இந்தியா டுடே சுதந்திர தின விழாசிறப்பிதழில் இடம் பெற்றுள்ள கட்டுரை. நடிகர் அமிதாப்பச்சனுடையது.
தற்கால திரைப்படத்தயாரிப்பையும் அதன் வசூலையும் வெற்றியையும் இணைத்துப் புரிந்துகொள்ள முயற்சிக்கும், உதவும் கட்டுரை. இவ்வளவு நுணுக்கமாகத் தற்கால திரைப்படத்தயாரிப்பை அவர் அணுகியிருக்கும் விதம் ஆச்சரியத்தைத் தந்தாலும், அவர் மீது குடை விரித்திருக்கும் புகழ் வெளிச்சத்தையும் அதற்கான விலையையும் அவர் எப்படி முன்வைக்கிறார் என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. என்றாலும், முக்கியமான, தவிர்க்கமுடியாத கட்டுரை.
//
"சில காலம் முன்புவரை ஒரு படத்துக்கு 100 கோடி ரூபாய் வசூல் என்பது கிடைக்காத ஒன்று. இப்போது இந்தத் தொகையை எட்டிவிடும் படங்கள் மற்ற படங்களை விட வெற்றி கண்டவை என்று அளவுகோல் வைக்கப்படுகிறது. முன்பு வெள்ளிவிழா, பொன்விழா, வைரவிழா கண்ட படங்கள் என்று வகைப்படுத்தப்பட்டதைப் போன்றதே இதுவும்.
கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேன் ஐம்பதோ நூறோ அடித்தால் அவருக்குக் கிடைக்கும் கைத்தட்டல் போன்றது இது. 49 அல்லது 99 ரன்கள் எடுப்பதெல்லாம் ஒரு சாதனையாக கருதப்படுவதில்லை. 100 என்கிற அந்த எண் தான் நம் மனதிற்குள் மைல்கல் என்று பதிவாகிவிட்டது.
எழுபதுகளிலும் எண்பதுகளிலும் வெளிவந்த பல பொன்விழா படங்களின் வசூலை இன்றைய ரூபாய் மதிப்பில் அவை 100 கோடியைத் தாண்டிவிடும். சில படங்கள் 200 கோடியையும் தாண்டக்கூடும். ஜெய் சந்தோஷி மா வெளியான அதே வாரம் ஷோலேயும் வெளியானது. ஜெய் சந்தோஷி மா ஒரு குறைந்த பட்ஜெட் படம். ஷோலேவைவிட பத்தில் ஒரு பங்கு தொகைக்கே அப்படம் விற்பனையானது. முதல் ரிலீஸில் ஷோலேவுக்கு சமமாக அந்தப் படமும் வசூல் செய்தது. நட்சத்திர மதிப்புடன் வெற்றிகண்டதால் எல்லோரும் ஷோலே குறித்துப் பேசினார்கள். அந்தப் படம் குறித்து யாரும் பேசவில்லை (நானும்).
வெற்றியின் அளவை வெளிப்படுத்த நமக்கு துறை சார்ந்த ஏதோ ஒரு சொல் தேவைப்படுகிறது. பொன்விழா என்பது இப்போது 100 கோடி ஆகியிருக்கிறது. திரைப்படம் உருவாக்குபவர்கள் எல்லோருமே தங்களுடைய படம் நன்றாக வசூல் செய்யவேண்டும் என்று கவலைப்படுகிறார்கள். வளமான தயாரிப்பாளர்கள் தங்கள் படத்துக்கு 100 கோடி வசூலை உத்தரவாதம் தரக்கூடிய நட்சத்திரங்களையே ஒப்பந்தம் செய்கிறார்கள்.
25லிருந்து 50 வாரங்கள் வரை படங்கள் ஓடும் என்கிற காலம் போய்விட்டது. ஆகவே வெற்றி இன்றைக்கு பணத்தால் அளவிடப்படுகிறது. 100 கோடி என்பது கணிசமான வியாபாரம்தான். ஆனால் வருவாய், செலவு, விறபனை ஆகியவற்றின் கணிதம் சற்று சிக்கலானது. 50 கோடி செலவில் தயாரான படத்திற்கு விளம்பரத்திற்கு ஆகும் செலவு 15 - 20 கோடி. வட்டியுடன் சேர்த்து மொத்தமாக 70 கோடி ஆகிவிடும். ஆக இந்தப் படம் இதன் செலவுத்தொகையான 70 கோடியை விட இரு மடங்காக அதாவது 140 கோடிக்கு வசூல் செய்தாக வேண்டும். எத்தனை படங்கள் இப்படி வசூல் செய்கின்றன என்று பட்டியலிட்டால் சுவாரஸ்யமாக இருக்கும். மாறாக, 12 - 15 கோடி செலவில் தயாரான படங்கள் 60-70 கோடி வரை வசூலிக்கின்றன. அதாவது படத்தின் செலவைவிட நான்கு மடங்கு அதிகம். 100 கோடி பட்ஜெட் படங்களுடன் ஒப்பிடுகையில் இந்த குறைந்த பட்ஜெட் அதிசயங்களே சிறந்தவை.
100 கோடியில்தான் படம் உருவாக்கவேண்டும் என்கிற அழுத்தத்துக்கு இயக்குநர்கள் இன்றைக்கு அடிபணிவதில்லை. படைப்பாற்றலை இத்தனை ரூபாய்க்குத்தான் தரவேண்டும் என்று வற்புறுத்துவது நகைப்பிற்குரியது. எல்லா மக்களும் கண்டு களிக்கக் கூடிய அளவில் அவர்களை மகிழ்விக்கவும் திருப்திப்படுத்தவுமே கதைத் தேர்வு, திரைக்கதை, பட உருவாக்கம் ஆகிய அனைத்தும். அவை எப்படி லாபமாகவும் வருவாயாகவும் மாறுகின்றன என்பது கூறுவது கடினமானது. வார இறுதியில் மட்டுமே பெரும்பான்மையானவர்கள் வாசிப்பார்கள் என்பதை மனதில் வைத்து ஒரு பத்திரிகையிலோ அல்லது நாளிதழிலோ முதல் பக்கத்தில் என்ன வரவேண்டும் என்று தீர்மானிப்பது போலத்தான் இதுவும். இன்றைய படங்களின் வெற்றியில் வார இறுதிநாட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவைதான் ஒரு படத்தின் வெற்றிக்கும், தொடர்ந்து ஓடுவதற்குமான அளவுகோலாக விளங்குகின்றன.
ரேட்டிங் எனப்படும் வரிசைப்படுத்துதல் என்னைப் பொறுத்தவரை முரண்பாடான ஒன்று. ஏன் ஐந்து அல்லது ஏழு நட்சத்திரங்கள் பெற்றால் ஒரு படம் சிறந்த படமாகிறது? ஏன் 20 அல்லது 30 அல்லது 10 நட்சத்திரங்கள் எல்லாம் கிடையாதா? அளவீடுகள் எல்லாம் குறியீடுகள்தான். அவற்றுக்கென தனியே தர்க்கங்கள் உள்ளன. படம் குறித்து சந்தையிலிருந்து வரும் எதிர்வினை இந்த அளவீடுகளில் செல்வாக்கு செலுத்தும். இன்றைக்கு மல்டிபிளெக்ஸ் தியேட்டர்களும் டிக்கெட் விலையும் அதிகமாகிவிட்ட சூழலில், நடுத்தர வர்க்கத்து மக்களின் வாங்கும் திறனையும் கருத்தில் கொண்டுதான் கொடுக்கும் பணத்திற்கேற்றவகையிலான படத்தைத் தருவதும் வசூல் வேட்டையும் நடக்கின்றன. முதல் மூன்று நாட்களில் வசூலாகும் கணிசமான தொகையுடன், தொலைக்காட்சி உரிமைக்கான தொகையையும் சேர்த்தால் போட்ட பணத்தை எடுத்துவிடலாம். இன்றைக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில், உலகின் எல்லா மூலைகளுக்கும் ஒரு படம் குறித்த நம்பகத்தன்மை நொடியில் போய்ச் சேர்ந்துவிடும்; திருட்டுப் பிரதிகளும்தான். திரையரங்கத்தில் வெளியிட்டபின் மூன்று வாரங்கள் கழித்து தொலைக்காட்சியில் படம் வெளியாகிறது. 7- 10 ஆண்டுகளுக்கு ஒரு படத்தை விநியோகஸ்தர்களிடம் அளிக்கும்போது, என்ன மாதிரியான ரேட்டிங்கை அந்தப் படம் பெறும் என்பதை கற்பனை செய்துபாருங்கள். இதே காரணத்துக்காகத்தான் மாதமிரு முறை வெளிவந்த இந்தியா டுடேவும் வார இதழாக வெளிவருகிறது. விரைந்து அனைவருக்கும் விஷயங்களை தரவேண்டும் என்பதுதான் நோக்கம். 15 நாட்கள் கழித்துத்தான் ஒரு செய்தி சென்றடையும் என்றால் அது பழையதாகிவிடும்.
ஆனாலும், பார்வையாளர்களுக்கு இந்த 100 கோடி குறித்தான கவலையெல்லாம் இல்லை. நீங்கள் நன்றாக நடித்திருப்பதை மட்டுமே அவர்கள் ரசிக்கிறார்களே தவிர அது ஈட்டக்கூடிய 100 கோடிக்காக அல்ல. நல்ல புரிதல் உள்ள பார்வையாளர்கள் நல்ல கதை உள்ள படம் என்று கூறப்படும் படங்களைப் போற்றி வந்திருக்கின்றனர்; ஒரு வழக்கமான வணிகப் படத்தின் உள்ளடக்கத்துக்காக அதை ஏளனம் செய்ய எந்தக் காரணமும் இல்லை என்றாலும் கூட.
இருவிதமான படங்களும் வெளிவரவேண்டும் என்பது முக்கியம். நம் சமூகத்திற்கு மட்டுமல்ல, எந்த சமூகத்திற்கும் தொடர்புடையுதாகவே இவ்விரு வகை படங்களும் இருக்கும். ப்ளேபாய், டைம் இரண்டுமே ஒரே சந்தையில்தான் பெயர் பெற்றன.
என்னைப் பொருத்தவரை, என் படைப்பாற்றலை ஒரு குறிப்பிட்ட லாபத்தை ஈட்டும் நோக்கத்துக்காக செலவு செய்ய எண்ணுவது பேரழிவுக்கு இட்டுச் செல்லும். வெறும் பொருளாதார வெற்றி எனும் அளவுகோலை மட்டும் கொண்டு ஒரு படத்தை உருவாக்குவது என்பது மோசமானது."
//
நடிகர் அமிதாப்பச்சன்
நன்றி: இந்தியா டுடே
நன்றி: பத்திரிகையாளர் கவின்மலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக