இந்தக் காதல்
இவ்வளவு வன்முறையான
இவ்வளவு மென்மையான
இவ்வளவு மிருதுவான
இவ்வளவு நம்பிக்கையிழந்த
இந்தக் காதல்
பகல் பொழுதைப் போல் அழகாக
வானிலை மோசமாக இருக்கும் போது
மோசமாக இருக்கும்
அந்த வானிலை போன்ற
இவ்வளவு நிஜமான இந்தக் காதல்
இவ்வளவு அழகான இந்தக் காதல்
இவ்வளவு மகிழ்ச்சியான
ஆனந்தமான
மேலும் இவ்வளவு பரிதாபமானதுமான
இந்தக் காதல்
இருட்டிலுள்ள குழந்தை போல் பயந்து நடுங்கியும்
ஆனாலும் இரவின் மத்தியிலும்
நிதானமிழக்காத மனிதனைப் போல்
தன்னைப் பற்றிய ஒரு நிச்சயத்துடன்
மற்றவர்களைப் பயமுறுத்திய
அவர்களைப் பேசவைத்த
வெளிறச் செய்த இந்தக் காதல்
நாம் கண்காணித்தோம் என்பதால்
கண்காணிக்கப்பட்ட இந்தக் காதல்
துரத்தப்பட்ட புண்படுத்தப்பட்ட தொடரப்பட்ட
முடிக்கப்பட்ட மறுக்கப்பட்ட மறக்கப்பட்ட
இந்தக் காதல்
நாம் அதைத்
துரத்திப் புண்படுத்தி தொடர்ந்து முடிந்து மறுத்து
மறந்தோம் என்பதால்
இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதுடன்
முழுமையாக ஒளிர்ந்து கொண்டிருக்கும்
இந்தக் காதல் முழுமையாக
உன்னுடையது
என்னுடையது
எப்போதும் புதுமையான ஒன்றாக
இருந்து கொண்டிருப்பதோடு அல்லாமல்
மாறாதது
ஒரு தாவரத்தைப் போல் அவ்வளவு நிஜம்
ஒரு பறவையைப் போல் அவ்வளவு துடிப்பு
கோடைக்காலத்தைப்போல் அவ்வளவு
சூடானது அவ்வளவு உயிர்த்திருப்பது
நாம் இருவரும்
போகலாம் திரும்பிவரலாம்
மறந்துவிடலாம்
மீண்டும் உறங்கிப் போகலாம்
விழித்துக் கொள்ளலாம் அல்லலுறலாம்
மூப்படையலாம்
சாவைப் பற்றிக் கனவுகாணலாம்
விழிப்புடன் இருக்கலாம் புன்னகைக்கலாம்
சிரிக்கலாம்
பின்னர் இளமையும் அடையலாம்
அங்கேயே நின்றுவிடுகிறது நம் காதல்
கழுதையைப் போல் பிடிவாதமாக
ஆசையைப் போல் துடிப்பாக
ஞாபகத்தைப் போல் கொடியதாக
மனக்குறைகளைப் போல் முட்டாள்தனமானதாக
நினைவுகளைப் போல் மென்மையாக
பளிங்கைப் போல் குளிர்ச்சியாக
பகல் பொழுதைப் போல் அழகாக
குழந்தையைப் போல் மிருதுவாக
புன்னகையுடன் நம்மைப் பார்க்கிறது
ஒன்றும் சொல்லாமல் நம்முடன் பேசுகிறது
நான் அதைக் கேட்கிறேன் நடுங்கியபடியே
கத்துகிறேன்
உனக்காகக் கத்துகிறேன்
எனக்காகக் கத்துகிறேன்
தயவுசெய்து கேட்கிறேன்
எனக்காகவும் உனக்காகவும்
ஒருவரையொருவர் நேசிக்கும்
நேசித்த அனைவருக்காகவும்
ஆம், நான் உன்னிடம் கத்துகிறேன்
உனக்காக எனக்காக எனக்குத் தெரிந்திராத
மற்ற அனைவருக்காகவும்
அங்கேயே இரு
எங்கு இருக்கிறாயோ
அங்கேயே
முன்பு எங்கு இருந்தாயோ
அங்கேயே
அசையாதே
போய்விடாதே
காதல் வயப்பட்டிருந்த நாங்கள்
உன்னை மறந்துவிட்டோம்
எங்களை நீ மறந்து விடாதே
உன்னை விட்டால் இப்பூமியில் எங்களுக்கு
யாருமில்லை
எங்களை உறைந்து போக விட்டுவிடாதே
மிகத் தொலைவிலும் எப்போதும்
எங்கிருந்தாலும்
இருக்கிறாய் என்று தெரிவி
காலந்தாழ்ந்து ஒரு வனத்தின் மூலையில்
நினைவில் கானகத்திலிருந்து
திடீரென்று வெளிப்படு
எங்களுக்குக் கரம் நீட்டு
எங்களைக் காப்பாற்று.
ழாக் ப்ரெவர்
பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் வெ. ஶ்ரீராம்
'சொற்கள்' என்னும் கவிதை நூலிலிருந்து
க்ரியா வெளியீடு
2 கருத்துகள்:
//நான் எப்பொழுதும் காதலின் பக்கம்.
மகளின் காதல் என்றால் அவளின் காதல் பக்கம்.
எல்லா ஆண்களும் ஒரே மாதிரி தான் என்பதே என்னுடைய கருத்து என்றாலும், பெண்ணிடம் காதலை வெளிப்படுத்துவதில் மட்டும் தான் ஒருவரிடமிருந்து மற்றவர் வேறுபடுகிறார் என்பது என் முடிந்த முடிபு.
வீட்டில் 'தந்தை அன்பின்' போதாமையால், 'சகோதர அன்பின்' போதாமையால், 'ஆண் அன்பின்' போதாமையால் மகளின் காதல் வேகம் பெறுகிறது, வீர்யம் பெறுகிறது.
காதல் வழியாக எல்லா ஆண்களிடமும், மகள் தந்தையைத் தான் தேடுகிறாள்.
தவறாகி, பிழையாகி, பின் ஏதோ ஒரு மட்டில் காதல் நிறைவாகும் வழிகளைத் தேடிக் கொள்கிறாள்.
தந்தையின் முழுமையான அன்பைப் பெறும் மகளும் காதலில் தன் தந்தையைத் தான் தேடிக் கொண்டிருப்பாள், ஆண்களில் காதலைத் தேடுவதற்குப் பதிலாக.
நான் எப்பொழுதும் காதலின் பக்கம். இன்னும் மானுடம் வெல்ல நம்மிடம் இருக்கும் ஒரே அறிவு காதலே. இதே வார்த்தைகளில் அம்பேத்கர் சொல்லவில்லை என்றாலும், சாதியை வெல்லவும் நம்மிடம் இருக்கும் ஒரே வெளிப்பாடு காதலே.
ழாக் ப்ரெவரின் 'இந்தக் காதல்' கவிதை எவ்வளவு பட்டவர்த்தனமாக, காதலின் மூச்சுத் திணறலைச் சொல்வதாக, என்றென்றும் தற்காலம் கொண்டதாக, பேரியக்கம் நிரம்பியதாக இருக்கிறது பாருங்கள்!
வாசித்தும், வாசித்துக் காட்டியும் அதன் வரிகளின் பின்னால் ஓடியும், காதலின் தீரம் தொட முனைந்தேன்!//
சிறப்பு
கருத்துரையிடுக