கருணைக் கொலை என்பது ஒரு விவாதமாகக் கிளம்பியிருக்கும் நிலையில் அதைப் பற்றிய சில கேள்விகளை அருணா சான்பாக் வாழ்வில் நடந்த சம்பவங்களுடன் இணைத்துப் பதில் தேடுவது விவாதத்தை இன்னும் தெளிவாக்கும். முப்பத்தியாறு வருடங்களுக்கு முன் அருணா, மும்பையின் கே.இ.எம் மருத்துவமனையின் ஆய்வுக்கூடத்தில் பணி புரிந்து வந்தார். ஆய்வுக்கூடத்தில் மருந்துப் பரிசோதனைகளுக்குப் பயன்படுத்தும் நாய்களைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் அருணாவினுடையது. நாய்களுக்குக் கொடுக்கப்படும் உணவைக் களவாடியதற்காக அங்கு பணிபுரிந்த சோகன்லால் பார்த வால்மீகி என்ற வார்ட்பாயை அருணா தொடர்ந்து கண்டித்து வந்திருக்கிறார். இதனால், எரிச்சலடைந்த வால்மீகி, அருணாவை வல்லாங்கு செய்ததுடன், அவளை நாய்களைப் பிணைக்கும் இரும்புச் சங்கிலியால் கழுத்தை இறுக்கி, கடுமையாகத் தாக்கி இரத்தவெள்ளத்தில் விட்டுச் சென்றிருக்கிறான். நரம்பு மண்டலம் பலமாகத் தாக்கப்பட்டு பார்வையை இழந்ததுடன் பேசும் ஆற்றலையும் இழந்துவிட்டாள். அன்று மயக்க நிலையை அடைந்த அருணா இன்று வரை முப்பத்தாறு வருடங்களாகக் கோமா நிலையில் இருக்கிறார். ஆறுதலளிக்கும் விஷயம், அன்றிலிருந்து இன்று வரை அந்த மருத்துவமனை செவிலியரே அருணாவின் உடல்நலத்தைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துவருகின்றனர். வேதனையளிக்கும் விஷயம், அருணாவின் மீது பாலியல் வன்முறையைச் செயல்படுத்திய சோகன்லால் பார்த வால்மீகி, வெறுமனே திருட்டுக்குற்றத்திற்கான தண்டனையை மட்டுமே அனுபவித்து மீண்டது.
இந்நிகழ்வைப் பின்புலமாக வைத்து சில சமூக அவலங்களைப் புரிந்து கொள்ளலாம். ஆண்கள் தங்கள் வன்மங்களையும் பழிவாங்கல்களையும் பெண்கள் மீது செலுத்தும் ஒரே வடிவம், வல்லாங்காவே இருக்கிறது. சென்ற வாரம் கூட, எழுபது வயது மூதாட்டி ஒருவர் சில இளைஞர்களால் வல்லாங்கு செய்யப்பட்டிருக்கிறார். ஆக, இளமையோ, வயதோ கூட ஒரு பொருட்டு இல்லை. ஆனால், பழிவாங்குவதற்கு ஆண்கள் தேர்ந்தெடுக்கும் வழி, வல்லாங்கு ஒன்றே. இது, கடந்த காலங்களில் தீவிரப்பட்டிருக்கிறது. சிறு குழந்தை முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை எல்லோரும் இந்நிலைக்கு தொடர்ந்து ஆளாகின்றனர். சமூகம் ‘இழிவு’ என்று வரையறுக்கப்பட்டிருக்கும், தன்னுடன் இணக்கமான உறவில்லாத பிற ஆணுடனான பாலியல் உறவு என்பதே பெண்கள் மீது வலுக்கட்டாயமாகவும் முறையற்ற வடிவிலும் திணிக்கப்படுகின்றது. இச்செயல் தொடர்ந்து கொண்டிருப்பதும், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதும் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகள் நம்மிடையே எந்நிலையில் இருக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.
முப்பத்தாறு வருடங்களாக, அம்மருத்துவமனையின் அக்கறையின் பராமரிப்பில் இருக்கும் அருணாவின் நிலை பொதுமக்கள் கவனத்திற்கு மீண்டும் வந்திருப்பது பிங்கி விரானி, அருணாவைப் பற்றிய ஒரு நூலை எழுதிய பின்பு தான். இவர், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்து, ‘பிட்டர் சாக்லேட்’ என்ற நூலை எழுதியிருக்கிறார். இந்த நூலை ஏற்கெனவே நான் வாசித்திருக்கிறேன். குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்த பல்வேறு முக்கியமான நிகழ்வுகளையும் விளக்கி, அதன் பின்னால் இயங்கும் மனித உளவியலையும் ஆராயும் நூல். இவற்றை வெறுமனே ஓர் அவலமாக எண்ணி, மறுத்து ஒதுக்கிவிட்டு, ஆனால் அதை ஒரு குற்றமாகப் பார்க்காத உளவியலையும் விரிவாக அலசும் அருமையான, அவ்வகையான முதன்மையான நூல். இவரே அருணாவின் வாழ்வைப் பற்றிய நூலையும் எழுதியிருக்கிறார். இவர், அருணாவைக் கருணைக்கொலை செய்ய அனுமதி கோரி வழக்கும் தொடுத்திருக்கிறார். ஆனால், கே.இ. எம். மருத்துவமனை நிர்வாகத்தினர் இதை மறுக்கிறார்கள். அருணா, கோமா நிலையில் இல்லை என்றும், சங்கீதத்தைக்கேட்கவும், மீனை உண்ணவும் விருப்பப்படுவதாகவும் கூறுகிறார்கள். என்றாலும் அவரது மூளை சுருங்கிப் போயிருப்பதாக, நீதிமன்ற உத்தரவுக்குப் பின்பான ஸ்கேனிங்கில் தெரிகிறது.
பிங்கி விரானி இந்நூலை எழுதுவதற்கான முயற்சியில் தொடர்ந்து சென்று அருணாவைச் சந்தித்திருக்கிறார். அருணாவிற்காக உணவுகள் எடுத்துச்சென்றும், அவளுடன் பாடியும் பேசியும் நேரங்கழித்தும் அவளைப் புரிந்து கொள்ள முயன்றிருக்கிறார். தொடர்ந்து படுக்கையிலும் தனது அசைவுகள் எதையும் தானே நிர்வகிக்கும் நிலையையும் இழந்து விட்ட இவருக்கு கருணைக்கொலையை அனுமதிக்கவேண்டும் என்று இவர் உச்சநீதி மன்றத்தை அணுகியிருக்கிறார். இந்தியச்சட்டம் 21, கண்ணியத்துடன் ஒருவர் சாவதை அனுமதிக்கவில்லை, கண்ணியத்துடன் வாழ்வதற்கான சட்ட உரிமையை மட்டுமே அளிக்கிறது. இந்நிலையில், அவ்வாறாக, அருணா கருணைக் கொலை செய்யப்படுவதை சட்டம் அனுமதிக்கவில்லை என்கிறது, நீதிமன்றம். இதுகாறும், அம்மாதிரியான மதிப்புடைய பெருமையுடைய வாழ்வையா அருணா வாழ்ந்திருக்கிறார் என்ற தர்க்கப்பூர்வமான கேள்விகளுக்குச் சட்டத்தில் இடமில்லை போலும். ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையில் ஆய்வுக்கூடப் பெண்மணியாக இருந்த ஒருவர், திருட்டுக் குற்றத்தை எதிர்த்ததற்காக, வல்லாங்கு செய்யப்பட்டிருக்கிறார். அதற்கான நீதி வழங்கப்படாததும், அது ஒருவருக்கான சட்டப்பூர்வமான உரிமையாகப் பார்க்கப்படாததும் வாழ்வுரிமையாகப் பார்க்கப்படாத சமூகத்தில் சாவதற்கான உரிமையைப் பற்றிப் பேச என்ன இருக்கிறது.
மருத்துவ முடிவுகள் அருணாவின் இந்நிலையை, நிரந்தரத் தாவர நிலை என்று கூறுகிறது. காய்காய்கறியைப் போன்றதொரு தாவர உடலாய் அருணாவின் உடலை வைத்துக் கொண்டிருக்கும் நிலையை, பிங்கி விரானி கடுமையாக ஆட்சேபிக்கிறார். இந்நிலையை அருணா சுய உணர்வுடன் இருந்திருந்தால் அனுமதித்திருக்கவே மாட்டார். சுயமரியாதையுடன் வாழ விரும்பும் ஒருவர் இப்படி இலை தழையைப் போன்று வாழ்வதை, வாழ்க்கைக்கான கண்ணியமென்று கொள்ளக்கூடாது என்பது பிங்கி விரானியின் வாதம். இன்னொரு வாதம், மருத்துவமனையில் உள்ளவர்கள் அருணாவின் மீது காட்டும் அன்பை பிங்கிவிரானியின் கோரிக்கை, புறக்கணிப்பதாகும் என்று கூறுகிறது. மருத்துவமனையில் இருப்பவர்களே, பிங்கி விரானிக்கு எதிரானதொரு போராட்டத்தையும் நிகழ்த்தினர். பிறிதொரு வாதம், மதப்பூர்வமானதாயும், சம்பிரதாயமானதாயும் இருக்கிறது. அதாவது, கடவுள் அளித்த இந்த உடலுக்கு, மரணத்தை வழங்கும் உரிமை மனிதனுக்கு இல்லை என்கிறது, கத்தோலிக்க மதச் சிந்தனையோர் சபை. இந்துமதச் சிந்தனையாளரோ, இந்தியச்சமூகம் அடிப்படையில் உணர்ச்சிப் பூர்வமானதொரு சமூகம் என்றும் ஒவ்வொருவருடைய வாழ்வும் முற்பிறப்பின் வினையால் தோன்றுகிறது. ஆகவே, இந்த வாழ்க்கையை இவ்வண்ணமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கின்றனர். இவ்வாறு பலவாறான விவாதங்களை முன்வைத்து அருணாவின் சுமை வளர்ந்துகொண்டே இருக்கிறது. கடவுள் கொடுத்த மனித உடலை வல்லாங்கு செய்வதற்கு மட்டும் மனிதனுக்கு உரிமை இருக்கிறதா? அல்லது, அருணாவை வல்லாங்கு செய்யும் உரிமத்தை முன்பிறப்பிலேயே அந்த வார்ட்பாய் பெற்றுவந்தாரா? இந்தக்கேள்விகள் நம் நெஞ்சில் எழாமல் இல்லை.
ஆனால், அருணா விஷயத்தில் முன்மொழியப்படும் கருணைக்கொலை வேறு. முதியவர்களை அன்புடன் பராமரித்துக்கொள்ள முடியாமல் அவர்கள் மீது செயல்படுத்தும் கருணைக் கொலை என்பது வேறு. இக்கருணைக்கொலை என்பதே பொருத்தமற்ற இரண்டு வேறுபட்ட நோக்கங்களால் உருவானதாக இருக்கிறது. கருணை என்றாலே அது கிழங்கு வகைகளில் ஒன்று என்றாகி விட்டது என்ற அர்த்தத்தில் கிண்டலடிப்பார் புதுமைப் பித்தன். கொலைகளில் இரண்டு வகை உண்டு என்கிறது பெளத்தம். அதாவது, கொலை செய்யவேண்டும் என்ற இச்சையில் கொல்கிறோமா, அல்லது தேவை கருதி கொலை செய்கிறோமா என்று புலால் உண்ணுதலையும் மனிதனின் அவசியங்களின் பொருட்டு உயிர்களைக் கொல்லுதலையும் தெளிவாக்குகிறார் புத்தர். கருணைக் கொலை என்பதை பொது நிலையில் வைத்து விவாதிப்பது மனித நாகரிகத்தின் கொச்சையான தன்மைகளைத் தான் வெளிப்படுத்தும் என்பதால், சம்பந்தப்பட்டவரின் வாழ்நிலை, வேதனை போன்றவற்றைக் கொண்டு தான் இதைத் தீர்மானிக்கவேண்டும். கருணையும் கொலையும் பொருத்தமற்ற தருணங்களில் வெளிப்படுத்தப்படுவதை முதலில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தொடர்ந்து பெண்கள் மீது செயல்படுத்தப்பட்டு வரும் வல்லாங்கை நிறுத்துவதற்கான சமூக உபகரணங்களை நாம் கண்டறிந்தே ஆகவேண்டும். திரைப்படங்களில், தொடர்ந்து கதைகளாக்கப்படும் ஓர் ஆணின் பழிவாங்கும் உணர்வும், அது எப்படி வெற்றிகரமாக நிறைவேற்றப்படுகிறது என்பதும், அதை வெற்றிகரமாக நிறைவேற்றுபவரே கதாநாயகன் என்றும் வழங்கப்படுவதே சமூகத்தின் நலனுக்கு முற்றிலும் எதிரானதாகும். ஆக, இது ஒரு சாதாரண வாழ்வில் இயங்கும் ஆணின் மனநிலையையும் பீடித்து இருக்கிறது. தனக்கு எதிராகக் குரலோ மறுப்போ காட்டும் ஒரு பெண்ணை, முடக்குவதற்கு பாலியல் வன்முறை தான் உற்ற ஆயுதம் என்பது தொடர்ந்து ஆண்களுக்கு சமூகம் போதித்து வரும்பொழுது அருணாவின் கோமா நிலையும் அவளுக்கு நிகழ்ந்ததும் பெண்களுக்கு எல்லாம் எச்சரிக்கையைத்தரும் ஒரு தொடர் உருவகமாக ஆகி நிற்கிறது.
குட்டி ரேவதி
நன்றி: அரும்பு