நம் குரல்

டென்மார்க் 1 - இளம்வெயில்





டென்மார்க் பயணம், ஒரு சர்வதேச கவிதை விழாவிற்காக நிகழ்ந்தது. கோபன்கேஹனில் நான் தங்கியிருக்கும் இடத்திலிருந்து விழா நடைபெறும் இடத்திற்கும் செல்ல, முப்பது நிமிடம் நடக்கவேண்டும். செல்லும் வழியெங்கும் பழம்பொருள் விற்கும் கடைகள். நவீனமயமான நகரத்தில் இத்தகைய கடைகள், பழங்காலத்தின் மீதான சொற்ப வியப்பைத் தக்கவைத்துக்கொள்வது போல் தோன்றுகிறது. நடைவழியின் ஒரு புறம் பெரிய ஏரி, ஒன்று இருக்கிறது. அதன் கரை வழியே நடந்து REVERSE International Copenhagen Poetry Festival நடைபெறும் மோலிகேட் என்னும் பகுதிக்கு வந்துசேருவேன். பேருந்திலும் வரலாம் என்றாலும், நான் கிளம்பி அறையிலிருந்து வெளியே வரும் நேரத்தில் பேருந்து இருக்காது. காத்திருக்கவேண்டியிருக்கும். குறைந்த அளவிலான பேருந்துகள் தாம் இருக்கின்றன. எப்பொழுது பார்த்தாலும் பெண்களும் ஆண்களும் அங்கும் இங்கும் சைக்கிள்களில் வேகவேகமாகச் செல்வதே நகரத்தின் பரபரப்பானதொரு காட்சி. லண்டனிலும் இதைக் காணமுடிந்தது. மக்கள் சைக்கிள் பயன்படுத்துவது, அதிகமாகி இருக்கிறது. சுற்றுச்சூழல் பாதிப்பையும் மனிதனின் ஆரோக்கியத்தையும் கணக்கில் கொண்டு பார்க்கும் பொழுது, மனிதக்கூட்டம் ஒட்டுமொத்தமாகச் சைக்கிளுக்குத் திரும்புவதே சரியென்று தோன்றுகிறது. சைக்கிளுக்கென தனியாக ஓடுபாதை போட்டிருக்கிறார்கள். நடக்க நடைபாதையும் சைக்கிளுக்கு ஓடுபாதையும் பேருந்து மற்றும் நான்குசக்கரவாகனங்களுக்கு என தனியான சாலையும் ஒரே சமயத்தில் மக்கள் சிக்கல் இல்லாமல் இயங்குவதற்கு வாய்ப்பாக இருக்கிறது.
சென்னை போன்ற நகரத்திலும் பெரிய அளவில் சைக்கிளை நோக்கித் திரும்புவது அவசியம் என்று தோன்றுகிறது. ஆனால், நகரக் கட்டமைப்பு மிகவும் சிக்கலாக இருக்கிறது. போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்கும் வகைகளை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். என்ன தான் புதிய பாலங்கள், சாலைகள் என்று வந்தாலும், நகரத்தின் போக்குவரத்தை ஒட்டுமொத்தமாக வடிவமைக்கும் பார்வையும் முயற்சியும் தாம் இச்சிக்கலைத்தீர்க்கும். மக்களுக்கு எளிதாகத்தரும் பணியை இன்னும் மாநகராட்சி செய்யவில்லை என்பதே நமது பிரச்சனை. ஆனால், தமிழ்நாட்டின் வாழ்வியல் முறைக்கும், நமது பொருளாதார நிலைமைக்கும் ஏற்ற வாகனம் 'சைக்கிளாகத்'தான் இருக்கமுடியும் என்று தோன்றுகிறது. கோடம்பக்கத்தில், காலையிலும், மாலையிலும் இளைஞர்கள் தங்கள் சைக்கிள்களில், சென்னை புறநகர்ப்பகுதிகளில் இருந்து நகரமையத்தை நோக்கியும் அங்கிருந்து வெளியேறிரும் விரைவதைப் பார்க்கமுடியும். நெருக்கடியான பேருந்து, கார்களுக்கு இடையே அவர்கள் சரசரவென்று தம் உழைப்பின் வெளியை நோக்கி இயங்கிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் மட்டுமே பெருவாரியாக, சைக்கிளைப் பயன்படுத்துபவர்கள் என்று நினைக்கிறேன்.
பகலில் நடுக்கும் குளிர் இல்லை என்றாலும் இரவு கதகதப்பு தேவைப்படுகிறது. வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்திருக்கும் கவிஞர்கள், அவரவர் நாட்டின் பருவநிலைகளைப் பற்றிப் பேசுகையில், டென்மார்க்கின் குளிர் போதாது, புழுக்கமாக இருக்கிறது என்கிறார்கள். நம் நாட்டின் கோடைப்பருவத்தை அவர்கள் என்ன சொல்வார்கள் என்று நினைத்துக்கொண்டேன். பொதுமக்கள், சூரிய வெளிச்சம் கிடைக்கும் இடங்களில் எல்லாம் அமர்ந்து காபி அருந்துகின்றனர். நேரடியான சூரியவெளிச்சம் அவர்களுக்கு உவப்பாக இருக்கிரது. வந்திருக்கும் கவிஞர்களில் பெரும்பாலோனோர், இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டதை நினைவுபடுத்துகின்றனர். அவர்கள் மேற்கொண்ட தமிழகப்பயணத்தையும் பேருந்துப்பயணத்தையும் குறிப்பிடுகிறார்கள். மெட்ராசும் மதுரையும் அவர்கள் அறிந்த இடங்களாக இருக்கின்றன. தமிழகத்தின் நிலக்காட்சிகளை வியப்புடன் வர்ணிக்கிறார்கள். கிறிஸ்டின் என்ற ஐஸ்லாந்து எழுத்தாளரும் நானும் எங்கள் எழுத்துப்பணிகள் குறித்து உரையாடல் நிகழ்த்தினோம். பார்வையாளர்களின் கேள்வியில் முக்கியமான ஒன்று: ஏன் உங்கள் நாட்டில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை இவ்வளவு அதிகமாக இருக்கிறது?
பொதுவாகவே, இம்மாதிரியான வெளிநாட்டுப்பயணங்கள், அங்கு நமக்கு தமிழ் நண்பர்கள் இல்லை எனில், அவர்களுடன் நாம் தங்கவில்லையெனில், வேற்றுகிரகத்திற்கு வந்துவிட்ட மனநிலையையே கொடுக்கும். ஆனால், இது அமெரிக்கா, லண்டன், டென்மார்க் போன்ற மேலை நாடுகளில் தான் இம்மாதிரியான மனநிலை ஏற்படும். ஏனெனில், நகர வளர்ச்சியில் அவர்களுக்கும் நமக்கும் அப்படி ஓர் இடைவெளி. இன்னும் வளர்ச்சியைக் காணாத நாடுகளுக்குப் பயணிக்கும்பொழுது, என்னுடைய இந்த எண்ணம் மாறலாம். ஏதோ ஒருவகையில் அவர்களை நம்முடன் இணைத்துப் பார்த்துப்புரிந்து கொள்ளமுடியும்.


குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: