதிகளுக்கு இடையே வைக்கப்பட்ட உடலுடன் வாழ்கிறான் நடுவயது கவி.


3. இளைய கவி, தன் சிந்தனை உடல் எழுச்சி சோடா போல் எம்பி எம்பி வார்த்தைக் குமிழ்களை அனுப்பிக் கொண்டே இருக்க, கவிதை எதுவென தெரியாத பதட்டம் வெளிக்காட்டாமல் ஒரு தொகுப்பை மேடையில் வெளியிட்டுக் கைதட்டல் கேட்டுக் கொண்டான்.


4. இன்னொரு உடலைப் படைக்கும் முன், எரிந்து போன உடல் சுமந்து சாம்பல் உதிரும் காளியென பெண் கவி.


5. சக்கை சக்கையாகத் துப்பித்தீர்க்கும் மூர்க்கமுடன் எச்சிலைப் படையலாக்கி அழிகின்றான் நவீனக்கவிஞன்.


6. 'செம', 'அட்டகாசம்', 'பல்பு கொடுத்திருக்காரு' இன்னபிற சொலவடைகளுடன் மேடையில் கவிவிமர்சகர்கள் சவ்வுமிட்டாய்க் கவிதைகளைச் சொப்புகொட்டுகின்றனர்.


7. உடலை மலவாடையிலிருந்து இழுத்துவரும் காலம் நோக்கிய சாதி மறுப்பாளன், கவிதைகளில் கோபத்தை நிறைத்துவைக்கிறான், கோபமும் சொரணையுமற்ற மற்ற மலவாடைக் கவிஞர்கள் முன்.


8. நான்கைந்து வரிகளுக்குள் திருகிய தன் புத்தியை திரியாக்கி வெளிச்சம் காட்டுகிறான் அரசியல் கவிஞன்.



8. கொம்பு சீவுதலே கலையென தினந்தோறும் கத்தியுடன் வித்தைப் பழகி அதைக் கவிதை என்கிறேன் நானும் ஒரு கவியென.





குட்டி ரேவதி

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசிக்கும் மனதைப் பொறுத்தது தான் எல்லாமே... நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

maruthapaandiyan சொன்னது…

கவிதை என்று பெயர் கொண்டு எதையம் எழுதி விடலாம் ... கை தட்டல் வாங்கி விடலாம்... சிலர் பொற்கிழியும் வாங்கலாம்.. உன் கவிதை ஆயுதமாக நீ கொடுத்த விலையும், நீ இழந்த நிம்மதியும் உன்னை நன்கு அறிந்தோர் அறிவோம்.... கவலை விடு தோழி! ஒரு விதை தன்னை இழந்து ஒரு மரத்தைப் படைக்கும்.. ஒரு மரம் அழிவதற்குள் ஆயிரம் விதை படைக்கும்.... உன் கோபமும் வேகமும் பெண்களையே மிரட்டுகிறது... உன் கவிதை படைத்தெடுத்த இந்தக் கலைஞனைப் பார் தோழி... நீ உருவாக்கிய ஒரு விதை தான் - நான் . இன்னும் ஆயிரம் விதைகள் காற்றில் பறந்து கொண்டிருக்கின்றன .. நிலம் தேடி !

தமிழன்புடன் - மருதபாண்டியன் -