நம் குரல்

இயக்குநர் அமீர் அவர்களுக்கு ஒரு தாழ்மையான விண்ணப்பம்

என்ன மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்கிறோம்!


இந்த நிகழ்வை யாரும்தர்மபுரிசம்பவத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்கவேண்டாம்.என்று கேட்டுக்கொள்கிறேன். இதுகுறித்து முற்போக்குவாதிகள், இலக்கியவாதிகள், சமூக நலன் விரும்பிகள் யாரும் அவசரப்பட்டு கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
- என்று இயக்குநர் அமீர் சொல்லியிருக்கிறாராம்.இயக்குநர் அமீர் அவர்களுக்கு,

வணக்கங்கள்.

ஏற்கெனவே இலக்கியவாதிகள், முற்போக்குவாதிகள் எல்லோரும் சமூகம் குறித்த எந்த சுதந்திரமான கருத்தையும் சொல்லமுடியாமல் வாயடைத்துப் போயிருக்கும் நிலையில், உங்களின் இந்தக் கருத்து உண்மையிலேயே சமீபத்திய 'கருப்பு நகைச்சுவை' என்றே சொல்லவேண்டும்.

'முற்போக்குவாதிகள், இலக்கியவாதிகள், சமூக நலன் விரும்பிகள் யாரும் அவசரப்பட்டு கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்' என்று தடையும் விதிக்கிறீர்கள். ஒரு படைப்பாளி, சமூகத்தை நோக்கி இப்படி ஒரு வேண்டுகோளை வைப்பது என்பது ஒட்டுமொத்த சமூகத்தையும் முற்போக்காகச் சிந்திக்காதே என்று சொல்வது போலவும், பிற்போக்காகச் சிந்தியுங்கள் என்று உந்துவது போலவும் உள்ளது.

அதிலும் ஒரு படைப்பாளியாக, கலைஞனாக மேடையிலும், பொது இடத்திலும் கருத்துகளைத் தெரிவிக்கும் வாய்ப்பு பெற்ற ஓர் இயக்குநர் இவ்வாறு பேசியிருப்பது வேதனையானது.

சமூகத்தின் சாதி, காதல், பெண், ஆண் என்ற எது குறித்தும் எந்தப் பரவலான முற்போக்குத் தன்மையும், சிந்தனையும் இல்லாமல் சில திரைத்துறையினர்  நடந்து கொள்வது நிகழும் சம்பவத்தையும் தொடர்புடையவர்களையும் கேலியாக நோக்கவைக்கிறது. ஏனெனில், பொதுச்சமூகம் எல்லாவகையிலும் முற்போக்காகச் சிந்திக்கக்கூடியதாகவும், இயன்ற அளவு விளைவுகளைத் தவிர்க்கும் வண்ணம் செயல்படக்கூடியதாகவும் உள்ளது.

எங்கெங்கும் சாதிய வன்கொடுமைகள் பெரிய அளவில் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில், தயை கூர்ந்து நீங்கள் இம்மாதிரியாக, சாதியம் சம்பந்தமான மேம்போக்கான கருத்துகளைப் பேச வேண்டாம் என்று  உங்களைக் கேட்டுக் கொள்கிறோம். உங்களையெல்லாம் முன்மாதிரியாகக் கொண்டிருக்கும் சமூகத்திற்கு இது போன்ற பேச்சுகளால் தொடர்ந்து பலத்த ஏமாற்றங்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள். இது சமூகத்திற்கும் நம் கலைவெளிப்பாடுகளுக்கும் நல்லதன்று.

சொந்த விஷயங்களுக்கு இவ்வளவு பதற்றப்படும் உங்களிடம், சமூகப் பொது நிகழ்வுகளைப் பார்க்கும் விதத்திற்கும் நீங்கள் அவற்றை முன் வைக்கும் விதத்திற்கும் இடையே பெருத்த முரண்பாடுகள் இருக்கின்றன என்று நாம் கொள்ளலாமா? இல்லை, நீங்கள் இயக்கிய சினிமாவை வெறுமனே வியாபாரம் தான் என்று கொள்ளலாமா? அல்லது, இந்தக் காதல் பஞ்சாயத்தை ஒரு வியாபாரம் என்று கொள்ளலாமா?

நம்மால் சினிமா, சமூகம் இரண்டையும் தொடர்புப்படுத்த முடியாத பட்சத்தில், இம்மாதிரியான முரணான கருத்துகளையேனும் சொல்லாமல் இருந்துவிட்டுப் போகலாம். ஏனெனில், இம்மாதிரியான தருணங்கள் எல்லா படைப்பாளிகளுக்கும் நிகழ்வதுண்டு.

''இந்த நிகழ்வை யாரும்தர்மபுரிசம்பவத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்கவேண்டாம்'' - இது  அல்லாத ஒன்று இந்தச் சமூகத்தில்  இயங்கக்கூடும் என்ற உங்கள் நம்பிக்கையும், வேண்டுகோளும் கூட எங்களை வேதனைப்படுத்துவதாக இருக்கிறது. ஏற்கெனவே நம்மால் ஏதும் செய்ய இயலாத அளவிற்கு சாதிய வன்முறைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 'தர்மபுரி' சம்பவம் நம் காலக்கட்டத்தின் அழிக்க முடியாத அவலம். இது குறித்த குற்றவுணர்வு, அல்லது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவது  தான் இந்நேரத்தில் ஒரு கலைஞனின் நேர்மையாக இருக்கும்.

ஓர் ஆணைக் காமுகன் என்று அடையாளம் காட்டி ஒடுக்குவற்கும், ஒரு பெண்ணை அவனைக்காதலிக்காதே என்று தடைபோடுவதற்கும் சாதியச் சமூகம் தான் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. இதற்கு பா.ம.க ராமதாசைப் போலவே நாமும் வெளிப்படையாக சாதி அடையாளங்கள் கூறிப் பேசி, வன்முறையைச் செயல்படுத்திவிட்டுப் போகலாம் இல்லையா?

உண்மையில், காதலிக்கும் ஒரு பெண்ணாக 'தாமினி' இந்தச்சம்பவத்தால் அடையும் மன உளைச்சலையும், அவர் மீது நிகழ்த்தப்படும் மறைமுகமான வன்முறைகளையும் நாம் யாருமே பொருட்படுத்தவில்லை. கவனத்திலும் கருத்திலும் எடுத்துக் கொள்ளவில்லை. சரியான முற்போக்குப் பெண்ணிய இயக்கங்கள் இருக்கும் சமூகமாக இருப்பின் இந்தப் பிரச்சனை இவ்வளவு தூரம் நீண்டிருக்காது என்பது என் நம்பிக்கை. 'திவ்யா - இளவரசன்' சம்பவத்திலும் அப்படியே!

நீங்கள் வேண்டிக்கேட்டுக்கொள்ளும் அளவிற்கு எல்லாம், முற்போக்கு இலக்கியவாதிகள் யாரும் எப்பொழுதும் இம்மாதிரியான நிகழ்விற்கு எதிராகக் கருத்துகளைச் சொல்லவே மாட்டார்கள். அதற்கு நான் உத்திரவாதமளிக்கிறேன். இதற்கு முன்பும் எல்லா சாதிய வன்முறைகளின் போதும் எப்படி அமைதி காத்தார்களோ அது போலவே தான் இனியும் இருக்கப்போகிறார்கள்.  அல்லது, சாதிய நிலைப்பாட்டைத் தான் தம் கருத்துகளாக உதிர்ப்பார்கள். நீங்கள் அவர்கள் கருத்து குறித்தெல்லாம் பதற்றப்படவேண்டாம் என்று, ஒரு தோழராக உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.


நன்றி,

குட்டி ரேவதி

3 கருத்துகள்:

மு.சரவணக்குமார் சொன்னது…

"அவசரப்பட்டு கருத்து தெரிவிக்க வேண்டாம்"....என்பதற்கும், இது விஷயத்தில் நீங்கள் கருத்துத் தெரிவிக்க வேண்டாமென்பதற்கும் மலையளவு இடைவெளியிருப்பதாகவே தோணுகிறது.

அதைத் தாண்டிய பதிவின் சாரத்தோடு எனக்கு உடன்பாடே

Gokul Salvadi சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மருதபாண்டியன் சொன்னது…

படைப்பு குறித்து ஒரு கலைஞன் எந்த அளவு நேர்மையுடன் இருக்கிறானோ அந்த அளவு நேர்மை சமூகத்துடனும் இருக்க வேண்டும். தாமினியின் மன உளைச்சல் குறித்து யாருக்கும் கவலை இல்லை. சமூக மாற்றம் விரும்பும் எந்த கலைஞனும் பெண்ணை மன உளைச்சலுக்கு ஆளாக்க மாட்டான். வீட்டிலேயே உங்கள் பருப்பு வேக வில்லை. உங்கள் வியாபார சினிமாவை "சினிமா" என்றே அழையுங்கள். தயவு செய்து " படைப்பு " என்று கொச்சைப் படுத்தாதீர்கள். நீங்கள் படைப்பாளியும் அல்ல. சமூகப் பொறுப்பாளியும் அல்ல. - -மருதபாண்டியன்- பத்திரிக்கையாளர்.