அலெசான்ட்ரோ பாரிக்கோ என்ற இத்தாலிய எழுத்தாளரின் படைப்பு இது. கவிஞர் சுகுமாரன் அவர்கள் மொழிபெயர்த்திருக்கிறார்.
ஆயிரம் பக்கங்களை லட்சியமாக வைத்து அலுப்பைத் தரும் படைப்புகளுக்கு மத்தியில் நூறுபக்கங்களுக்குள் விரியும் பயண வாழ்க்கையும் அங்கு நீளும் காதல் புதிரும் மூச்சைத் திணறச் செய்கின்றன.
காதல் குறித்த நவீன பிம்பங்களையும் மரபுகளையும் உள்வாங்கிக் கொண்டு இரண்டிற்குமே இடையே போராடும் மனித மனத்தில் முங்கித் திளைக்கும் அனுபவமே நாவலாக இருக்கிறது.
கீழ்த்திசைப் பெண்கள் காதல் மனதுடன் மேலைத் தேயப் பெண்களின் காதல் உணர்வைப் பின்னிப் பிணைத்து, அதே சமயம், காதலின் மாந்திரீக வலைக்குள் இழுபடும் ஆணின் பயணத்தை இவ்வளவு துல்லியமாகச் சொல்லியிருப்பது, நவீனம் நிறைந்தது.
ஒரே காதலின் போதாமை தான் இன்னும் இன்னும் வேறு வேறு இடங்களில் துளிர்த்து, மாயையைக் காட்டி, தொடங்கிய இடத்திற்கே வந்து சேர்கிறது. அங்கு தான் அதன் வசீகரம் முழுமையடைகிறது போலும்.
எதுவுமே கற்பனை இல்லை. ஆனால், கதையைச் சொல்லும் விதத்தில் மனம் தரையில் நில்லாமல் கதாநாயகனுடன் மேலெழும்பிப் பறக்கிறது. யசுனாரி கவபட்டாவின் 'தூங்கும் அழகிகள் இல்லம்' நாவலில் இப்படியானதொரு தன்மையை உணரமுடியும்.
பெளத்த அறமும் சிந்தனையும் மனிதனுக்குக் கொடுக்கும் உடலும் காமமும் திளைப்பும் இதில் ஓவியமாகியிருக்கின்றன. பெண்கள் உடலை ஒப்புக் கொடுக்கின்றனர். ஆண் அந்த உடலைத் தேடித் தேடி தேசமாக அலைகிறான். நீர்நிலைகளின் கரையில் அவன் கண்டடைகிறான். பருவம் தவறினால், பொரிந்து போய் இழப்பைத் தரும் 'பட்டு முட்டைகளைப்' போல் பின் அவற்றைச் சுமந்து திரிகிறான்.
1996 - இந்நாவல் வெளியாகியிருக்கிறது. மனிதச் சிந்தனைப் பரிணாமத்திற்கேற்ப, மனிதனின் மனதில் காதலும் எழுச்சியுற்று கற்பனைகளை மாற்றிக் கொண்டே இருக்கிறதே ஒழிய, அதன் தீவிரமும் வண்ணமும் கொஞ்சமும் குறைந்தபாடில்லை என்பதை இந்நாவல் செழிப்பாகச் சொல்லியிருக்கிறது.
கவிஞர் சுகுமாரனின் நடையொழுக்கமும், மொழி ஒழுக்கமும் எந்தச்சிறு தயக்கமும் தடையுமின்றி, கதை வெளிக்குள் பறக்கும் அகண்ட சிறகுகளைக் கொடுக்கிறது. படித்துவிடுங்கள். நண்பர்களுக்குப் பரிசளியுங்கள்.
குட்டி ரேவதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக