ஒரு முறை 'சங்கம் ஹவுஸ்' என்ற அமைப்பின் கூட்டுறவினால் தரங்கம்பாடியில் இரண்டு வாரங்கள் தங்கி எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அச்சு இயந்திரத்தின் 300 வருட நிறைவைக் கொண்டாடும் முகமாக இந்த எழுத்து உறைவிட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஐந்து இந்திய எழுத்தாளர்களும் டென்மார்க்கிலிருந்து வந்திருந்த ஐந்து எழுத்தாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.
ஒரு நாவலுக்கான முனைப்பு தீவிரமாக இருந்த நேரம். மனதின் அடித்தளத்தில் அதற்கான நீரோட்டங்கள் பாய்ந்து கொண்டிருந்தன. எழுதுவதற்கான தனிமையும், காலமும் வாய்க்காமலிருந்த பொழுது, 'தரங்கம்பாடி' நாட்கள் மிகவும் முக்கியமாகப்பட்டன. பெண்களின் வெவ்வேறு போராட்ட வெளிகளும் அதை அவர்கள் தனி மனித அளவில் வெளியேறி வரும் திறமும் அளவிட முடியாத அளவிற்கு பெண்களிடம் நிறைந்திருப்பதைப் பதிவு செய்யவேண்டும் என்ற எண்ணம் என்னிடம் மேலோங்கியிருந்தது. அப்பொழுது உருவானது தான், 'காயாம்பூ' நாவல். நவீனம் என்று அடையாளப்படுத்தப்படும் எல்லா வாய்ப்புகளையும் தொட்டுவிட்ட ஒரு பெண்ணும், மலை மற்றும் மரபு சார்ந்த நம்பிக்கைகளைத் திடமாகத் தன் உடல் வழியாக உள்வாங்கிய பெண்ணும் சந்தித்துக் கொள்ளும் தருணங்களையும் நிலக்காட்சிகளையும், எண்ணப் பகிர்தலையும் பதிவு செய்தேன். நாவல் நூற்றி இருபது பக்கங்களுக்கு விரியத் தொடங்கியது.
'காயாம்பூ' எனும் புனைவை, எழுதி முடிக்கும் போது முத்தாய்ப்பாக மனதில் தோன்றியவை இவை தாம். புனைவு என்பது கற்பனையின் எல்லையின்மையையும் அதன் சாத்தியங்களையும் கண்டறிவது. பெண்களைப் பொறுத்தவரை கற்பனை என்பது படைப்பாற்றலின் வெளிப்பாடு. பெண்களாய் இருப்பதாலேயே சமூகத்தின் எந்தத் தருணத்திலும் சலுகை என்றோ ஆதரவு என்றோ ஒரு துளி கூட வாய்ப்பது இல்லை. தீவிரமான எதிர்ப்பையும், அதிகப்படியான போராட்ட வலுவையும் காட்டியே எந்த ஒரு பெண்ணும் ஒரு சிறிய உரிமையைக்கூடப் பெறமுடிகிறது. என்னளவில் நான் இது வரை சந்தித்த ஆளுமை நிறைந்த நிறைய பெண்களை நினைவூட்டிக் கொள்ளும் வாய்ப்பாகவும் இருந்தது இந்தப்பயணம்.
நாம் நிறைய நாவல் ஆளுமைகளைக் கண்டுவிட்டோம். கதை சொல்லல், அசாதாரண குணச்சித்திரிப்பு, மொழியில் நவீனம் என நாவலின் வழியாக நம் கற்பனை வெளியை விரிக்கும் ஆற்றல் கொண்டவர்களை எல்லாம் பரவலாகக் கண்டு விட்ட நிலையில் தற்காலத்தன்மையை எவ்விதம் கருப்பொருளாக்குவது என்பது பெரிய கேள்வியாகவே இருந்தது. சிந்தனையின் விடுதலையில் சமரசங்கள் அற்ற பெண் மனம் தான் இந்நேரத்தில் சமூகத்திற்கான தேவையாக இருக்கும். அது தான் பெண், ஆண் இருபாலாருக்கும் சிந்தனை ஊட்டமளிக்கக் கூடியது.
'காயாம்பூ' நாவலின் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும், டேனிஷ் மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டு தற்பொழுது அச்சிற்குச் செல்கிறது. நாவலை தமிழுக்குக் கொண்டு வரும் எந்த முயற்சியும் எடுக்கமுடியாமல் 'மரியான்' திரைப்படப் பணி தொடர்ந்து கொண்டிருந்தது. இந்த வாரத்துடன், 'மரியான்' திரைப்பணி நிறைவுறுவதால் நாவலை வெளியிடும் முயற்சி இனி சாத்தியமாகிவிடும் என்று நினைக்கிறேன்.
குட்டி ரேவதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக