நம் குரல்

'பெண் பத்திரிகையாளர்' என்ற அடையாளம்!

தொண்ணூறுகளின் இறுதி. தொடர்பியல் துறை பரவலாகிக் கொண்டிருந்த காலக்கட்டம். நான் திருநெல்வேலியில் சித்தமருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரம். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொடர்பியல் துறையுடன் நெருக்கமான தொடர்பும் நட்பும் எனக்கு ஏற்பட்டது. அவர்களுடைய பயிற்சிப்பட்டறைகளில் நானும் தொடர்ந்து கலந்து கொண்டேன். நான் எழுத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு அது ஒரு முக்கியமான காரணமாக இருந்தது. பத்திரிகைத் துறையைப் பெரும்பான்மையும் ஆண்களே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது போய், பெண்கள் பெருவாரியாக அத்துறையில் நுழையத் தலைப்பட்டதை நான் அப்பொழுது தான் கண்ணுற்றேன். அதுவரை, பத்திரிகைத் துறை என்பது ஆண்களுக்கு மட்டுமே என்று இருந்து வந்தது. பெண்கள் கைக்கு மொழியும் எழுத்தும் வந்ததும் எப்படி படைப்பிலக்கியத்தைத் தேர்ந்தெடுத்தார்களோ, அவ்வாறே பத்திரிகைத் துறையையும் தேர்ந்தெடுத்தார்கள்.

ஊடகங்களின் பணியிடங்களில் அமர்ந்து பெண்கள் வேலைசெய்யத்தொடங்கிய  காலத்திலும் இயல்பாகவே நிறைய பிரச்சனைகள் பெண்களுக்கு எதிராகத் தொடங்கின. அவர்கள் எழுதுவதில் குறை கண்டுபிடிப்பது தொடங்கி, அவர்கள் ஆளுமையைத் தாங்கிக் கொள்ளமுடியாத நிலை என பரவலாகப் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைச் செயல்கள் விரிந்து கொண்டே தான் இருந்தன. இன்றும், அதையெல்லாம் தாங்கி எதிர்த்து நிற்கும் பெண் பத்திரிகையாளர்களை நாம் இனம் காண முடியும். பெயர் சொல்லியும் குறிப்பிடமுடியும். அந்த அளவிற்கு, தமிழ்ப் பத்திரிகைத்துறையின் பெண் ஆளுமைகள் தொடர்ந்து ஆண்களுக்கு இடையே நின்று வீர்யத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இலக்கியத்தில் எப்படி பெண் படைப்பாளிகள் உருவாகியது, ஆண் படைப்பாளிகளிடம் நெருடலையும் பதட்டத்தையும் தந்ததோ அதே போன்ற நிலையைப் பத்திரிகைத்துறையிலும் உணரமுடிந்தது. ஆனால், இலக்கியத்தரம், உருவம், கருப்பொருள், மொழி என்ற வெவ்வேறு காரணங்கள் காட்டிப் பெண் படைப்பிலக்கியவாதிகளை ஓரங்கட்டியது போல், பெண் பத்திரிகையாளர்களை ஓரங்கட்டமுடியாது போனது. சமூகத்தின் மையத்தளத்தில் நின்று ஆண்கள் எழுதிய, பேசிய பிரச்சனைகளை பெண்கள் தரப்பில் நின்று பேசும் பத்திரிகையாளர்களாக இவர்கள் இருந்தனர். பெண்ணுரிமை நோக்கிய பயணத்தில், 'பெண் பத்திரிகையாளர்' உருவாக்கம் என்பது மிகவும் சமூக முக்கியத்துவம் வாய்ந்தது. முதன்மையானது. எந்த நிலையிலும் சமரசம் இல்லாதது. இச்சமூக அடையாளம், எதன்பொருட்டும் பெண்கள் இழக்கத்தேவையில்லாதது.

சமீபகாலங்களில், நிறைய ஆண் தோழர்கள் பெண்ணுரிமை பேசும் இடத்தை நோக்கித் தம்மைத்தாமே நகர்த்திக் கொண்டு வந்துள்ளனர். இயல்பான உரையாடல்கள், விவாதங்கள், முகநூல் பரிமாறல்கள் இவையெல்லாம் இந்தப் பரிணாமம் ஏற்பட வழிவகை செய்துள்ளது. நான் அறிந்த நிறைய ஆண் நண்பர்களே பெண்களின் உரிமைகளில் தேர்ந்த நிலைப்பாடு எடுப்பவர்களாகவும் திருத்தம் செய்பவர்களாகவும் இருக்கின்றனர். ஆனால், சிலர் தன்னுடைய நிலையே கேள்விக்குள்ளாகும் போது இந்த நிலைப்பாட்டைச் சொல்வதில் ஏற்படும் தடுமாற்றத்தையும் உணரமுடிகிறது.

ஆக, பெண்களின் 'பத்திரிகையாளர்' என்ற அடையாளம் சமரசம் செய்யக் கூடியது அன்று. மேலும், அது தனிப்பெண்களுக்கான அடையாளமும் அன்று. ஒரு சமூகத்தின் முன்னோக்கிய நகர்வும் கூட. இவ்விடத்தில் இன்று வெவ்வேறு ஊடகங்களில் பணிபுரியும் அத்தனைப் பெண் பத்திரிகையாளர்களையும் நான் நினைவுகூர்கிறேன். ஏனெனில், அவர்கள் எல்லோரையும் வெவ்வேறு சூழ்நிலைகளில் தனிப்பெரும் ஆளுமைகளாக அறிந்து உணர்ந்திருக்கிறேன். அவர்களுடைய சமூகச்செயல்பாட்டையும் எல்லோர் கண்முன்னும் வெளிச்சப்படுத்த விரும்புகிறேன்.

தமயந்தி, ஜெயராணி, இளமதி, கவின்மலர், சுகிதா, வானவில் ரேவதி, கவிதா முரளீதரன், பிரியா தம்பி, நந்தினி, ஜெனிஃபர் மற்றும் எண்ணற்றோர். நிறைய பெயர்கள் சட்டென்று நினைவுக்கு வரவில்லை. மன்னிக்க. இவர்கள் தாம் பொதுச்சமூகத்தையும் சமூகவிழிப்பு கொண்ட சமூகத்தையும் தம் சிந்தனைகளால் இணைப்பவர்கள். குறிப்பாக, ஒடுக்கப்பட்டு, குடும்பம் மற்றும் பிற சமூகப் பெட்டிகளில் அடைந்து கிடப்பவர்களைப் பொதுச்சமூகத்திற்கு அடையாளப்படுத்த நம் சமூகத்தின் தரப்பில் இருக்கும் ஒரே நம்பிக்கை. இலக்கியவாதிகள் எழுதுவது ஓய்ந்தால் கூட இவர்கள் எழுதுவதும், இயங்குவதும் ஓய்ந்ததே இல்லை. அல்லும் பகலும் இவர்கள் இயக்கத்தைக் கூர்ந்து கவனிப்பவர்கள் இவர்களின் பணியை, வெறும் தொழில்முறைப் பணியாக மட்டுமே சொல்லிவிடமுடியாது.   இல்லை என்றால் இவர்கள் வெறுமனே சினிமா, ஃபேஷன், சமையல், குடும்பம் என்று பொதுச்சமூகத்திற்குக் கவர்ச்சியான பொருள்களை மட்டும் பற்றியே எழுதிவிட்டுப் போயிருந்திருக்க முடியும். 


இவர்களின் பணியை அங்கீகரிக்காமல், நிராகரிப்பது என்பதே கூட, சனாதனச் சிந்தனையே. மத, சாதி அடையாளங்களையும் அதன் சூழ்ச்சிகளையும் அறியாத நிலையே 'பெண் பத்திரிகையாளர்' என்ற அடையாளத்தின் முக்கியத்துவத்தையும் பொறுப்பையும் உணராது இருக்கும். வெவ்வேறு புறக்கணிக்கப்பட்ட சமூகங்களிலிருந்தும், பெண்களாயிருந்தும் தொடர்ந்து இயங்கி இயங்கியே ஒரு பத்திரிகையாளர் என்ற அடையாளத்தையும், உரிமையையும் இவர்கள் வென்றுள்ளனர். இவர்கள் நம்மிடையே எண்ணிக்கையிலும் பலத்திலும் பெருகுவதும், ஆரோக்கியமாகச் செயலாற்ற முடிவதும் தாம், நம் சமூக மாற்றத்தைக் குறிப்பிடுவது. இவர்கள் எல்லோருமே தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்றாலும், இவர்கள் எவருமே என்னைப் பொறுத்தவரை தனி நபர்கள் இல்லை. வெவ்வேறு விடுதலை உரிமைகளைக் கோரும் பெண் சமூகத்தினை அடையாளப்படுத்தும் ஆளுமைகள்.  மேலும், 'பத்திரிகையாளர்' என்பது பெண்களைப் பொறுத்தவரை ஒரு பிரபலத்தைக் குறிக்கும் அடையாளமும் அன்று. சாதாரண ஓர் அடையாளமும் அன்று. பெண்ணியச் சிந்தனையை உள்வாங்கிய ஒரு சமூக அரசியலை மீண்டும் மீண்டும் அறிவுறுத்தி உயரே பறக்கும் கொடி!
குட்டி ரேவதி

4 கருத்துகள்:

kumaresan சொன்னது…

பெண்கள் பத்திரிகையாளர்களாகப் பரிணமித்தன் வரலாற்று முக்கியத்துவத்தையும் சமுதாயத் தாக்கத்தையும் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். பெண்ணியம் குறித்து எனது புரிதல்களும் அக்கறைகளும் வளர்ந்ததில் சக பத்திரிகையாளர்களாகவும் தோழர்களாகவும் உள்ள பெண்களோடு நடத்திய உரையாடல்களுக்கு தலையாய பங்கு உண்டு. அந்த நினைவைக் கிளறிவிட்டமைக்கு நன்றி குட்டி ரேவதி.

பத்திரிகையாளர் என்றால் உடனே ஒரு ஆணின் படிமம் தோன்றுவதையும் பெண் பத்திரிகையாளர் என்று அடையாளப்படுத்த வேண்டியிருப்பதையும் தகர்த்த நாள் வரட்டும். அந்த நாள் வரும் வரையில் இந்த அடையாளப்படுத்தல்கள் தொடரும்தான்.

குட்டி ரேவதி சொன்னது…

நன்றிகள், குமரேசன்!

சீனி மோகன் சொன்னது…

உங்கள் கருத்துகளில் பலவற்றையும் ஏற்க முடிந்தாலும் பெண்ணியச் சிந்தனையை உள் வாங்கிக் கொண்ட பெண்களாக வெகு சிலரே பத்திரிகையாளர்களாக உள்ளார்கள் என்பதையும் மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

madhu madhu சொன்னது…

நிச்சயம் ..