நம் குரல்

"இரசாயன ரோஜாக்கள்" தமிழில், ஏ. ஆர். ரஹ்மானின் புதிய இசை ஆல்பம்!








K.M. இசை நிறுவனத்தின், 'பெண் எழுச்சியை' மையமாகக் கொண்ட "இரசாயன ரோஜாக்கள்" ஆல்பத்திலிருந்து இரண்டு பாடல்கள் சமீபத்தில் Coke Studio @ MTV - வில் வெளியாகியிருக்கின்றன. 

ஏ. ஆர். ரஹ்மான் அவர்களின் பெருமுயற்சியிலும், நவீனக்கலை மற்றும் தொழில் நுட்ப வடிவிலும் உருவாகியிருக்கும் இசை முயற்சி இது.

பெண்களின் வல்லமையை, இது வரை  பதிவாகாத பெண்களின் உணர்வுகளை இசைக்கும் பணியில் இந்த ஆல்பத்தில் தன்னை ஈடுபடுத்தியிருக்கின்றார்.

இதன் பின்னணியில் வேலைசெய்யும் நபராக, நான் உணர்ந்த இரு முக்கியமான விஷயங்கள்: ஒன்று, திரைப்படங்களுக்கு  மட்டுமே இசை என அதை அடக்கிவைக்காது அதையும் தாண்டி விரித்துச் செல்லும்  தீவிர ஆர்வத்துடன் செயல்பட்டிருக்கிறார், ஏ. ஆர். ரஹ்மான். இரண்டு, பெண்களின் கருத்துகளையும், படைப்பாற்றலையும் மையமாக வைத்து இதை உருவாக்கியுள்ளார். ஒரு கலைஞனாக அவர் தன்னை மிகவும் விடுதலைப் பூர்வமாகவும் முற்போக்காகவும் வைத்திருக்கிறார் என்பதைத்தான் இது காட்டுகிறது.

தமிழ் படைப்புலகிற்கு இது ஒரு புதிய வெளிப்பாடு.

பிரபல இசை இயக்குநர் ஒருவர் இந்தப்பாடல்களைக் கேட்டுவிட்டு என்னிடம் கூறினார். "ஏ. ஆர். ரஹ்மான், இவ்வாறு இசை ஆல்பத்தைக் கொண்டு வருவதன் வழியாக, இசை உலகத்திற்கான வாயிலை எல்லோருக்கும் திறந்து கொடுக்கிறார். ஆல்பங்கள் உருவாக்குவதில் முன்னோடியாகவும் இருக்கிறார். இனி, எல்லோரும் அப்பாதையில் செல்ல முடியும், பயன்படுத்திக்கொள்ளமுடியும். இசை என்பது திரைப்படங்களுக்கு மட்டுமே என குறுகிப்போயிருந்ததை மாற்றி வைக்கிறார். தமிழில், இனி நிறைய இசைத் தொகுப்புகள் உருவாகும்"

"நான் ஏன் பிறந்தேன்!" -  கவிஞர் வாலி எழுதிய பாடல். ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஒரு பெண் தன்னுடைய கறுப்பு நிறத்தால் வீட்டிலும், ஊரிலும் ஒதுக்கப்படுகிறாள். தனிமையும் பாகுபாடும் உருவாக்கும் வேதனை. வறுமையின் நிறமான கறுப்பின் உணர்ச்சிகள். அடக்குமுறைகளையும் தடைகளையும் உடைத்து வெளியேறி எப்படி அவள் ஒளிர்கிறாள் என்பதே பாடல். ஒரு குறும்படத்தில் இப்பாடல் ஒலிக்கப் போகிறது. .ஆர். ரஹ்மான், ரிஹானா, இஷ்ரத் ஆகியோர் பாடுகின்றனர்.

இரண்டாவது பாடல், "என்னிலே மகா ஒளியோ!" -  விட்டு விடுதலையான பெண்ணின் உலகம், எல்லையற்ற பரவசம், பெண்மையின் மலர்ச்சி. இஷ்ரத், ரிஹானாவின் குரல்களில் என்னுடைய கவிதை வரிகளில்இப்பாடலுக்குத் தொடர்ந்து நிறைய வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.  எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைப் பொதுவில் வைக்கிறேன். இந்த ஆல்பத்தின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட நபராக என் பார்வையில் சொல்லவே, இந்த எளிய பதிவு. 

'இரசாயன ரோஜாக்கள்' ஆல்பத்தில் "பெண் உரிமை" தொடர்பாக இன்னும் சில பாடல்களும் இருக்கின்றன.


"இரசாயன ரோஜாக்கள்" தமிழ் இசை ஆல்பத்தின் முன்னோட்டம்:


கவிஞர் வாலியின் "நான் ஏன் பிறந்தேன்?" பாடல்"


குட்டி ரேவதியின் "என்னிலே மகா ஒளியோ!" பாடல்:



குட்டி ரேவதி

4 கருத்துகள்:

சீனி மோகன் சொன்னது…

ஓர் இசைக் கலைஞனாகத் தொடங்கியவர் மாபெரும் ஆளுமையாக உருவெடுப்பார் என்பதைத் தொடக்க நாட்களிலேயே நிரூபித்தவர். அவருடைய அடக்கம், அமைதி, தன்னைப்பற்றி எந்தப் பெருமையையும் முன் வைக்காத அழகு-இவை தான் அவரை இன்று உலகமே போற்றும் கலைஞனாக முன்வைத்தது. ஆஸ்கர் வாங்கும் போது கூட எல்லாப் புகழையும் இறைவனுக்கு ஒப்புக் கொடுத்தவர். மிகக் குறுகிய காலத்தில் இந்திய இசை மரபையும் உலக இசை மரபுகளையும் கற்றுத் தேர்ந்தும் அடக்கமான சாதனையாளர். உலகம் முழுக்க அறிந்த ஒரு தமிழ் மேதையுடன் பணியாற்றும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தமைக்கு வாழ்த்துகள் தோழி.......

பெயரில்லா சொன்னது…

உண்மையிலேயே எளிய பதிவுதான்.

பெயரில்லா சொன்னது…

’’எளிய பதிவுதான்’’ என்ற இடுகையை இட்டதற்கு மிகவும் வருந்துகிறேன். மன்னிக்கவும்.
யூடியூபில் என்னிலே மஹா ஒளி பாடல் கேட்டேன். மிக அற்புதம். பலர் பாடல் வரிகளின் மொழிபெயர்ப்பு கேட்டு பின்னூட்டமளித்திருப்பது கண்டேன்.
எந்த நதியும் எந்தன் நெஞ்சில் வந்து முடியவும் என்ன விந்தை அங்கு சமுத்திரம் பொங்க கண்டதும் ---அற்புதமான வரி.. நீங்கள் சமீபத்தில் கவிஞர் வாலியை எந்த விமர்சனமும் அற்று கொண்டாடுவதன் ஓர் எதிர்வினையாக அப்படி கூறிவிட்டேன். வாலி மிக முக்கியமான கவிஞர். ஆனால் பெண்ணிய நோக்கில் விமர்சனங்களுடன் உங்கள் பாராட்டும் அமைய வேண்டும் அல்லவா

பெயரில்லா சொன்னது…

Can you translate "ennile maha oliyo" song please?