நம் குரல்

வெங்காயமும் பெண்ணியமும்




உமா சக்கரவர்த்தியின் ‘ஒரு பெண்ணியப்பார்வையில் சாதியும் பால்நிலைப்பாகுபாடும்’ நூலை முன்வைத்து…




உமா சக்கரவர்த்தி ஆங்கிலத்தில் எழுதிய, ‘Gendering Caste: Through A Feminist Lens” என்ற நூல் வ.கீதா அவர்களால் ஒரு பெண்ணியப்பார்வையில் சாதியும் பால்நிலைப் பாகுபாடும்‘ என்று தமிழ் மொழியாக்கம் பெற்று பாரதி புத்தகாலயத்தால் வெளியீடு பெற்றிருக்கிறது. சாதி மறுப்பு விவாதங்கள் அரசியல், வரலாறு, பண்பாடு சார்ந்து ஊக்கம் பெற்றிருக்கும் இக்காலக்கட்டத்தில், சாதிப்பாகுபாட்டை பெண்ணியப் பார்வையில் அணுகும் இந்நூல் மிகவும் முக்கியமானது. இத்தளத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் உமா சக்கரவர்த்தி, இந்நூலில் சாதி, பெண்நிலைப் பாகுபாட்டை நிறுவுவதில் எங்ஙனம் வெற்றி கொண்டது என்பதை காலம் மற்றும் அதன் வேறுபட்ட படிநிலைகளினூடாகத் தெளிவாக விளக்கியிருக்கிறார். இந்தியாவில் பெண்ணியத்தின் வேறுபட்ட தத்துவார்த்த விவாதங்கள் களத்திலும் அறிவார்ந்த துறைகளிலும் ஏற்கெனவே நிலைபெற்று இருந்தாலும், அவை சாதியைச் சார்ந்த விவாதிக்கப்படாமலேயே விடுபட்டதன் புதிர்கள் இந்நூல் வாசிப்புக்குப் பின் எவருக்கும் புரியக்கூடும்.



தொடக்கத்தில் சாதி என்பது உயர்சாதிப் பெண்களின் பாலியல் ஆற்றலைக் கட்டுப்படுத்தும் விதமாகத் தான் உருவமைப்புப் பெற்றிருக்கிறது. அதிலும், அவர்களின் கருவுறும் ஆற்றலைக் கட்டுப்படுத்துவதன் வழி, உயர்சாதியினரின் சமூக மதிப்புப் பேணப்படும் என்ற நம்பிக்கை சாதியமைப்பினுடையது. இத்துடன் நின்றுவிடவில்லை. பிறசாதிப் பெண்களுக்கும் இம்மாதிரியான சாதியின் வேறுபட்ட முறைமைகளை நிர்ணயிப்பதன் வழி, அதன் ஏற்றத்தாழ்வைத் தொடர்ந்து பேணமுடியும். இதிலிருந்து முற்றிலும் சமுதாய அமைப்பினால் விலகியிருக்கும் பழங்குடிப்பெண்களையும், இச்சாதிக்கட்டமைப்பு உள்ளிழுக்கும் தன் சமன்பாடுகளால் சாதியடையாளம் வழங்கமுடியும். அவர்கள் தாங்கள் ஏற்கெனவே பழகிவந்த பண்பாட்டு முறைகளுடன் இச்சாதி முறைமையையும் பின்பற்றலாம். இதனால் அவர்களும் இச்சாதி ஏணியில் பங்குபெற்றவராகிறார். இவ்வாறு, வெவ்வேறு குலப்பெண்கள் சாதி அடையாளம் பெறுவதை இந்நூல் தெளிவாக விளக்குகிறது.



எல்லாப் பெண்களும் ஒரே வகையான பெண்களல்ல என்பதும் வெவ்வேறு பெண்களின் பிரச்சனைகள் வெவ்வேறாகத்தான் இருக்கமுடியும் என்பதும் இந்நூலில் அழுத்தம் பெறுகிறது. குறிப்பாக, பெண்களின் பண்பாட்டுப் பிரச்சனைகளுக்கான தீர்வுகள், உயர்சாதிப் பெண், பிறசாதிப்பெண் என்ற பேதம் பாராது வழங்கப்படுவது, இன்னும் இன்னும் பெண்களின் பிரச்சனைகள் சிக்கலுடையதாயும், நிரந்தரமாகத் தீர்வற்ற நிலையை நோக்கித் தள்ளப்படுவதாயும் இருப்பது சாதிய முறைமைகளின் தந்திரம் என்பது இந்நூலில் பட்டவர்த்தனமாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. ‘கற்பு’ என்பதே ஆதிக்க உயர்சாதிப் பெண்களுக்காக விதிக்கப்பட்டது, என்ற நிலையில் இதற்கான தீர்வுகளை முன்மொழிந்து பிறபெண்களின் பிரச்சனைகளுக்கும் தீர்வாக்குவதன் அபத்தமும் புலப்படுகிறது. மேலும், இது சாதியப் புரிதலை புறம் தள்ளிய தீர்வாக இருத்தலையும் உறுத்தலையும் உறுதிசெய்கிறது.



ஆணாதிக்கமும் சாதியாதிக்கமும் ஒன்றையொன்று சார்ந்தும் பேணியும் உருத்திரட்சி பெற்றவை என்று சொல்லும் உமா சக்கரவர்த்தி, ஆதிகால சமூகப்பெண்ணின் நிலை எவ்வாறு படிப்படையாக பண்பாட்டு மாற்றமடைந்து தற்காலப் பெண்ணின் நிலையாகியிருக்கிறது என்பதை வரிசைக்கிரமமாக விளக்கியிருக்கிறார். இது இன்று பெண்கள் மீது செயல்படும் ஆணாதிக்கத்தைப் புரிந்து கொள்ள உதவுவதுடன் பெண்ணடிமைத்தனத்திற்கு தந்தைமையச் சமுதாயம் எவ்வாறு தன்னை தயார்படுத்திக்கொண்டிருக்கிறது என்பதையும் விளக்குகிறது. பெண்ணின் பாலியல் ஆற்றலும் கருவுறுதல் ஆற்றலும் வெகுவாகப்பிரமிக்கப்பட்ட நிலையிலிருந்து, பெண்ணின் பாலியல் ஆற்றல் மெச்சப்படுதல், அக்கறைப்படுதல், ஒழுங்குபடுத்துதல், கண்காணித்தல், கட்டுப்படுத்துதல் என்ற வேறுவேறு நிலைகளுக்குப் பெண்ணடிமைத்தனம் பரிணாமமடைந்து இன்றைய நவீனப் பெண்ணடிமைத்தனத்தை அடைந்துள்ளதாகக் கூறுமிடத்து அதன் பின்புல, ஆணாதிக்க சாதியச் செயல்பாடுகளையும் விளக்குகிறார். இவ்விளக்கங்களிலிருந்து பெறும் புரிதலால், பெண்-ஆண் சமத்துவம் பெறுவதற்கான செயல்திட்டங்களை சாதி மறுப்புப்பணிகள் வழியாகவே நாம் கொண்டு வரமுடியும் என்பது தெளிவாகிறது.



சாதியமைப்பின் விரிவாக்கம் எப்படி இந்திய மண்ணில் செயல்படுத்தப்பட்டது என்ற அத்தியாயத்தில், தொடர்ந்து பார்ப்பனர்களால் கையாளப்பட்ட அரசுருவாக்கம், விவசாய விரிவாக்கம், அதன் வழியாகப் பரவலாக்கப்பட்ட வருணக்கொள்கை என்று தொடங்கி, எப்படி கருத்து மேலாண்மையிலும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டியிருக்கிறார்கள் என்பது வரை ஓர் ஆய்வை நிகழ்த்தியிருக்கிறார், உமா. சமூக நீதி என்பது கூட பார்ப்பனர்களுக்கான சாய்வுநிலைகளுடன் தான் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன, இது வரை வழங்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமன்றி, ஒவ்வொரு பெண்ணையும் கண்காணிக்கும் பொறுப்பை அவள் கணவனுக்குக் கொடுத்திருப்பது போல, அந்தப் பெண் நடத்தை மீறும்போதெல்லாம் தண்டிக்கும் பொறுப்பு அரசனுக்குக் கொடுக்கப்படுகிறது. இந்தக் குறிப்பிட்ட முறைமையின் மூலம், எப்படி, தனி மனிதப் பெண்ணைக் கணவனும், அரசனும் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.



இந்நூலின், மிக முக்கியமான அத்தியாயம், சாதிக்கொரு (ஆணாதிக்க) நீதி. இவ்வத்தியாயத்தில் பார்ப்பனர்களின் உடைமைகளுக்கு நேரடியான அடிமைகளாக இல்லாதவர்களுக்கு அளிக்கப்பட்ட திருமண நிர்ப்பந்தங்களும் பாலியல் ஒடுக்குமுறைகளும் அவர்களை நேரடியாகப் பார்ப்பனர்களுடன் பிணைத்த விதம் தான் சாதியத்தின் மிக முக்கியமான முறைமை. இது தான் பெண்கள் இனத்தையும் பல பிரிவினராகப் பேதப்படுத்துவது. அதே சமயம் ஒவ்வொரு சாதியைச் சேர்ந்த ஆணுக்குமான ஆதிக்கப் பணியும் அதிகாரமும் வேறுவேறாய் இருக்கின்றன என்பதையுன் சொல்கிறார். இதற்கு மிகச்சரியான உதாரணத்தையும் குறிப்பிட்டிருக்கிறார், உமா. அதாவது ராஜபுத்திரப் பெண் ஒருத்தி திருமணமாகிச்செல்லும் போது, அப்பெண்ணுடன் அவ்வூரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட பெண் ஒருத்தியும் அனுப்பப்படுகிறாள். ஆனால், இந்தத் தாழ்த்தப்பட்ட பெண் நேரடியான திருமண உறவுக்குள் செல்லமுடியாதென்றாலும், ராஜபுத்திரப் பெண்ணை மணந்து கொண்ட ஆணின் பாலியல் தேவைக்கு அவன் அழைக்கும் போதெல்லாம் இணங்கவேண்டும். இம்மாதிரியான நூதனமான பாலியல் சூத்திரங்கள் பெண்ணினத்தையே பேதப்படுத்தியதுடன், ராஜபுத்திரப் பெண், தாழ்த்தப்பட்ட பெண் இருவர் மீதான பாலியல் ஒடுக்குமுறையும் வேறுவேறு வடிவில் நியமம் பெற்றிருப்பதையும் சொல்கிறது. மேலும், இது முழுதும் பெண்ணின் பாலியல் ஆற்றல் சார்ந்த ஒடுக்குமுறையாக இருப்பதால், பெண்ணின் அடிப்படை ஊக்கமான பாலியல் ஆற்றலும், கருவுறுதல் ஆற்றலுமே சுரண்டப்படுவது இங்கு விளக்கம் பெறுகிறது. மேற்கண்ட உதாரணத்தில், தாழ்த்தப்பட்ட பெண் அதே இன ஆணை மணந்து கொள்ளலாம் என்றாலும், அவனுடன் பாலுறவு வைத்துக்கொள்ள உரிமை கிடையாது என்பதால் தாழ்த்தப்பட்ட ஆணுக்கான நீதி முற்றிலும் மறுக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.




இதனால், ஆதிக்கசாதிப்பெண்ணின் பாலுறவுச்சார்ந்த அதிகாரம் இன்னும் நெருக்கடிக்கு உள்ளாகிறது. உயர்வகுப்புப் பெண்களிடம் சாதி மதிப்பீடாக இருக்கும் பாலியல் ஆற்றல், ஒடுக்கப்பட்ட பெண்களிடம் உழைப்பாக மாற்றப்படுகிறது. இவ்வாறு இந்து மதம் தன் வருணக்கொள்கையின் வழியாக வெவ்வேறு நிலைகளில் கட்டமைத்து வந்த பாலியல் ஏற்றத் தாழ்வை நுணுக்கமாகவும் உதாரணங்களுடனும் அத்தியாந்தோறும் தெளிவுபடுத்தும் உமா, பெளத்தம் சனாதன விஷயங்களுடன் முரண்பட்ட இடங்களையும் அதே சமயம், பாலியல் ஏற்றத்தாழ்வை இயல்பாகவே பயின்ற இடங்களையும் முன்வைக்கத்தவறவில்லை. அறிவை ஒடுக்கும் முறைகளை எதிர்க்கப் பெண்களுக்குப் பெளத்தம் தான் துணை நின்றது என்றாலும் இது பெண்களின் பாலியல் ஆற்றலை விலக்கிய சமூக விடுதலையைத்தான் முன்வைத்தது என்பதால் அவ்விடுதலை முழுமையற்றதாய் இருந்தது என்றும் குறிப்பிடுகிறார்.




சாதியமைப்பை எதிர்க்கத் தோன்றிய பக்தி இயக்கக் காலம், காலனியாட்சிக் காலம், தேசியப் போராட்டக்காலம், தற்காலம் என வெவ்வேறு காலங்களினூடாகப் பயணம் செய்தவாறே சாதியாதிக்கம் வரையறுத்த ஆணாதிக்கத்தையும், அது செயல்படுத்திய பெண்ணடிமைத்தனத்தையும் தெளிவுபடுத்துகிறார். இந்நூலை, 1989, மண்டல் குழுவின் பரிந்துரைகள் வெளியிடப்பட்ட பின்பான ஆதிக்கசாதிப்பெண்களின், ‘வேலையில்லாத கணவர்கள் எங்களுக்கு வேண்டாம்’ என்ற வாசக அட்டைகளுடன் நடத்திய போராட்டத்திலிருந்து தொடங்குகிறார். அவ்விதமே முடிக்கும்போதும், 1971- ல் ராஜஸ்தானில் ஆதிக்க சாதியினருக்கும், சந்தால் ஆதிகுடிகளுக்கும் இடையே நடந்தப்போராட்டத்தில் ஆதிக்கசாதிப்பெண்கள் அவர்கள் சாதி ஆண்களின் ஆண்மையை அடையாளங்காட்டிப் போராட்டத்தைத் தூண்டிவிட்டதைக் குறிப்பிடுகிறார். இரண்டு நிலைகளிலுமே ஆதிக்க சாதிப் பெண்களின் மனநிலையைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறார். இம்மாதிரியான, சாதிவாரியான உரிமைகள் என்று வரும்போது மட்டும் தங்களின் பெண் என்ற அடையாளத்தை இழந்தவர்களாக, தங்களின் ஆண்களின் ஆதிக்கத்திற்கு இன்னுமின்னும் வலு சேர்ப்பவர்களாக ஆகிநிற்கின்றனர், ஆதிக்கசாதிப்பெண்கள். இந்நிலையில், இந்தியத் தளத்தில் பாலியல் பாகுபாட்டை பெண்-ஆண் என்ற அளவில் மட்டுமே ஆராய்வது முட்டுச்சந்தில் கொண்டு தான் நிறுத்தும் என்பது தெளிவாகிறது.



