நம் குரல்

டென்மார்க் பயணம் 2 - உணவும் சுவையும்!

உணவு என்பது பசியாற்ற மட்டுமே இல்லை, தகவமைவிற்கான விடயமும் கூட. டென்மார்க்கில் நடுத்தர வசதியானவர்களுடன் தங்கியிருக்கிறேன் என்பதால் அவர்கள் உண்ணும் உண்ணவும் காணவும் வாய்ப்பிருக்கிறது. பிரெட், பேக்கரி வகைகள், பழச்சாறு, பழத்துண்டங்கள், முழுக்காய்கறிகள், அவித்த முட்டை, தேநீர், காபி, சாசேஜுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சித்துண்டங்கள் என பரவலான வகையை உண்ண வேண்டியிருக்கும். இங்கு இப்பொழுது உள்ள குளிருக்கு, அதிகப் புரதச்சத்துத் தேவைப்படும் உணவு தேவைப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன் தரங்கம்பாடியில் சந்தித்த டேனிஷ் எழுத்தாளர் மெதே என்பவரை மீண்டும் இங்கு சந்தித்தேன். கவிதை குவித்த விவாதத்திற்குப் பின், அந்த விவாதம் அருமையான ஓர் உணவைக்கோருகிறது என்று கூறி உடனிருந்த கவிஞர்களையும் அழைத்துச்சென்று விருந்து அளித்தார். அராபிய வகை உணவுக்கடை. பின்னணியில் அராபிய இசை ஒலிக்க, உணவருந்தினோம். அராபிய உணவு வகைகள், இதர ஆங்கில உணவு வகைகளைப் போல தட்டையான சுவையுடன் இருப்பதில்லை. விரும்பும் படியான புளிப்பும், உவர்ப்பும் கலந்து காய்கறிகளும் கலவையாக்கப்பட்ட தழைகளும் கோழி இறைச்சியும் இருந்தது. வெவ்வேறு வகையான உணவு வாங்கிப்பகிர்ந்து கொண்டோம்.

இந்நகரத்தில், உணவின்றி வருந்துபவர்களை நான் இன்னும் பார்க்கவில்லை. இதற்கு நகரத்தின் வேறுபக்கத்திற்குப் போகவேண்டும் என்று நினைக்கிறேன். பொதுவாக, பணக்கார வீடுகள், இருக்கும் பகுதிகளில் குடிசைகள் இருப்பதையோ வறியவர் இருப்பதையோ அரசுகள் விரும்புவதில்லை. பணக்காரர்களின் காட்சிகளில் கூட ஏழைகள் தென்படக்கூடாது என்பதற்காக, சென்னையில் எத்தனை சேரிகள் அழிக்கப்பட்டன என்பதை நாம் பார்த்திருக்கிறோம் தானே! இங்கு அரிசி உணவை அரிதாகவே உண்ணுகின்றனர். என்றாலும், நேற்று கவிதை விழா அரங்கில், உணவு சமைத்த நண்பர் ஓடிவந்து, தமிழ்நாட்டின் சாம்பாரை முயற்சித்திருக்கிறேன். சுவைத்துவிட்டுச் சொல்லுங்கள் என்ற ஆவலுடன் சொன்னார். நிறைய சோயாபீன்சு, பீன்சு, உருளைக்கிழங்கு போன்றவற்றுடன் பல வகை பருப்பு கலந்து செய்யப்பட்டிருந்தது. நமது வகை மசாலாவின் சுவை இல்லாமல் இருந்தது. அத்துடன் வறுத்த முந்திரிப்பருப்புகளும் கலந்து இருந்தது.

என்றாலும், உணவு குறித்த என் மனத்தடைகள் அகன்றது இருளர்களுடனான பயணத்தின் பொழுதும், களப்பணியின் பொழுதும் தாம் என்று வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் சொல்கிறேன். அவர்கள், வாழ்க்கை போகும் வழியில் கிடைக்கும் உயிரினங்களை, கிழங்குகளை அவித்து உண்ணுவார்கள். உணவென எது கொடுத்தாலும் உண்ணும் வழக்கம் அவர்களிடமிருந்து வந்தது. என்றாலும், அயல்நாடுகளின் கடைகளில் பார்க்கும் காய்கறிகள் அளவுக்கு மீறிப் பெருத்து, ஏதோ வடிவவைத்து செய்துவைக்கப்பட்டவையாக இருக்கின்றன. இதை உண்ணும் மனிதர்களும் அவ்வாறே ஊதிப்பெருத்து, மரபணு ஊட்டம்பெற்று, சொந்தமாய் இயங்கும் தகுதிகளை, மனிதக்கூறுகளை இழந்தவர்களாக ஆகின்றனர் என்று தோன்றுகிறது. உணவின் மீதான நம் விருப்பமும் மனத்தடையும் நம் பண்பாட்டு வழக்கம் என்றாலும் பலவகைகளில் அது அதிகாரம் சம்பந்தப்பட்டதும் கூட!

ஒருமுறை, பயணத்தின் பொழுது கண்டெடுத்த ஃபேஷன் பத்திரிகையில், ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன். ஒரு கண்ணாடிக்கோப்பையில் துண்டித்துவைக்கப்பட்டிருந்த மனிதக் கட்டை விரல். அது ஒரு புதியவகையான சீமைச்சாராயத்தில் ஊறிக்கொண்டிருந்தது. அதன் விலை, பல இலட்சங்கள் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. முதலாளித்துவத்தின் அடிமைச்சிந்தனைக்கான குறியீடாகக் கண்டேன். உணவின் சுவையும் பெருத்த அரசியல் அடிமைச்சிந்தனையின் ஊக்கம்பெற்றது தான். உலகமயமாக்கலுக்குப் பின், எல்லா வகையான உணவுகளையும் உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் பெறமுடிகிறது. தனிப்பட்ட, பண்பாட்டு உணவை ருசிக்க, இங்குள்ள தூர ஊர்களில் இருக்கும், உலகமயமாக்கலின் கைகள் எட்டாத ஊருக்குத்தான் சென்று பார்க்கவேண்டும்!குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: