நம் குரல்

கவிஞர் வாலியைத் தொடர்ந்து சந்திக்கவேண்டும் என்று நினைத்திருந்தேன்!





கவிஞர்களில் வெகுசிலரே இப்படி! 'மரியான்' படத்தின் இரு பாடல்கள் அவர் எழுதும் போதும் அவருடன் இருந்து, சூழ்நிலையை விவரிக்கும் பொறுப்பு எனக்கு இருந்தது. சந்தித்ததுமே, உற்சாகத்துடன் உரையாடத்தொடங்கினார். என் எல்லா கவிதை நூல்கள் பற்றியும் அறிந்திருந்ததைக் குறிப்பிட்டுத் தான் எல்லாவற்றையும் அறிந்து வைத்திருப்பதைச் சொல்லி நகைச்சுவையாக என்னை மிரட்டினார். அவர் பாடலில், நானும் வரி எடுத்துக் கொடுத்தால், 'வரியைப் போட்டுக்கோ! ஆனால், உரிமத்தொகை எல்லாம் எனக்குத்தான்!' சரியா என்று எந்தச் சூழ்நிலையையும் நகைச்சுவை உணர்வு மேலிட வைப்பதில் வல்லவராய் இருப்பார். நீண்ட நாட்கள் பழகிப் புரிந்து கொண்டிருந்த உணர்வை, முதல் கணத்திலேயே என்னிடம் ஏற்படுத்திய பெருந்தன்மை கொண்டவர்.

ஏ. ஆர். ரஹ்மான் அவர்கள் சொல்வது போல், அவருடைய ஞானமும், அன்பும் எவரிடமும் காணமுடியாது என்பதை நானே உணர்ந்திருக்கிறேன். பெருந்தன்மையிலும்! மூத்தப்படைப்பாளிகள் சிலர் எப்பொழுதும் வெறுப்பும் அகங்காரமும் மேலிட இருக்கும்போது, வாலி அவர்கள் இதற்கெல்லாம் மாறாக இருந்தார். இசையின் கூறுகளை உணர்ந்து உடனுக்குடன், வரிகளை எடுத்துக் கொடுக்கும் வேகத்தில் அவருக்கு இணை அவர் தான் என்பதை நேருக்கு நேர் உணர்ந்திருக்கிறேன். 'நேற்று அவள் இருந்தாள்' பாடலில் அவருடைய கவித்துவ முதிர்ச்சியை எளிமையாக வடித்துக் கொடுத்திருப்பார். ஓர் இரவின் ஒரு மணி நேரத்தில் இயக்குநர் பரத்பாலா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நான் மூவரும் அவர் இல்லத்திற்கே சென்று அந்தப் பாடலைப் பெற்றோம்.

எல்லாவற்றையும் விட, திறந்த மனதுடன் எதையும் அணுகக்கூடியவர். இளையவர்களிடம், அவர்கள் மனநிலைக்கு எழும்பி நின்று உரையாடக் கூடியவர். மொழியில் அவருடைய ஞானத்தை 'திரைப்படங்கள்' எவ்வளவு பயன்படுத்திக்கொண்டனவோ என்பது சந்தேகத்திற்குரியதே. எங்கள் இசை இயக்குநருக்கு மிகவும் பிடித்தமான பாடலாசிரியர் அவர் தான் என்பதை நான் அறிவேன். ஏனெனில், அந்த அளவுக்குக் கூர்மதியுடன் பாடலுக்குள் நுட்பமாய் சில கருப்பொருட்களையும், தன் அனுபவத்தையும் மறைத்தும் நிறைத்தும் எழுதும் பாடலாசிரியர் எவரும் இல்லை. அவருடைய  நினைவாற்றல் தான் அவரை எப்பொழுதும் இளமையாகக் காட்டியது. பொதுவாக, இது போன்ற நேரடியான புகழ் வெளிச்சத்தில் இருக்கும் மனிதர்களிடமிருந்து நான் விலகியே இருப்பதுண்டு. ஏனெனில், தன் வெளிச்சத்தின் கூச்சத்தை நம் மீதே வீசும் மனிதர்கள் தான் நிறைய பேர். 


வாலி அவர்களுடனான சில நாட்பழக்கத்திலேயே அவருடைய அணுகுமுறையும், அன்பும், திறமையும், உழைப்பும் என்னை வெகுவாக ஈர்த்தது. தொடர்ந்து அவரைச் சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்!





குட்டி ரேவதி

1 கருத்து:

sukumar சொன்னது…

vaali is always great.