இவ்வாறு, பார்ப்பன மேலாண்மை பெண்களின் திருமணம், பாலுறவு, சமுதாய உறவுகள், சமுதாய முறைகள், அவர்களின் ஆண்கள், அவர்கள் பெண்கள் மேல் செலுத்த வேண்டிய கண்காணிப்புகள், பார்ப்பனர்களுக்கு அரசு செய்யவேண்டிய மரியாதைகள், அரசை நிர்வகிக்க அரசு பார்ப்பனர்களை சார்ந்து நிற்கவேண்டிய கட்டங்கள், ஆண்கள் பெண்களைச் சரியாகக் கண்காணிக்கிறார்களா என்பதைத் தொடர்ந்து கண்காணிக்கும் அரசின் வேலை என்று தொடர்ந்து சாதி உருப்பெற்று இருக்கிறதா என்பதைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தும் வேலையைச் செய்து வருவதை இதுபோல் தெள்ளத் தெளிவாக விளக்கும் நூல் தமிழில் இல்லை. மேலும், ப.சிவகாமி, உமா சக்கரவர்த்தி, சர்மிளா ரெகே போன்றோர் தொடர்ந்து சாதி மறுப்புப் பெண்ணியத்தை நடைமுறைப்படுத்தும் முறைமைகளைச் செயல்படுத்துவதில் முனைப்புடன் இயங்கி வருகின்றனர். இதுகாறும், பெண்ணியம் என்பதை மேலைத்தேயத்துப் பெண்ணியமாகவே விளக்கிவந்த ஆதிக்க சாதிப்பெண்களின் சித்தாந்தங்களுடன் முற்றிலுமாக முரண்பட்ட இந்தியத்தளத்தில் பெண்விடுதலைக்கான பாதையில் இந்நூல் புத்தொளி பாய்ச்சுகிறது.




இந்நூலை வ.கீதா அவர்கள் சிறப்பான மொழியாக்கத்துடன், ஆங்காங்கே தமிழக அளவிலான பொருத்தமான உதாரணங்களுடனும் வழங்கியிருக்கிறார். பெண்கள் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் வைப்பதற்கான எல்லா சிறப்பான தகுதிகளையும் இந்நூல் கொண்டுள்ளது. ப.சிவகாமியின் ‘உடலரசியல்’ போன்ற நூல்கள் ஒத்த வரிசையில், சாதியடிப்படையிலான பால்நிலைப்பாகுபாட்டை ஆய்வு செய்யும் இன்னுமொரு நூல், இது. இதற்கு அடுத்தக் கட்டமாக, ஆதிக்கசாதிப்பெண்கள் தாங்கள் இதுகாறும் பெற்ற கல்வி, பொருளாதார வாய்ப்புகள், சமூக மரியாதை வழியாகவெல்லாம், ஒடுக்கப்பட்ட பெண்களின் மீதான பால்நிலைப்பாகுபாட்டையும் கணக்கில் கொண்டு முன்னெடுக்கும் பெண்ணியப் போராட்டத்திற்கான தேவையையும் அதற்கான வழிமுறைகளையும் கூட உமா சக்கரவர்த்தி முன்வைப்பார் என்று நம்புகிறேன்.




சாதியாதிக்கத்தை மேன்மேலும் புரிந்து கொள்ளும் தோறும், அதன் ஆதிக்கச் சமன்பாடுகளும் உருவமைப்பு முறைகள் விளங்கினாலும், அவை புற்றீசல்களாகத் தொடர்ந்து கொண்டே இருப்பது, புரையோடிப்போன சாதியாதிக்கம் மற்றும் பெண்ணடிமைத்தனம் பற்றி நாம் ஆற்ற வேண்டிய விவாதங்கள் மற்றும் அவற்றிற்கு எதிராக நாம் வகுக்கவேண்டிய திட்டங்கள், நடவடிக்கைகள் குறித்த மலைப்பைத் தான் தருகிறது. மேலும், சாதியாதிக்கம்-ஆணாதிக்கம் தொடர்பான புரிதல் புவியியல் பரப்பிற்கும் அங்கு மேற்கொள்ளும் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு ஏற்றபடியும் எல்லைகளற்று விரிந்து கொண்டே இருப்பது, வெங்காயத்தைத் தொடர்ந்து உரித்துக்கொண்டே இருப்பதான மனநிலையையும் அளிக்காமல் இல்லை. இதைத்தான் பெரியார், ’வெங்காயம்! வெங்காயம்!’ என்றாரோ என்னவோ!





குட்டி ரேவதி

நன்றி: ‘புத்தகம் பேசுது’