எப்பொழுதுமே கூர்மையான தரிசனமும் தரிசனத்தின் வெளிச்சமும் தாங்காமல் சொற்களுக்குள் ஒளிந்து கொண்ட கவிஞர்களும் எனது ஞாபகத்தில் இறந்துபோய்விட்டதாகவே தோன்றுகிறார்கள். அவர்களை நிகழ்வாழ்வில் தேடிக்கண்டடைய முடிவதில்லை. சமூகத்தின் சம காலத்திற்குப் பொருந்தாத சட்டைகளுடன் உலவும் மனிதர்களாய் அவர்கள் அடையாளம் பெறாமல், சமூகக் கொதிநிலையைத் தாங்கவியலாமல் ஆவியாகிவிடுகின்றனர். மாறாக அவர்களின் கவிதைகள் உயிர்த்துடிப்புடன், சொற்களால் சுவாசித்த வண்ணம் புத்தகங்களால் தம்மை மூடிக்கொண்டு இயங்குகின்றன. கவிஞனின் மன்றாடல்களெல்லாம் சொற்கள் வழியாகவே என்றான பின், தனது உடலை எங்கேனும் ஒளித்து வைத்துக்கொள்ள வேண்டியது தானே!
கவிதையின் மூதாதையருடன் ஓர் இளங்கவியின் இரத்த உறவு என்பது காலத்தின் பின்னேயே ஓடாமல் எதிர்த்திசையில் மூச்சிரைக்க ஓடுவதானது. ஒரு கவிஞரின் ஒற்றைப்புத்தகத்தை நிதமும் சுமந்து அதில் எல்லாச் சொற்களையும் மென்று ஆனால் எந்த ஒரு சொல்லையும் தொண்டைக்குழிக்குள் விழுங்கமுடியாமல் திணறும் அந்நினைவின் சுகவாசனையோடு திரியும் ஒரு சூலுற்ற பெண்ணைப் போல இளங்கவிகளை போதம் தந்து அலைக்கழிக்கும் மூதாதையரில் ஒருவர் நகுலன்.
பழமையின் எரு தின்று புதிய இலைக்கிளைப்புகளுடன் விழித்தெழும் மொழி, நவீனக் கணித வடிவெடுக்கிறது. அவரது கவிதைகளில். சொற்களை மெருகேற்றி அவற்றின் இடம் மாற்றி, கூட்டிணைப்பதெல்லாம் அனுபவவெளியில் காட்டும் அயராத உழைப்பின் விளைச்சலே. நவீனத்தைச் சொற்களின் குறியீடுகளால் இயங்கும் ஒரு புனைவாக ஆக்கும் வலிமை வேறெப்படி கைகூடும்?
‘நினைவு ஊர்ந்து செல்கிறது
பார்க்கப்பயமாக இருக்கிறது
பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை’
புலன்களின் கூருணர்வு மேலோங்கியிருக்கும் உடலாகவும், பின் வார்த்தைகள் மொத்தமும் சலித்த உடலாகவும் என உடலைப்புரட்டிப் புரட்டி உடலுடன் மீண்டும் சொற்களைக் கோர்க்கும் பணியை அனுதினமும் செய்த நகுலனிடம் நெடுவேனிலின் அகண்ட வெளியில் மூர்ச்சித்துத் தொலையும் கிழமனிதர்களின் அசையாமையும் உண்டு. வெறும் சொல்விளையாட்டாய் ஓய்ந்துவிடும் கவிதை அனுபவத்தைத் தனிமனிதக்காட்சிவெளியாய் அவரவர்க்கேற்றவாறு விரித்துக்கொடுக்கும் ஒரு மரபின் சமுத்திரமும் அதில் நீந்தும் நவீனமும் ஓர் எளிமையான திறனன்று.
‘உள்ளப் பொந்துக்குள்ளே
பதுங்கியிருக்கும் ஒரு பச்சைக்கிளி அப்பா?’
சித்தர் மரபின் மூலச்சொற்களையும் படரொளியையும் இருளையும் எவரேனும் சுமந்து நிற்க வேண்டியிருக்கிறது, அதன் அத்துணை பாரத்தோடும், அது புறக்கணிக்கப்பட்ட பழியினோடும், சுமக்க நேர்ந்த குற்றவுணர்வின்றியும். ஒவ்வொரு நொடியும் சில ஒளி ஆண்டுகளாய் நீட்சியடைய அலாதி பொறுமையையும் கைகொள்ள வேண்டியிருக்கிறது. அவ்வாறே மரணம் வந்து கிள்ளி தலை சரியும் வரையிலும் கூட.
மரணம் என்பது வந்துவந்து போகும் ஒரு நிகழ்வாகவே அவரது எல்லா கவிதைகளிலும் தொனிக்கிறது.
‘ஒருவர்
சாவதும்
ஒருவர்
இருப்பதும்
வெறும் சாவு
என்பதை விட
இது
மிகவும் குரூரம்
இதைச் சொன்னதும்
சுசீலா தான்’
(குரூரம்)
சுசீலாவும் கூட நகுலனுடன் அவரது மீமெய்வெளியை ஆக்கிரமிக்கும் புனைவின் உருவே அன்றி காதலின் வரைவோலை அன்று.
‘நான் என்னைப்
பார்த்துக் கொண்டிருந்து
வாழ விரும்பவில்லை.’
சமூக ஓட்டோடு ஒட்ட விரும்பாமல் சகமனிதர்களை மனநோயுற்றவர்களாய் நோக்கி, அவர்களின் நொய்மையைத் தேர்ந்தெடுத்த அருஞ்சொற்களின் ஒற்றடத்தால் குணமாக்கும் கவிஞனே மனநோயாளியாய்ப் பார்க்கப்படும் விபரீதமெல்லாம் தின்ற சொற்களையே வாந்தியெடுக்கும் கவிஞர்கள் எனப்படுவோர் சமூகத்தின்தான் நிகழும்
‘அவ்வமயம்
நான் என்னையே
பிட்டுத்தின்றேன்.
அவ்வமயம்
நிழல்போல் வந்தபேய்கள்
அவைபோல் சென்றன’
(அஞ்சலி)
கவிஞன், தனது தனிமையில் தான் என்பது பல்லுருவமெடுக்கும் மனிதனாய், நிறைய உருக்களை அழிப்பதும், மற்றைய உருக்களை அலையவிடுவதும் எனச் சொல்லின் திராணியில் உயிர் செய்விக்கின்றான். நாய்களின் நிழல் அலையும் இரவைத் தாண்டி வெளியே வந்து திரும்பிப் பார்க்கையில் நகுலன், ‘ஒரே தெப்பமாக நனைந்த தலை’யுடன்!
குட்டி ரேவதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக