நம் மாநிலத்திலிருந்து மதுவை ஒழிப்பது அவ்வளவு எளிதன்று. டாஸ்மாக் போன்ற கடைகள் அரசினால் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டு, அடித்தட்டு மக்களைப் பார்த்துக் குறிவைக்கப்பட்ட 'மெளனமானதொரு படுகொலையே' என்பதை நாம் அறியாமல் இருக்கிறோம். ஏழையின் வயிற்றில் அடிப்பது என்பதன் உச்சபட்சமான அரசுத் செயல்திட்டம் இது.
இது மதுவிற்கு எதிரான குருட்டுத்தனமான பிரச்சாரம் அன்று. மதுவால் பூண்டோடு அழிக்கப்படும் அடித்தட்டு, உழைக்கும் மக்களை முன்நிறுத்தி, மது எப்படி அவர்கள் குடும்பத்தில் ஒரு சாபமாகிறது என்று விளக்கும் சிறு முயற்சியே. 'டாஸ்மாக்'கில் கிடைக்கும் மது வகைகள் இயல்பில் தரமானவை அன்று. அவை கிட்டத்தட்ட, நாள் முழுதும் உடல் வருந்த உழைத்த மனிதனின் உடலுக்குள் ஊற்றப்படும் அமிலமே. இதனால், உழைத்து வீடு திரும்பும் மனிதன் உடல் களைப்பாற்ற அருந்தும் போது எந்த வகையிலும் அது நலன் பயப்பதில்லை. மாறாக, உடலை மெல்ல மெல்ல அரித்துத் தின்னக்கூடியது. விரைவிலேயே வெவ்வேறு புதிய நோய்களையும், பெரிய நோய்களையும் வரவழைத்து முடக்கும். அதிலிருந்து நோயாளியைக் காப்பாற்ற பணமோ ஆற்றலோ இல்லாத நிலையில், சத்தமில்லாமல், ஒவ்வொரு வீட்டிற்கும் மரணத்தை அழைத்து வரக்கூடியது. இப்படி, இத்தகைய தரம் குறைந்த மதுவினால் எவ்வளவு பேர் ஒவ்வொரு நாளும் சாகிறார்கள் என்ற கணக்கெடுப்பு அவசியமாகிறது.
அது மட்டுமன்றி, உழைத்து வீடு திரும்புபவர்கள் தங்கள் ஒரு நாள் வருமானத்தில் மூன்றில் இரண்டு பங்கு மதுவிற்குச் செலவழித்து விட்டு, வீட்டிற்குக் கொண்டு போய் சேர்க்கும் அந்த ஒரு பங்கு வருமானத்தை வைத்து குடும்பத் தலைவிகள் என்னனம் வீட்டை நிர்வகிப்பது? இத்தகைய வீடுகள் பெரும்பாலும் இருண்டும், கண்ணீர் நிறைந்ததாகவும் தான் இருக்கும். அந்த ஓர் ஆணை நம்பியதாகவும் தான் இருக்கும்.
மதுவிற்கு ஆண்கள் இரையாகிவிட்ட நிலையில், கல்வி மற்றும் வேறு எந்த சமூக வாய்ப்பும் கிடைக்கப்பெறாத அவர்களுடைய வீட்டுப்பெண்களின் நிலை மிகவும் அவலம் நிறைந்தது. இது பற்றி எழுதத்தொடங்கினால் அது நிறைவுறாத சோகக் காவியமாகிவிடும். அந்த அளவுக்குத் துயர் நிறைந்ததாக இருக்கிறது. ஆனால் இது வெளிப்படையாக ஒரு சமூக இழப்பாகவோ, கவனம் செலுத்தக்கூடிய ஒன்றாகவோ பார்க்கப்படுவதில்லை.
மேலும் இந்த மதுக்கொடுமை, மேல் தட்டு குடும்பங்கள் அல்லது முற்போக்கு வாதிகள் முன்மொழியும் மதுப்பழக்கத்துடன் ஒப்பிடமுடியாது. அவர்களிடம் 'மது அருந்துதல்' ஒரு பொழுதுபோக்காகவும் வேடிக்கை நிறைந்ததாகவும் இருக்கிறது. மதுவின் தரம், உடன் அருந்தும் உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை எல்லாம் வேறு வேறு. ஒட்டுமொத்தமாக டாஸ்மாக் மது வகையறாவையும் உயர்தர மது வகையறாவையும், இரு வகையான குடிப்பழக்கங்களையும், அதற்கான பின்னணிகளையும் ஒப்பிட்டுப் பார்க்கமுடியாது.
அரசின் வருமானத்தில் பெரும்பங்கு வருமானம் டாஸ்மாக்கிலிருந்து வருவதாக அறியப்பட்ட நிலையில், மாணவர்களின் மதுவிற்கு எதிரான போராட்டம் எனக்குப் பெருத்த அச்சத்தையும் பதட்டத்தையுமே ஏற்படுகிறது. இம்மாதிரியான போராட்டங்களையோ, மக்கள் செயல்பாடுகளையோ பொருட்படுத்தாத அரசாகவே, ஜெயலலிதா அவர்களின் அரசு தொடர்ந்து இயங்குகிறது. மேலும், நம் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும் ஒரு திட்டமாகவே, அரச இயந்திரமாகவே 'டாஸ்மாக்' என் கண்களுக்குத் தெரிகிறது.
அதிலும், இந்த அரசிற்கு நம் மக்கள் நலனில் அக்கறை இருக்கும் என்பதெல்லாம் விவாதத்திற்கு அப்பாற்பட்டது. 'டாஸ்மாக்'கை இழுத்து மூடுவது என்பது, 'கூடங்குளம் அணு உலையை' இழுத்து மூடுவது போன்றே தொடர்ப் போராட்டத்தை வேண்டுவது!
குட்டி ரேவதி
7 கருத்துகள்:
இரண்டிலும் சீரழிவது உறுதியாகி விட்டது...!
நீங்கள் அச்சப்படுகின்றீர்கள்? அவரோ பிரதமர் பதவிக்கு ஆசைப்படுகின்றார்.
தமிழ்நாடு மட்டும் மயக்கத்தில் இருந்தால் தப்பு. மொத்த இந்தியாவிலும் இதே நிலை உருவாக்கினால் நல்லது தானே?
இந்தியா முழுவதையும் மயக்கமுறச்செய்யலாம் என்று சொல்கிறீர்களா?
இலக்கிய வெளியில் இருந்தும் நம் பண்பாட்டு வெளியில் இருந்தும் பார்த்தால், 'மது அருந்துதல்' என்பது நம் சமூகத்தின் கொண்டாட்டத்திற்கான வெளிப்பாடு. கொண்டாட்ட நிலையைத் துறக்கமுடியாது.
'டாஸ்மாக்' நமக்கு ஆகாது என்கிறேன். ஆபத்தை விளைவிக்கிறது என்கிறேன்.
மது உற்பத்தி, தரம் மற்றும் விற்பனை அனைத்தையும் மறு ஆய்வு செய்து ஊழல் குறைந்த, தரம் சோதிக்கப்பட்ட (குறைந்த பாதிப்புடன் கூடிய) விற்பனை திட்டத்தை அமல் படுத்துவது தான் மிகப்போராடினால் நடக்கக்கூடிய காரியம். மற்றபடி பேசிப்பயன் இல்லை என தோணுகிறது
மதுவின் தரம் மற்றும் விற்பனை ஒழுங்குமுறை இதை தரம் உயர்த்த அரசு நினைத்தால் உண்டு மற்றபடி மதுவை அழிப்பது கடினம்
உண்மை தான் மது அருந்தல் கொண்டாட்டத்தின் வெளிப்பாடு, அளவறிந்து தரமறிந்து பருகுவோருக்கு. அத்தகைய நிலையில் கள் அல்லவா பிரதானமாய் விற்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் கள் தடை செய்யப்பட்டு கள்ளச் சாராயம் பெருகியது, அதனைத் தடுப்பதாய் கூறி தரமில்லா சாராயத்தைக் கொடுக்கின்றார்கள். டாஸ்மாக் சரக்கையும், அயலக சரக்கையும் பருகியவன் என்பதால் அடித்துக் கூட முடியும் டாஸ்மாக் சரக்கு மெல்லக் கொல்லும் கள்ளச் சாரயமே. அத்தோடு டீக்கடை போல ஒவ்வொரு கிமீக்கு ஒரு டாஸ்மாக், வயது வரம்பின்றி எவரும் வாங்கலாம் என்ற நிலை, பள்ளி, கல்லூரிக்கு அருகிலும் கூட உள்ளன. இவை எல்லாம் அரசின் திட்டமிட்ட செயலே ஆகும். ஆனால் மதுவுக்கு எதிராக இன்று போராட்டம் தொடங்கியுள்ளோரின் பின்புலம் அறியாது மக்கள் வெகுசன போராட்டத்தில் குதிக்க முடியாது?! இல்லை எனில் அரசியல் காய் நகர்த்தல்களில் பலியாக்கப்படும் பலியாடுகளாய் நாம் மாறுவோம்..
மதுவின் தரம் குறித்த கருத்து மிக சரியே. நல்ல சரக்கை குடித்து இருபது வருடத்தில் மரிப்பவன் இந்த சரக்கை குடித்தால் இரண்டு வருதத்திலேயே பரம பதம் எய்தி விடலாம்.
கருத்துரையிடுக