இந்தவருடப் பெண்கள் தினத்திற்கு பெண்கள் எம்மாதிரியான தீர்மானங்களை எடுக்கலாம்?
பெண்கள் ஒருவருக்கொருவர் கொடுத்துக்கொள்வதற்கும் பெற்றுக்கொள்வதற்கும் நிறைய இருப்பதால் மற்ற பெண்களிடம் குறை காண்பதையே தொழிலாகக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.
ஒரு பெண்ணின் கருத்தாக்கம் பிற பெண்களுக்குப் பொருந்தாததாக இருப்பதால், அதைப் பிளவென்று எண்ணிப்போற்ற வேண்டிய அவசியமில்லை. அந்தப் பிளவிற்குக் காரணம், பெண்ணிய கருத்தாக்கங்களைச் சிதைக்கும் சமூகக்கட்டமைப்பே என்பதைப் புரிந்து கொள்ள முயலலாம்.
தொட்டாற்சிணுங்கிகளாய் ஒற்றை வார்த்தைகளால் தங்களைச் சுட்டுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவற்றின் தூக்கில் தொங்கவேண்டிய அவசியமுமில்லை. அந்த வார்த்தைகள் எழுவதன் பின்பான செயல்பாடுகளை அணுகும் பண்பு தான் இனிது.
பெண்கள் இனம் என்பது ஒற்றை உயிர்.
எல்லா உறவுகளிலும் இலக்கணங்களைப் போட்டுத் திணிக்காமல் விடுதலையை இன்னும் பெருந்தன்மையுடன் செயல்படுத்தித் தன் தனித்தன்மையையும் பேணலாம்.
பெண்களுக்கு இடையே விட்டுக்கொடுத்தலையும், பெண்கள் பால் தான் கொண்டிருக்கும் அக்கறையையும் வெளிப்படுத்த எதுவும் ஒரு தருணம் என்பதைப் புரிந்து கொள்ள முயலலாம்.
கடந்த காலத்தில் நிகழ்ந்த சீரிய பெண்ணியப் போராட்டங்கள் இந்தப்பாடங்களைத்தாம் எனக்குக் கற்பிக்கின்றன.
இவற்றைத் தொடர்ந்து பின்பற்ற முயல்வதன் வழியாக, நாம் ஒவ்வொருவரும் வடிவமைக்க எண்ணியிருக்கும் பெண்ணிய அரசியல் கருத்தாக்கத்தை விரிவுபடுத்த இயலும் என்று நம்புகிறேன்.
அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாய் நம்பும் பெண்கள் மேற்கண்ட தீர்மானங்களை முற்றிலுமாகப் புறக்கணிக்கலாம். இத்தீர்மானங்கள் சுயநலவாதிகளுக்குப் பொருத்தமானவை அல்ல.
எல்லோருக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துகள்!
குட்டி ரேவதி
1 கருத்து:
nice one.
கருத்துரையிடுக