நம் குரல்

கணையாழி இதழ் வெளியீடும் இலக்கியப்பண்பாடும்




கணையாழி மீண்டும் வரப்போகிறது என்றும் அதற்குப் படைப்புகள் தரமுடியுமா என்றும் அதன் ஆசிரியர் ம.ராசேந்திரன் அவர்கள் கேட்டார். இதழ்களுக்கென்றே சில கவிதைகளை எழுதி அனுப்பினேன். கடந்த சில வருட இணைய புரட்சிக்குப் பின்னும் இம்மாதிரி இதழ்களுக்குக் கவிதைகள் அனுப்பி, அவை பிரசுரமாகும் வரைக் காத்திருந்து, இதழ் வாங்கிப் பார்ப்பது உற்சாகத்தையும் பரவசத்தையும் ஒரு சேரத்தருகிறது. எழுத வந்த தொடக்கக் காலங்கள் இவ்வாறு ஒவ்வொரு இதழுக்கும் கவிதைகள் அனுப்பி அவை தொடர்ந்து பிரசுரமாவதை எதிர்பார்த்திருப்பேன். இவ்வாறான தொடர்ந்த முயற்சிக்குப் பின் ஒரு கவிதை தொகுப்புக்கான கவிதைகள் சேர்ந்ததும் பதிப்பாளரை அணுகி அவற்றை நூலாக்குவது தான் என் வழக்கமாக இருந்தது.



இம்மாதிரியான முறை, எழுதும் மனதுக்கு பள்ளிக்கூடக் காலங்களின் அதே மெனக்கெடல் உணர்வைத் தருகிறது. அதிலும் சீரிய இதழ்களுக்குக் கவிதைகள் எழுதுவது, அவ்விதழின் பிற படைப்புகள் பெறும் அடையாளங்களுக்கு இடையில் நம் கவிதைகள் இடம்பெறுவது நாம் முன்வைக்கும் சிந்தனைகள் வழி நாம் நிற்பதற்கான நெஞ்சுரத்தையும் அது குறித்த விசாரணைகளையும் தொடர்ந்து நமக்கு எழுப்பும். இது இன்னும் இன்னும் நமதென முன்மொழியும் சிந்தனையின் வழி நுணுகிய பயணத்தையும், ஒற்றையான நடையையும்  கூட மேற்கொள்ள ஊக்கப்படுத்தும். காலந்தோறும் கவிதையின் உருவம் தன் கைப்பிடித்து தனக்குள்ளே வளர்ந்து வரும் அனுபவத்தை சீரிய இதழ்ப்பணியில் தொடர்ந்து ஈடுபடுபவர்களால் உணரமுடியும்.



கணையாழி இதழ் வெளியீடு  மிகவும் தீவிரமானதொரு தொனியில் நிகழ்ந்தேறியது. முந்தைய தலைமுறை படைப்பாளிகள் இலக்கியம் மீது கொண்டிருந்த நம்பிக்கையையும், படைப்புப்பணியில் இருந்த ஈடுபாட்டையும் வெளிப்படையாக உணரமுடிந்தது. இன்றைய இலக்கிய விழாக்கள் ஆர்ப்பாட்டங்களுடன் நடந்து நிறைவேறுவது வழக்கமாகிவிட்ட நிலையில், கணையாழி இதழ் வெளியீட்டு விழா முற்றிலும் மாறுபட்டிருந்தது. அடக்கமான உணர்வும் நெகிழ்ச்சியான அனுபவங்களும் அரங்கை நிறைத்தன. ஒவ்வோர் இதழும் இப்படியான பண்பாட்டுப் பாரம்பரியத்தைத் தான் வளர்த்தெடுக்க வேண்டுமோ என்றும் தோன்றியது. உரையாடல்களைத் தொடர்வும், படைப்பூக்கப்பணிக்குப் புத்துயிர்ப்பு அளிக்கவும் இத்தகைய பண்பாடு உதவும்!


அவ்விதழில் பிரசுரமான என் கவிதைகளில் ஒன்று, ‘அச்சு இயந்திரம்’!


அச்சு இயந்திரம்

சிறிது முறையான பயிற்சிக்குப் பின்பான
சில பிழைகளுக்குப் பின் தான்
நாம் தடதட தடவென்று மொழியத் தொடங்கினோம்
உணர்ச்சிகளின் ஏடுகளைத் துப்பத் தொடங்கினோம்
உடலின் முழக்கமே  மொழியாய்ப் பிறக்கும்
ஓலைகள் மீது நற நறவென்று கீறத்தொடங்கினோம்
வெள்ளைக்காகிதங்களென்று ஏதுமில்லை
நம் செங்குருதிக் கறைகளைத் தொடர்ந்து அச்சாக்கிய வண்ணமே
காலம் மீறி உடலை இயக்கினோம் எழுதினோம்
காலச்சக்கரங்களின் கீழ் அரைபடும் வேகத்தில்
நெரிபட்டன நம் குரலொலிகள் ஆனாலுமென்ன
நம் பெயரின் முத்திரை அழித்துப்
பிரதிகளைக் கேட்பவரிடம்
நம் கருவனத்தின் கறைகளால்
ஆக்கிக் கொடுப்போம் அசலான பிரதிகளை
பிரசவிப்போம் பித்தமேறிய பாடல்களை
அதிர்ச்சியுற்ற கூக்குரல்கள்
நம் யாக்கையின் காகிதங்களை மோதட்டும் பிளிறட்டும்
கிழிக்கட்டும் என்றாலும்
ஆக்கிக் கொடுப்போம் அசலான பிரதிகளை
அறிவுக்கு விலை பேசுவோரிடம்
நம் வேட்கையுற்ற உடல்களைப் பிரதிகளாக்கி
நாற்சந்திகளிலும் விதைத்து வருவோம்
சுவரொட்டிகளாய்ப் பூசிவருவோம்
காண்போர் முகம்வியர்க்க
குத்திய பச்சையாய் மையாய் 
துளைகளாய் தளும்புகளாய் காயங்களாய்
பிரதிகளாய்ப் பிரசவித்து ஓயோம் தாமே நாம்
கருப்பனுவல்களாய்க் காடொடுங்கிக் கிடந்து
காணாமல் போனவற்றை
காட்சிகளாக்கிச் செதுக்குவோம் எவர் நெஞ்சிலும்
காகிதத்தின் நெற்றியில்
நம் பெயர் அச்சாகியதா என
ஒருமுறை முதுகைப்புரட்டிப் பரிசோதித்தும் கொள்வோம்



குட்டி ரேவதி
நன்றி: ‘கணையாழி’ கலை இலக்கிய இதழ்

1 கருத்து:

ஆபுத்திரன் சொன்னது…

கணையாழி மீண்டும் வருவது குறித்து மகிழ்ச்சி...
உங்களது கவிதை -- பின்வரும் எனது கவிதைகளில் ஒன்றை நினைவுபடுத்தியது....

-------------------

நீர்த்த வார்த்தைகள்
மறத்த உணர்வுகள்
அர்த்தமற்ற ரசனைகள் …
இவை மத்தியில் என் வரிகளை
அரூவ வெளியில் புகையும் மலை முகடென‌
எழுதி முடிதிருக்கையில்
வெறும் சாம்பலாய் மிஞ்சிவிடுகிறது மனம்,
பீனிக்ஸ் பறவையை மட்டும் மீதமாய் விட்டு விட்டு ….

சூழ் கொள்ளும் மகரந்தம் என
எழுதி எழுதி எழுதி… … …
கசக்கி எறிந்த பின்
அவற்றை அறிவியல் கூடமாக்கி ஆராயும்
வக்கிர‌ உணர்வுகளில்
என் வார்த்தைகள் சிதைந்து உருமாரிப்போகின்றன.
இதில் என் எழுத்திற்கு மறுபிறப்பு கொடுத்ததாய் பெருமிதம் …
அதற்கு மேலும் நீண்டுவிடும் சிலாகிப்பு ‍ ‍என‌
சூடு கண்ட பூனைகள் வெற்று பாத்திரத்தை உருட்டி அலைகின்றன,
என் கவிதை அறைகளில் ….

என் எழுத்துக்களை சுற்றி ஓநாய்கள் …
நிர்வாணமாய் என் உணர்வுகள்…
என் எழுத்துக்களின் ஆடைகள்
சதைகளோடு பிடுங்கி எறியப்படுகின்றன.
பிய்ந்து தொங்கும் ரத்த சதைகளோடு
பிறந்த மேனியாய் ஓடுகிறன‌ என் வரிகள்,
திறந்த திசை நோக்கி….

இத்தனைகுமான பிண்ணனியில்
தொடரும் என் கவிதைகள்
பரந்த வெளியில் கூவித்திரியும் ஊர்க்குருவியாய்
நிறைந்து வழிகிறது ..
வெட்ட வெளிக்கு பழகியவன் காதுகளுக்கு
அவை தப்பி போகின்றன.