நம் குரல்

அவர்களைப் பதற்றமின்றி இருக்கச்சொல்லுங்கள்!


அவர்களைப் பதற்றமின்றி இருக்கச்சொல்லுங்கள்.
அவர்களுக்கு ஆதாயங்கள் தரும்
வாயில்களின் கதவுகளை அடைக்கும் முயற்சியை
ஒருபொழுதும் நான் செய்யமாட்டேன் என்று சொல்லுங்கள்

எவருடைய அதிகாரங்களையும் அங்கீகாரங்களையும் ஆதாயங்களையும்
நான் அபகரித்துக்கொள்வது என்பது எனைப்போன்ற ஒருவரால்
இந்தத்தாய்த்திருநாட்டில் சாத்தியமே இல்லை என்பதால்
அவர்கள் பதற்றப்படவேண்டாம் என்றும் சொல்லுங்கள்

எனது ஆதாயங்கள் லட்சங்களோ கோடிகளோ நெடுஞ்சாலைத் தட்டிகளோ இல்லை என்பதாலும்
அவர்களைப் பதற்றமின்றி இருக்கச்சொல்லுங்கள்

நான் ஒரு தனிப்பெண் என்றும்
எனக்கு அதிகாரமாகி நின்று எவரையும் எதிர்க்கும் குடும்பமோ, சாதிக்குழுவோ, குருமடங்களோ
வாசகர்வட்டமோ இருந்துவிடுமோ என்றும்
எனைக்குறித்து அவர்கள் பதற்றப்படவேண்டாம் என்றும் சொல்லுங்கள்

உலகின் எண் திசைகளை நோக்கியும்
ஏராளமான விமானங்கள் பறக்கின்றன என்பதால்
எத்திசை நோக்கியும் பறப்பதற்கான தொற்றலை
அவர்கள் செய்துகொள்ளளலாம் என்பதால்
அவர்கள் பதற்றப்படவேண்டாம் என்றும் சொல்லுங்கள்

எனது பாதை மிகவும் அற்பமான சிறிய மைல்கல்களே கொண்ட
ஒற்றையடிப்பாதை என்பதால்
அவர்கள் ஏன் என் வழியில் நடக்கவில்லை என்று இறைஞ்சும்
தர்க்கமோ கேள்வியோ என்னிடம் இல்லை என்பதாலும்
அவர்கள் பதற்றப்படவேண்டாம் என்றும் சொல்லுங்கள்

மேலும் எவருக்கும் நான் மனைவியோ தாயோ இல்லை என்பதால்
எவர் சொற்களுக்கும் செவிமடுத்து
எப்பொழுதேனும் வழக்கறிஞர் காகிதத்துடன் வந்து நின்று
என் வாழ்க்கை நிமித்தம் இவர்களிடம் என் நேரத்தைச் செலவிடுவேன் இல்லை என்பதாலும்
அவர்கள் பதற்றப்படவேண்டாம் என்றும் சொல்லுங்கள்

எல்லோரின் பயணமும் ஒரே திசை நோக்கி இருக்கவேண்டியது இல்லை என்பதாலும்
அவர்களைப் பதற்றமின்றி இருக்கச்சொல்லுங்கள்
பொறாமையை வெளிப்படுத்தும்போது
அதை அழகாய் நாகரிகத்துடன் வெளிப்படுத்தவும் தெரிய வேண்டும் என்பதால்
அவர்களின் பதற்றத்தை வெளியே காட்டவேண்டாமெனச் சொல்லுங்கள்

மனிதர்கள் எல்லோருக்கும் வெவ்வேறு மூளை இருப்பதாலும்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மூளை இருப்பதாலும்
ஒரே மூளை வழியாக ஒட்டுமொத்த மனிதக்கூட்டமும் சிந்திக்கவேண்டிய அவசியமில்லை என்பதால்
அவரவர் மூளை வழியாகச் சிந்திக்கும் பொறுப்பை மட்டுமே அவரவர் எடுத்துக்கொண்டால்
அவர்கள் நலமாய் இருப்பார்கள் என்பதால்
அவர்கள் பதற்றப்படவேண்டாம் என்றும் சொல்லுங்கள்

இப்பதற்றத்தின் மூலம் எனை எதிர்க்க இருக்கும் சிறிய தகுதியையும்
அவர்கள் இழந்துவிடுகிறார்கள் என்பதால்
அவர்களைப் பதற்றமின்றி இருக்கச்சொல்லுங்கள்

இப்பொழுதெல்லாம் ஒருவரை அழிக்க நீங்கள் கொல்லவேண்டியதில்லை
கொன்றால் அவர் இன்னும் புகழ் மிக்கவராக, அழியாதவராக ஆகிவிடுவார் என்பதால்
எது குறித்தும் அவர்களைப் பதற்றமின்றி இருக்கச் சொல்லுங்கள்

எவர் அளவிற்கும் நான் புகழ் அடையவிரும்பவில்லை என்பதாலும்
அவர்களைப் பதற்றமின்றி இருக்கச் சொல்லுங்கள்
இது எல்லாவற்றிற்கும் அப்பாலும்
தத்தளிக்கும் கொந்தளிக்கும் மனித மனவெளிகளுக்கு அப்பாலும்
இசையின் தந்திகள் அதிர
செவ்வனே நேர்த்தியாய்
உலகம் அழகாய் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதாலும்
அவர்களைப் பதற்றமின்றி இருக்கச்சொல்லுங்கள்!குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: