நம் குரல்

'சோளகர் தொட்டி' நாவல் நாடகமாக வளர்ந்து வருகிறது!
கட்டியக்காரி நாடகக் குழு, 'சோளகர் தொட்டி'யை நாடகமாக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது.
அதன் முதல் கட்டப்பயிற்சிப் பட்டறை இரண்டு நாட்கள், (17, 18.08.13) குன்றத்தூரில் செம்பரம்பாக்கம் ஏரியை ஒட்டிய புல்வெளி அரங்கில் நடைபெற்றது.

ச. பாலமுருகனின் நாவலான 'சோளகர் தொட்டி'யை  நாடகமாக்கும் முகமாக ஶ்ரீஜித் சுந்தரம் கடந்த ஆறு மாதகாலமாக கட்டியக்காரி நாடகக்கலைஞர்கள் அனைவருக்கும் தேவையான உடற்பயிற்சிகளையும் இன்னும் இந்நாடகத்திற்குத் தேவைப்படும் நுட்பமான கலைப்பயிற்சிகளையும் அளித்து வருகிறார். இந்த முதல் பயிற்சிப் பட்டறையில் நானும் கலந்து கொண்டேன். 

நாளுக்கு நாள் அந்த நாடகம் பிரமாண்ட உருவமும் கற்பனையும் கொண்டு விரிந்து கொண்டே இருப்பதைக் கண்ணுறுகிறேன்.

இந்த முதல் பயிற்சிப் பட்டறை, இன்குலாப் அவர்களின் கவிதைக்கான நாடக அசைவுகளைக் கொண்டதாகவும் அதே சமயம் பழங்குடி மக்கள் மீதான அரச வன்முறைகளின் ஓலங்களையும் நினைவுகளையும் எழுப்புவதான படிமங்களைக் கட்டமைப்பதை அறிமுகம் செய்து வைப்பதாகவும் இருந்தது.

பொய்க்குற்றச்சாட்டுகளால் வன்முறை ஏவப்பட்டுக் காவல் நிலையங்களில் கொல்லப்படும் பழங்குடி மக்களின் உடல்கள் எந்த வித அறமும், அர்த்தமின்றி இரத்தக்கறைகளுடன் சாக்குமூட்டைகளாகக் கிடக்கும் அனுபவத்தை உணரச்செய்வதாக இருந்தது இந்தப் பயிற்சிப்பட்டறை.

தொடர்ந்து தம் உடல்களை, குறிப்பிட்ட அனுபவங்களுக்கு, பயிற்சிகளுக்கு ஒப்படைப்பதன் வழியாக நாடகக்கலைஞர்கள் எல்லோரும் மெல்ல மெல்ல பழங்குடி உலகுக்குள் நுழையத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

நாடகம் முழு வடிவத்தைப் பெற, இன்னும் குறைந்தது ஆறு மாதங்களாகலாம். அழிந்து போன நுட்பமான மானுட உணர்வுகளைக் கண்டறியவும்,  நம்மில் அந்த உணர்வுகளை மீட்டெடுப்பதும் தாம் இந்த நாடகத்தின் நோக்கம்.

மேலும், இந்திய அளவில், பழங்குடிமக்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளையும், மறுக்கப்படும் சமூகநீதிகளையும், புறக்கணிக்கப்படும் அதன் மனித உடலரசியலையும் மேடையில் நிலை நிறுத்துவதை இந்நாடகம் தன் பயணப்பாதையாகக் கொண்டுள்ளது.

நண்பர்கள், தொடர்ந்து இந்நாடகத்தின் ஆக்கத்திற்கு ஊக்கம் சேர்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

கட்டியக்காரி நாடகக்கலைக்குழு

குட்டி ரேவதி
புகைப்படங்கள்: சுரேந்தர்

கருத்துகள் இல்லை: