நம் குரல்

'அவன் காட்டை வென்றான்'ஒரு சிறிய பயணத்தில்  'அவன் காட்டை வென்றான்' நாவலை  மீண்டும்  ஒரு முறை வாசித்து முடித்தேன். கேசவரெட்டியின் நூல். தெலுங்கு மொழியில் எழுதப்பட்டு தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டது.

இந்திய இலக்கியப்பரப்பிலும் சுற்றுச்சூழலியல் பரப்பிலும் காட்டின் நிலப்பரப்பை விரிவாக எழுதிச்சென்ற நாவல்கள் பல. ஆனால், இது பலவகையில் தனித்து நிற்கிறது.

நிறைமாத பன்றி ஒன்று தன் பிரசவத்திற்காக, காட்டிற்குள் ஒதுங்கிவிட காணாமல் போன அதைத் தேடிச்சென்று காட்டில் அதைக் குட்டிகளுடன் கண்டறியும் கிழவரின் கதை.

காடு என்பது விஞ்ஞானப்பூர்வமான நிலக்காட்சி. மனிதனுக்கு வேண்டுமானால், அங்கே எது நடந்தாலும் தற்செயலான ஒன்றாக நடப்பதாகத் தோன்றலாம். ஆனால், இந்தக்கிழவனின் காட்டில், ஒரு சிட்டுக்குருவி இடையறாமல் கத்துவதும், பன்றி பிரசவத்திற்காக ஒரு புதருக்குள் ஒதுங்குவதும், வாசனையை முகர்ந்து கூட்டங்கூட்டமாகத் தேடிவரும் நரிகளும், குட்டிகளைக் காப்பாற்ற அவற்றுடன் தாய்ப்பன்றி மூர்க்கமாகச் சண்டையிடுவதும் கிழவனின் முழு இரவுத்தங்கலும் மனஎண்ணங்களும் அவன் போராட்டமும் என முழு நாவலும் இந்தியாவில் காடு பற்றிய நம் சிந்தனையை நம்பிக்கைகளை அறிவுப்புலத்தை வளப்படுத்தகூடியது.

பல இடங்களில், ஒரு தனிமனிதனின் அனுபவச்சித்திரத்தின் வழியாக, அவனது உணர்வுகள் வழியாக மானுடத்தின் அரும்பெரும் தருணங்களை எடுத்துரைக்கும் எளிமை தான் இந்த நாவலின் பலம்.

இது நாம் இதுவரை பார்த்த காடுகளோ, படித்த காடுகளோ இல்லை. மன எழுச்சியின் வழியாகவே நிலக்காட்சியின் கற்பனையை முழுமையாக எழுப்பும் வேறு காடு என்ற சித்திரத்தைத் தரக்கூடியது. மேலும், ஓர் ஆணின் தாய்மைச்சிந்தனையும் ஒரு பன்றியின் தாய்மைச்சிந்தனையும் இரண்டின் முரண்பாடுகளும் என இந்த நூல் முழுக்க பெருங்கருணையின் நுட்பமான கதிர்வீச்சை உணரமுடியும்.

நம் மூதாதையர்கள் இந்த மண்ணை, இந்த நாட்டைக் காடாக உணர்ந்து அதன் பகுதியாக வாழ்ந்தவர்கள். ஒவ்வோர் உயிர் இயங்கும் முறையையும் தம் வாழ்வோடு பின்னிப்பிணைத்து உணர்ந்து கொண்டவர்கள். அதுவே ஒரு சிந்தனை மரபாகவும் அதன் நீட்சியாகவும் கிளர்ந்தெழுந்து மானுட விடுதலைக்கான குறியீடாகிறது. 

மனிதனின் விடுதலைக்கடியில், பல ஆயிரம் வகை உயிர்களும், அதனதன் உயிர் அனுமதிக்கும் வாழ்வை வாழ்வதற்கான விடுதலையும் பொதிந்திருக்கிறது.  ஒரு கட்டத்தில், தாய்ப்பன்றி பேறு கண்ட குட்டிப்பன்றிகளைப் பாதுகாக்க அந்தத்தாய்ப்பன்றியையே கொல்லும் நிலைக்குத் தள்ளப்படுகிறார் கிழவர். 

மனிதனின் பழங்குடி மனநிலை, இந்த நாவலின் அடிப்படையானது. அதே சமயம், பழங்குடி மனநிலை என்றால் அது பழமையானது என்ற கடைந்தெடுத்த அழுக்கான நாகரிகத்தையும் வெல்லக்கூடிய, முற்போக்கும் நவீனமும் தொனிப்பது. மனிதச்சிந்தனை முறையை பல ஆயிரம் வருடங்கள் முன்னோக்கி நகர்த்திச் செல்லும் பெரும் முயற்சியை அந்தக்கிழவர் வழியாக நாவலாசிரியர் செய்திருக்கிறார். 

"அவர் காட்டை வென்றார்!" 
குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: