நம் குரல்

The Ship of Theseus - என் பார்வையில்!


மாற்று சினிமாவிற்கான தளம் விரிவது குறித்த நம்பிக்கை தொனிக்கும் ஒரு படம் என்றே சொல்லலாம்.

இந்திய மாநிலங்கள் தோறும் இது விரிவாக அறிமுகப்படுத்தப்பட்ட விதம், முற்றிலும் வணிக சினிமா விதிமுறைகளிலிருந்து மாறுபட்டது என்பதையும் நாம் ஒத்துக்கொள்ளவேண்டும்.

என்றாலும், 'மாற்று சினிமா' என்று கொண்டாடும் அளவிற்குப் புதுமை ஒன்றும் அந்தப்படத்தில் இல்லை.

பார்வையற்ற பெண் புகைப்படக்கலைஞர் தன் கலையுடன் கொள்ளும் உறவு, ஒரு பார்ப்பன துறவி முரண்படும் தத்துவார்த்த வாழ்வியல், நவநாகரீக உயர் தட்டு இளைஞன் ஒருவன் சமூக அக்கறை உடையவனாக மாறுவதற்கான பயணம் என்று மூன்று கதைகள் ஒன்றன் பின் ஒன்றாய் சொல்லப்பட்டுப் பின் எல்லா கதாப்பாத்திரங்களும் உறுப்பு தான முறைகளால் ஒரே கதைத்தளத்திற்குக் கொண்டு வரப்படுகின்றனர்.

படம் பார்த்து முடித்த பொழுது 'உறுப்பு தானத்திற்கான' ஒரு பிரச்சார படம் பார்த்த உணர்வைத் தான் அப்படம் என்னிடம் விட்டுச் சென்றது. ஒரு செயற்கையான முடிச்சு. இதை என்னால் மறைக்க முடியாது.

என்றாலும் அடிப்படையான சில அரசியல் விஷயங்களைக் கேள்வி கேட்காமல் இருக்க முடியாது. சமூகத்தில் நவீனம் என்ற கருதுகோள்களை முன்வைக்கும் கதை 2, கதை 3 இரண்டுமே அபத்தங்களாகவும், சமூகத்தில் முற்போக்கு என்று நம்பப்பட்டவைகளை உள்வாங்காதவைகளாகவும்  இருந்தன. இது போன்ற மேம்போக்கான கருத்துகள் இன்று 'வணிக சினிமா'விலேயே ஏராளமாகக் காணக்கிடைக்கின்றன.

அடுத்து, கதை 2 - ல் பார்ப்பனச் சிந்தனையாளர்கள் மனிதத்தின் மீது கொள்ளும் அக்கறையை விட மிகையான அக்கறையை 'விலங்குகள் கொல்லாமை'யின் மீது காட்டுவது, அவற்றின் மீதான பரிவைப் பெரிய அளவில் ஊதிப்புடைக்கச்செய்வது. சாதியாலும், மதங்களாலும் மிருகங்களைப் போல மனிதர்கள் மந்தை மந்தையாய்க் கொல்லப்படும் நாட்டில், 'விலங்குகள் கொல்லாமை'யை ஓர் உச்சக்கட்டப் பிரச்சனையாக முன்வைத்திருப்பது நல்ல வேடிக்கை. இது போல் அறிவுரைகள் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போயிற்று.

கதை - 1 ல் அந்தப் பெண் புகைப்படக்கலைஞர், தன் கலை குறித்து முரட்டுத்தனமான அபிப்ராயங்கள் கொண்டிருப்பதாகவே சித்திரிக்கப்பட்டுள்ளது. எழுப்பப்படும் கேள்விகள், பதில்களைத் தேடும் முயற்சிகளின்றி வெற்றிடங்களாக விடப்படுகின்றன. ஒரு பெண் கலைஞரைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு எழுச்சியும் புரிதலுணர்வும் அற்ற சமூகம் என்பதைத் தான் இது வெளிப்படுத்துகிறது.

நிறைவாக மூன்று அடிப்படைக் கருத்துகள்: 

1. சினிமா போன்ற கலை இலக்கிய விடயங்கள் தாம், மனித சிந்தனை எந்தக் காலக் கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதற்கான கண்ணாடி. அதில் இப்படம் வெகுவாகப் பின் தங்கியுள்ளது.  'மாற்று சினிமா', என்றும் 'சுயாதீனமான சினிமா' என்ற அடையாளம் பெறுவதாலும் தான் இந்தப் பார்வைகளை முன்வைக்கிறேன். இல்லையென்றால், பத்தோடு ஒன்று பதினொன்று என்று விட்டுப் போயிருப்பேன்.

2. ஒரு சினிமாவின் மூலக்கதையே, தற்காலச் சூழலின் அரசியலை நுட்பமாகவும் மிகச்சரியாகவும், உள்வாங்கி முன் வைக்கக் கூடியது. அந்த அளவில் போதுமான 'அறிவு சீவிதம்' அற்றக் கதையே இது.

3. தற்பொழுது வரும் படங்களில் அல்லது இளைஞர்களின் படங்களில், நம் நாட்டின் வீர்யமான ஆவணப்பட இயக்கத்தின் தாக்கத்தை உணரமுடிகிறது. இதை, 'தி ஷிப் ஆஃப் திஸியஸ்' மற்றும் 'ஐ.டி' இரண்டு படங்களிலுமே முழுமையாக உணரமுடிந்தது. இதைக் 'கதை சொல்லலின்' ஒரு பலமாகவே உணர்ந்தேன்.  இந்தத் தன்மையினால் கூட, இப்படங்கள் 'மாற்று சினிமா' அடையாளங்களையும் புகழையும் பெறுகின்றன என்பது ஒருவகையில் சமாதானத்திற்குரியதே.


குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: