இருளுக்குள் ஒளிந்திருக்கும் இருள் - நூல் அறிமுகம்
மூர்க்கமான இச்சையிலிருந்து மொழியும் தீரா வேட்கையிலிருந்து கவிதையும் பிறக்கின்றது. மூளும் சொற்களுக்கிடையே உண்மை ஒளிர்கின்றது. ‘இருளுக்குள் ஒளிந்திருக்கும் இருள்’ என்ற நூல் இம்மூன்றையும் பிணைத்த வடிவமாய் எழுந்திருக்கிறது.
லாவோட்ஸ் எழுதிய எண்பத்தியொரு கவிதைகள் அடங்கிய நூல் தாவோ தே ஜிங். ’தாவோ’ தத்துவத்தை உட்பொருளாகவும் நோக்கமாகவும் கொண்டு எழுதப்பட்ட கவிதைகள். லாவோட்ஸ் மொத்தம் எண்பத்தியொரு கவிதைகள் தாம் எழுதினாராம். மேலும், இவை ஒரே இரவில் எழுதப்பட்டனவாம். இவரது காலம், கி.மு. ஆறாம் நூற்றாண்டு.
இந்நூலை பதிப்பித்திருக்கும் தோழர் அலெக்ஸ் தான் எனக்கு அறிமுகப்படுத்தினார். தாவோ தத்துவம் பற்றிய சிறிய உரையாடலையும் நிகழ்த்தினார்.
வாள்கள் தமது உறையை விட்டு வெளிவரக்கூடாது என்பதைப் போலவே மீன்கள் தங்கள் ஆழங்களை விட்டு வெளியேறக் கூடாது என்ற வரி இன்னும் ஆழத்திற்குள் என்னை செலுத்துகிறது. வேட்கையையும் இச்சையையும் நான் இந்நூலில் இன்னும் அதிகமாய் விளங்கிக்கொண்டேன்.
முகர்ந்து குடித்தலையும் முந்திச்செல்லுதலையும் பாய்ந்தோடுதலுக்கும் தேவையான வாயிலை இந்நூல் திறந்து கொடுக்கிறது.
தாவோ தத்துவம், சித்தர்களின் தத்துவத்துடன் இணையும் புள்ளிகளையும் குறிப்பிட்டார். பதினெண் சித்தர்களில் போகர் என்னும் சித்தர், சீனர் என்பதையும் இவ்விடம் இணைத்துப் புரிந்து கொள்ளலாம்.
வெவ்வேறு சிந்தனை மரபுகள் தாம், தத்துவங்களாகி மனிதனுக்கு அக வெளிச்சம் காட்டுகின்றன என்பது எனது அடிப்படையான புரிதல். அந்தச் சிந்தனை மரபுகள் ஒன்றொடொன்று பொருத்தம் பெறும் அல்லது இணையும் வாயில்களை உணர்வதும் முழுவதும் தனிமனித அனுபவத்தின்பாற்பட்டது என்ற முடிவிற்கு வந்திருக்கிறேன்.
நாம் எந்த அளவிற்கு ஒரு சிந்தனை சார்ந்து நம்மைப் பயிற்சிக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் இது கருத்தில் கொண்டது. பெளத்தத்தின் பகுத்தறிவுச் சிந்தனை, தாவோ சிந்தனை, சித்தர் சிந்தனை இவையெல்லாம் ஒன்றிலிருந்து ஒன்று முற்றிலும் பரிணாம அளவில் வேறுபட்டிருக்கின்றன என்றாலும் நோக்கம் ஒத்ததாகவே இருக்கின்றன.
கவிதைகளுக்கு வருவோம். லாவோட்ஸின் தாவோ தே ஜிங்’கை மலர்ச்சி பிரபாகரன், தமிழுக்கு மொழியாக்கம் செய்திருக்கிறார். தட்டையான மொழியில் அன்றி, நவீனக்கவிதைகளுக்கான புத்துயிர்ப்பான மொழியிலும் செறிவான அர்த்தங்கள் பொதித்த சொற்களுடனும் தந்திருக்கிறார்.
எந்த ஒரு கவிதையையும் எந்தத்தருணத்தில் வாசித்தாலும் அக்கவிதையில் நிறைந்திருக்கும் வெளிச்சம், இருளுக்குள் ஒளிந்திருக்கும் இருளையும் அழிக்கவல்லதாக இருக்கிறது.
ஒவ்வொரு கவிதையும் வேறுபட்ட ஒவ்வொரு மனித உளவியலோடும் இரசவாதம் கொண்டு வேதியியல் வினைபுரிய வல்லது.
லாவோட்ஸ், நீர் எருமை மீது, ஏறிப்பயணம் செய்து மேற்குத்திசையில் உள்ள காட்டுக்குச் சென்றது பற்றிய குறிப்பு அவர் பற்றிய ஓர் அபூர்வமான காட்சிச் சித்திரத்தைத் தருகிறது
எனக்குத் தென்பட்ட குறை, ‘வழி’ என்ற சொல் ஆளப்பட்ட இடங்களில் மட்டும் ‘நெறி’ என்று வந்திருக்கலாமோ என்பது தான். நெறி எனும் போது, வழி என்னும் ஒற்றைப் பரிமாண வார்த்தை பன்பரிமாணம் கொள்வதாகத் தோன்றுகிறது.
அந்நூலிலிருந்து சில கவிதைகள்:
தனித்தன்மை
எனது வார்த்தைகள்
புரிவதற்கு எளிதானவை;
எனது செயல்கள்
செய்வதற்கு எளிதானவை;
இருந்தும்,
எவராலும்
புரிந்துகொள்ளவும் முடிவதில்லை;
எவரும்
செய்வதும் இல்லை.
வழிக்கு வா
பெண்மையில் இருந்து கொண்டு
ஆண்மையைப் பயன்படுத்துங்கள்;
இதுவே, இவ்வுலகின் நுழைவாயிலாய் இருக்கின்றது.
நீங்கள் இசைவைத் தழுவி
பிறந்த குழந்தை போலாகிவிடுங்கள்;
பலமின்மையில் இருந்து கொண்டு
பலத்தைப் பயன்படுத்துங்கள்;
இதுவே, இவ்வுலகின் வேராய் இருக்கின்றது.
நீங்கள் இசைவுக்குள் மொத்தமாய் மூழ்கி
செதுக்காத மரத்துண்டு
போல் ஆகுங்கள்;
இருளாய் இருந்து கொண்டு
ஒளியைப் பயன்படுத்துங்கள்.
இதுவே, இவ்வுலகமாய் இருக்கின்றது.
நீங்கள் நேர்த்தியான இணக்கமாகி
வழிக்குத் திரும்புங்கள்.
சித்தர்
நேர்மையான மனிதர்
கவர்ச்சியாகப் பேசுவதில்லை;
கவர்ச்சியான மேடைப்பேச்சு
நேர்மையானது இல்லை;
விவேகமான மனிதர் பண்பட்டவர் அல்லர்;
பண்பாடு விவேகம் ஆகாது.
நிறைவடைந்த மனிதர் செல்வந்தர் அல்லர்;
செல்வங்கள் நிறைவு ஆகாது;
எனவே, சித்தர்
தனக்கென எதுவும் செய்வதில்லை.
அவர் மற்றவர்களுக்கு
அதிகம் செய்ய செய்ய
அதிக திருப்தி அடைகின்றார்;
பிறர்க்கு அதிகம் கொடுக்க கொடுக்க
அவர் அதைவிட அதிகம் பெறுகின்றார்;
ஒருத்தரின் தயவிலும்
இயற்கை செழிப்பதில்லை.
எனவே, சித்தர் எல்லோருக்கும் பயன்படுகின்றார்;
யாருடனும் போட்டி போடுவதில்லை.
குட்டி ரேவதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக