அடுப்பு
ஒவ்வொரு முறையும் கிழவியின் பேச்சில்
அடுப்பு பற்றிய அங்கலாய்ப்பே மிகையாய்
அப்படி ஒன்றும் பொங்கிப்போட
அவளுக்கென்றும் ஆளில்லை
ஆனாலும் அடுப்பின் சம்பவமே
அவளின் அலுப்பிலெல்லாம் புகையும்
‘அடுப்பில பூனை உறங்குது!’
‘அடுப்பு தான பொம்பிளைக்கு ஆற்றல் சாதனமாக்கும்!’
‘அடுப்பு ஊதறதுக்குப் புல்லாங்குழலு எதுக்கு?’
‘ஈர விறகுப்புகைச்சலில் அடுப்பிலே தீ ஏறாது!’
‘சூடுகண்ட பூனை அடுப்பங்கரையில சேருமா, என்ன?’
‘பிச்சைக்காரனுக்குப் பயந்து அடுப்பை மூட்டாமல் இருப்பேனா?’
‘அடுப்பு ஊதினா கண்ணுல தீப்பொறி விழத்தான செய்யும்?’
‘யார் மூட்டினாலும் அடுப்பு எரியத்தான் செய்யும்!’
‘அடுப்புல தீ எரிஞ்சா வயித்துப்பசி தீருமா?’
‘அடுப்புல நெருப்பில்லாம புகையுமா?’
வாதம் செய்தால் ஊதிப்பெரிதாக்குவாள்
அடுப்பின் நினைவுகளைக் கிண்டிக்கொண்டிருந்த கிழவி
மழையடங்கிய இரவில் ஒருநாள்
மரித்துத் தனியே எரிந்த போது தெரிந்தது
அடுப்பு என்று தன் கருப்பையைத் தான் கூறினாள் என்று.
சொற்களும் சொல்மயக்கங்களும் கலந்த சிக்கலான மொழியின் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ என்று தோன்றுகிறது. பல சமயங்களில் நாம் என்ன நினைக்கிறோமோ அதையே அர்த்தப்படுத்தும் சொற்களை நாம் பயன்படுத்துவதில்லை. அல்லது, சொற்களின் அர்த்தத்தைப் பிறழ்வாகப் புரிந்து கொண்டு வேறு அர்த்தங்களுடன் நம்மை அணுகுகிறார்கள். ஒரே சொல்லை நீங்களும் நானும் வேறு வேறு அர்த்தத்தில் புழங்குகிறோம். ஆனால், நீங்கள் உங்களுடைய அர்த்தத்தின் ஒற்றைக் கயிற்றிலும் நான் என்னுடைய அர்த்தத்தின் ஒற்றைக் கயிற்றிலும் தொங்கிக்கொண்டிருக்க, இரண்டையும் ஒரே சொல்லாக்க அல்லது ஒரே அர்த்தமாக்க ஊசலாடுகிறோம். அல்லது ஒரே சொல்லை மீண்டும் மீண்டும் கவிதையிலும் பேச்சிலும் உரையாடலிலும் வேறு வேறு அர்த்தத்தில் பயன்படுத்தி அச்சொல்லின் வேறு காலத்தைச் சென்றடைந்திருக்கும் போது, அந்தச் சொல்லின் கற்கால அர்த்தத்துடனோ அல்லது வழமையான சலிக்கப்பட்ட அர்த்தத்துடனோ நீங்கள் அதே சொல்லை வேறு ஒரு சொல்லாக்கி என்னை நெருங்குகிறீர்கள், நான் வெறுமனே ஒரு கவிஞர் மட்டுமே என்பதை மறந்து போய்.
நாம் மொழியை அணுகவும் அதைக் கையாளவும் ஒரு நேரடியான முறையைக் கண்டடைய வேண்டியிருக்கிறது. அதற்கு ஒரே வழி, ஒருவரையொருவர் உணர்வு ரீதியாக அணுகுவதும், அதற்கு மொழியை ஒரு துணைக்கருவியாக மட்டுமே பயன்படுத்துவதும். சொற்கள் இவ்விடத்தில், நவீன அர்த்தத்தையும் தற்கால அரசியலையும் பெற்று பொலிவுறுகின்றன. சொற்கள், இங்கே தான் தம் சுமையை இறக்கி வைத்து இளைப்பாறுகின்றன. அனாவசியமான சொற்கள் நெஞ்சுக்கூட்டிற்குள் தணலாய்க் கனன்று கொண்டிருக்கவேண்டியதில்லை. உணர்வின் பிணைப்புகள், அச்சொற்களின் தீயை அணைக்க வல்லன. மொழியியலாளன், சொற்களுக்கு உணர்வை ஆணையிடட்டும். கவிஞரோ, உணர்வுகளிலிருந்து சொற்களை அவிழ்த்துவிடட்டும்.
’அடுப்பு’ கவிதை கணையாழியில் பிரசுரமாகியிருக்கிறது. மேற்குறிப்பிட்டிருக்கும் சொல்மயக்கம் பெண்ணின் தரப்பில் கூடுதல் அர்த்தம் பெறுவதையும் அர்த்தம் அழிவதையும் சுட்ட முயன்றிருப்பாளாய் இருக்கும் அந்தக் கிழவி!
குட்டி ரேவதி
நன்றி: கணையாழி
3 கருத்துகள்:
சொற்களின் மயக்கங்களையும் அவற்றை உபயோகிப்பதில் நேரிடுகின்ற குழப்பங்களையும் பற்றிய பதிவு அற்புதம் ! தங்களுடைய அருமையான வலைப்பக்கத்தை அறிமுகப் படுத்திய விகடனுக்கு நன்றி.
This is the first time i read ur writing. Got very good feel after reading this.. expecting more from u... way 2 go..
(Sry, couldnt make it in tamil)
நன்றி, நிஷாந்தன்!
Thank you, Shankar!
கருத்துரையிடுக