நம் குரல்

ஆலன் கின்ஸ்பெர்க்கின் ஊளை





சமீபத்தில் ஒரு பெண் கவிஞருக்கு அறிவிக்கப்பட்ட விருது அறிக்கையில், ’சித்தாந்த முகமூடிகள் எதையும் அவர் அணிந்து கொள்வதில்லை’ என்று எழுதப்பட்டிருந்தது. பெண்களோ இலக்கியவாதிகளோ சித்தாந்தம் எதையும் தன் சிந்தனையில் ஏற்றுக்கொள்ளக்கூடாது, அல்லது அவ்வாறான ஒன்றை உருவாக்கி விடக்கூடாது என்று சமூகம் எவ்வளவு தெளிவாக இருக்கிறது, பாருங்கள்!


புதியதோர் உலகம் என்பது புதியதொரு மனமாகத்தான் இருக்கமுடியும். மனிதர்கள் அவரவர் மனநிலைகளிலேயே ஆர்வமுற்று  அவரவரிலேயே தொலைந்து போனால் புதியதொரு மனமும் சாத்தியமில்லை, புதியதோர் உலகமும் சாத்தியமில்லை என்பது வில்லியம் பரோஸின் நிலைப்பாடு.  இதுவே கவிஞன் ஆலன் கின்ஸ்பெர்கின் வாதமுமாக இருந்தது. சிலதினங்களுக்கு முன் ‘Howl’ என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். ஆலன் கின்ஸ்பெர்க்கின் ‘Howl’ என்ற மிகவும் பிரபலாமான, அதிகமும் விமர்சிக்கப்பட்ட கவிதையை அடிப்படையாகக்கொண்ட திரைப்படம். இந்தக்கவிதையை அவர் எழுதிய போது அது ஆபாச முத்திரைக் குத்தப்பட்டு தொடர் விசாரணைக்கு உள்ளானது. கின்ஸ்பெர்க் சுய பாலீர்ப்பு மிக்கவராய் இருந்தார். அதை வெளிப்படையாக வெளிப்படுத்தினார். 1950 – களில் அமெரிக்காவில் அது குற்றப்பூர்வமான நடவடிக்கையாகக் கருதப்பட்டது. ஆனால், கின்ஸ்பெர்க் அத்தகைய பாலுறவைத் தடையின்றி கொண்டாடினார்.


‘Howl’ கவிதையும் தடையிலாத  உக்கிரமான தொனியில் வெளிப்பட்ட நீள்கவிதை. இருண்ட தவிர்க்கப்பட்ட தயங்கிய உலகத்தைப் பட்டவர்த்தனமாக அதே சமயம் கவிதையின் உச்சபட்ச சாத்தியப்பாடுகளையும் மொழி வெளிப்பாட்டையும் இணைத்திருக்கும். கவிஞர்கள், பல சமயங்களில் கவிதை குறித்த அவநம்பிக்கைகளுடன் வாழப்பணிக்கப்பட்ட நம் சமூகத்தில், இக்கவிதையையும் அதைச் சூழ்ந்த எதிர்ப்பையும், கின்ஸ்பெர்க்கின் மனநிலையையும் புரிந்து கொள்வதும் பொருத்திப்பார்ப்பதும் மிகவும் கடினம். அத்திரைப்படம், ஒரே சமயத்தில் கவிதை வாசிப்பையும், நீதிமன்றத்தில் அக்கவிதை குறித்த விசாரணையையும், அக்கவிதையில் அவர் கையாண்டிருக்கும் படிமங்கள் அசைப்படமாக்கப்பட்டிருப்பதுடன், கவிஞனுடனான ஓர் அந்தரங்க உரையாடலையும் நிகழ்ந்த்தியிருக்கிறது. படம், அக்கவிதையின் பரப்பையும் அது சார்ந்த கவிஞனின் மனநிலையையும் விட்டு வெளியேறாது, கவிதையைப் போன்றே ஓர் உக்கிரமான வடிவமாகியிருக்கிறது.


2010 –ல் எடுக்கப்பட்ட இப்படம் ராப் எஃப்ஸ்டைன் மற்றும் ஜெஃப்ரி ஃப்ரீட்மென் ஆகியோரால் இயக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தை ஒரு கவிதைப் பயிற்சிப்பட்டறையில் திரையிடுவதாகத் திட்டமிட்டிருந்தேன். ஆனால், முதல் வகுப்பிலேயே கவிதைக்கும் அப்பயிற்சியில் இடம்பெற்றிருந்த இலக்கிய ஆர்வலர்களுக்குமான  இடைவெளியை உணர்ந்த எனக்கு அதைத் திரையிடுவதற்கான தருணம் வாய்க்கவில்லை.  கவிதையை மற்ற இலக்கிய வடிவங்களுடன் சேர்த்திணைத்துப் பார்க்கும், அலட்சியப்படுத்தும் ஒரு தட்டையான சமூக வடிவில் கவிதை வெளிப்பாட்டுக்கான வெளிகளும், அதன் நோக்கங்களும் பயன்களும் குறித்த அக்கறையும் இருக்காது தானே! ‘il postino’ போலவே இந்தப்படமும் கவிதை என்றால் என்ன என்பதையும் அகக்கிடக்கையாகக் கொண்டிருக்கிறது. கின்ஸ்பெர்க்கின் நேர்காணல்களைத் தொடர்ந்து தேடி வாசித்து முடித்தேன். அவரது அக உலகத்தின் பெரும் பரப்பையும் தெளிவான வெளிச்சத்தையும் சிந்தனை ஆழத்தையும் கவி ஆளுமையையும் நேர்காணல்களில் தாம் உணரமுடியும். அவர் கவிதைகளுக்கு நிகரான சிந்தனைத் தளங்களைக் கொண்டிருக்கின்றன, அவரது நேர்காணல்கள். 


ஆலன் கின்ஸ்பெர்க், பால்நிலை வெளிப்பாட்டை வெளிப்படையாகச் சொன்னதைக் கொண்டு அவரை வெறுமனே ஒரு ப்ளேபாய் என்ற உருவிற்குள் நாம் அடைக்கமுடியாது. வாழ்வு முழுக்க வெவ்வேறு கவிஞர்களுடன் இணைந்து பல சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார். புதிய சித்தாந்தங்களைத் தெளிவுபடுத்தியிருக்கிறார். அவரவர்  கவித்துவத்தின் முழுமையை வெளிப்படுத்தும் பணி தான் முக்கியமானது என்பதை தன் செயல்பாடு தோறும் வலியுறுத்துகிறார். தனிமனித சமூக அக்கறையை கவித்துவமான பணியாக உருமாற்றுவதில் பலர் தோல்வியடைந்திருக்கிறார்கள். கின்ஸ்பெர்க், தான் ஓர் அரசியல் கவிஞர் என்று முத்திரைக்குத்தப்பட்ட போதெல்லாம் அதைக்கடுமையாக எதிர்ப்பதன் வழி இதை வென்றிருக்கிறார். அவர் கவிதையினை  வாசிக்கும் போதே எதிரொலிக்கும் சப்தத்தையும் சொற்கள் கொண்டிருப்பதைப் போல இருக்கும். ஒரு கூக்குரல் அதன் வரிகளின், அர்த்தங்களின் அடியில் தங்கியிருக்கும்.  புதிய சொற்கோர்வைகளும், வரிகளின் நீட்சிகளும் வாசித்து முடித்தப்பின்னும் அந்தச் சப்தத்தை எழுப்பிக்கொண்டே இருக்கின்றன.

குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: