நம் குரல்

ஒரு பெண், எழுத்தாளராவதற்கு என்னென்ன வேண்டும்?
இக்கேள்விக்குக் கடந்த காலத்தில் வேறுபட்ட பல எழுத்தாளர்கள் தம் அனுபவங்கள் வழியாக அளித்த பதில்களின் தொகுப்பை இங்கு பதிவு செய்கிறேன். இதில் எண்ணற்ற படைப்பாளிகள் கண்டறிந்த நூதனமான பாதைகளும் தீர்வுகளும் கூட இருக்கின்றன. அவரவர்க்கேயான முறைகளில் இதைக் கண்டறிந்திருக்கக் கூடும். அவரவர்க்கேயான தேவைகளும் கூட, எழுத்தில் தீவிரமாக ஈடுபடத் தூண்டியிருக்கின்றன. என்றாலும் நான் கீழே தொகுத்திருப்பவை, ஒரு சீரிய எழுத்தாளராகத் தன்னைக் கட்டமைத்துக் கொள்ள விரும்புபவர்களுக்கு உதவக்கூடும்.பல்வேறு கட்டங்களில் பெண்களின் எழுத்தை விட, அளிக்கப்பட்ட குறுக்கமானதொரு வாழ்க்கையில் தன் படைப்புப்பணியை எப்படி செழுமைப்படுத்திக் கொள்வது அல்லது தக்கவைத்துக் கொள்வது அல்லது தொடர்ந்து தீவிரப்படுத்திக் கொள்வது என்பது பெரிய விவாதமாகவே விரிந்திருக்கிறது.   பல்வேறுபட்ட பாத்திரங்களை ஏற்று இயங்குவது பெண்ணுக்கு அன்றாடமும் சவாலானதொரு செயல்பாடே. ஒரு பெண் தன்னை முழுநேர எழுத்தாளராக வைத்துக்கொள்வதற்கு என்னென்ன தேவை?


எழுதுவதற்கானதொரு மொழியும் அதில் புலமையும்

தனக்கேயானதொரு அறை (இயன்றால் ஒரு பூட்டு சாவியுடன்)

முழுமையான பொருளாதார விடுதலை

விட்டு விடுதலையாகி எழுத்தில் ஈடுபடுவதற்கான நம்பிக்கை

தன் உடல் மீது தனக்கேயான முழு உரிமை

ஊக்கமூட்டும் மரபார்ந்த வடிவங்களின் (இலக்கிய அமைப்புகள், சங்கங்கள், வாசகர் வட்டம், நூலகங்கள், விமர்சன மரபு) ஆதரவும், முன்மாதிரிகளும்.

தானும் ஒரு பலிகடாவாக மாறிப்போவதை மறுப்பதற்கான நெஞ்சுரம்

ஆர்ப்பாட்டமில்லாத வாழ்க்கைமுறையும் உடல் ஆரோக்கியமும்

இலட்சியங்களாலும் வெற்றிகளாலும் தன்னை வரையறுத்துக் கொள்ளாதிருத்தல்

தான் நம்பும், மானுட விடுதலைக்கான சித்தாந்தத்தில் எந்தத்தடையும் இல்லாது ஈடுபடுவதற்குத் தேவையான ஊக்கத்தைத் தனக்குத் தானே வளர்த்துக் கொள்ளல் 


அன்றாடமும் உழைப்பதற்கான இச்சை 

தனக்கே உரித்தான முறைகளில் தன்னை வரையறுத்துக்கொள்வதற்கும் தனக்குத் தானே கற்பித்துக் கொள்வதற்குமான தீர்மானம்

தனிக்காட்டில் இயங்கவேண்டியிருப்பதற்கான முன்னெச்சரிக்கையும் எந்த அற்பமான விமர்சனங்களுக்கும் செவிசாய்க்காது இருக்கும் கவனக்குவிப்பும்

இதையெல்லாம் எந்த வித பாதுகாப்பும் இல்லாத முறைகளில் இயக்குவதற்கும், நினைத்துப் பார்க்கவே சாத்தியமில்லாதவற்றை நினைப்பதற்கும், தான் வாசிக்க விரும்பியதொரு நூலையே தான் எழுதுவதற்கும் அவசியமான துணிவும் விருப்பமும்.

ஒட்டு மொத்தத்தில் தன் விடுதலையைத் தானே உருவாக்கிக் கொள்வதற்கான வேட்கையும் அதைச் சிதறாமல் கொண்டாடுவதற்கான பக்குவமும் நேர்மையும்.குட்டி ரேவதி
3 கருத்துகள்:

santhanakrishnan சொன்னது…

ஆண்களால் எழுத முடியாததை
எழுதுவதற்கான தனித்துவத்தை
விட்டுவிட்டீர்களே?

Shubashree சொன்னது…

மிகவும் நல்ல பதிவு... மீண்டும் படிக்க தூண்டுகிறது...சுபா

intelligent சொன்னது…

பல பெண் எழுத்தாளர்கள் உருவாகலாம்!!உங்கள் பதிவை படிப்பதன் வாயிலாக!!