நம் குரல்

கவிதைச் சோழிகளும் காட்டுப்பூக்களும்

படிமை, தமிழ்ஸ்டுடியோவின் கனவு பயிற்சித் திட்டத்திற்காக, இரு நாட்கள் நவீனக்கவிதை பயிற்சிப்பட்டறையை நடத்தித்தரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். இரு நாட்கள் போதுமானவை இல்லை என்றாலும், இன்னொரு கட்டப்பயிற்சிக்கு மாணவர்களை உந்திச்செல்லும் என்பதில் மிகுந்த நம்பிக்கையுடன் வகுப்பறையில் நுழைந்தேன். மாணவர்கள் பலருக்கு வெகுஜனக்கவிஞர்கள் தவிர வேறு எவரும் தெரிந்திருக்கவில்லை. நாளிதழ்களில் வரும் துணுக்குக் கவிதைகள் மட்டுமே அறிமுகமாகி இருந்தன. சமூக நலனுக்கு கவிதை தேவை இல்லை என்ற அபிப்ராயமும் சிலருக்கு ஆழமாக வேரூன்றி இருந்தது. கவிதை பற்றிய பாடத்தை அதன் அடிப்படை நிலையிலிருந்தே தொடங்க வேண்டும் என்பதும் எனக்கு உறுதியானது. மேலும், கவிதை பற்றிய வகுப்புகளுக்குப் பின் நீங்கள் கண்டிப்பாக கவிதைகள் எழுதியே ஆகவேண்டும் என்ற வரத்தை விட, மலிவான கவிதைச் சோழிகளுக்கு இடையே கவித்துவம் கனிந்ததொரு கவிதையைக் கண்டுபிடிப்பதற்கான திறனை தனக்குள் ஒருவர் கண்டடைவதே அவசியம் என்பது என் எண்ணம்.கவிதை வகுப்புகளுக்கான செம்மையான பாடத்திட்டத்தைத் தயார் செய்திருந்தேன். குறிப்பாக, சிறந்த கவிதை என்பதன் கட்டமைப்பு, நவீன இலக்கிய வரலாறு, அதன் விமர்சனப்பாதை, உலகக்கவிதைகள், அரசியல் கவிதைகள் என பல பிரிவுகளாக ஆக்கிக்கொண்டேன். கவிதை மற்றும் கவிஞர்கள் பற்றிய திரைப்படங்களையும் சேகரித்து வைத்திருந்தேன். பொதுமக்கள், பல சமயங்களில் கவிதைகளை வெகு எளிதாக, தவிர்த்துவிட்டுக் கடந்து போகிறார்கள், சாலையில் நிகழ்ந்த ஒரு சிறு விபத்தைக் கடந்து செல்வது போல. உள்ளே அழைத்துச் செல்லும் வழிமுறைகளோ திறவுகோல்களோ வழங்கப்படாததால் தாம் கவிதைகளைக் கடந்து போயிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. உலகின் சிறந்த கவிதைகள் எனப்பட்டவை எல்லாமே பிரித்து அடுக்குவதற்கும், சிறகுகளைப் பிய்த்து காற்றில் எறிந்து பறவையாவதற்குமான உயிர்த்துவத்தைக் கெட்டியாகக் கொண்டிருப்பதைத்தான் இந்தக் கவிதை வகுப்பின்போது உணர்ந்தேன். அத்தகைய கவிதைகளை ஒவ்வொன்றாய் தொட்டு எடுத்துக் கொண்டு, குழந்தைகள் கலைத்து அடுக்கும் செங்கற்களைப் போல அடுக்கிப் பரவசப்பட்டு நுவுரக் குடித்த மதுவின் பித்தமேறித் திளைத்தோம். கவிதைகள் வகுப்பறைக்குள் நுழைந்து காடியானதொரு வாசனைத் திரவியத்தைப் போன்று அவர்களின் நரம்பு மண்டலத்தை மெல்ல மெல்ல பீடிக்கக் கண்டேன்.நான் செய்ததெல்லாம், ஒரு நவீனக்கவிதையை எப்படி வாசிப்பது என்பதை விளக்கியதே. இது சுலபமான வித்தையாகவும் கைப்பிடித்து அழைத்துச் செல்வதற்கான எளிதான சாலையாகவும் இருந்தது. கவிதை அளிக்கும் களி வெறியில் பங்கேற்றவர்கள் இன்னும் இன்னும் கவிதைகள் கேட்டனர். நவீனக் கவிதையை முறையான வாசிப்புக்கு இன்னும் அறிமுகப்படுத்தாமல் ஒரு தலைமுறை அதைக் கடந்து செல்வது, கல்லூரிகள் வழங்கும் சாபமா இல்லை, சமூகத்தின் மீது இடப்பட்ட சாபமா? வந்திருந்தவர்களில் ஒருவர் கேட்டார்: இப்படியெல்லாம் கவிதையை வாசித்துப் பொருளுணர்ந்து மகிழமுடியும் என்பதை தமிழிலக்கிய மாணவனான எனக்கு ஏன் எவரும் சொல்லிக்காட்டவில்லை. பாப்லோ நெருதாவின் ‘போஸ்ட் மேன்’ திரைப்படத்தைத் திரையிட்டுக் காட்டினேன். கவிதை என்றால் என்ன? என்பதையும் கவிஞன் என்பவன் யார்? என்பதையும் கவிஞர், கவிதை இரண்டின் தாக்கத்தாலும் ஒரு தனிமனிதனின் பரிமாணம் எப்படி வளர்சிதை மாற்றமடைகிறது? என்பதையும் ஒரே சமயத்தில் தெளிவாக்கும் படம். இப்படத்தைப் பார்த்த பின்பு, கவிதை என்றால் என்ன என்பதான மலிவான கேள்வியை எவரும் எழுப்பவே முடியாது.ஒரு நல்ல கவிதை, வாசிப்பவரைக் கிறங்கடிக்கிறது, நெருஞ்சி முட்களைப் போல ஏறிய இடத்தில் இருந்து துன்புறுத்துகிறது, அருளேற்றி ஆட்டுகிறது, சுய மடமையைக் கிள்ளிவிட்டுக் கடிந்து கொள்கிறது, புதைத்து வைத்திருக்கும் துயரத்தை கண்ணீரின் நதியாக்குகிறது, தூக்கமின்றி படுக்கையில் புரளவைக்கிறது, தனக்குத்தானே ஒரு காதலைப் பரிசளித்துக் கொள்கிறது, ரகசியச்சீழை வெளியேற்றி ஆசுவாசப்படுத்துகிறது, வாசிப்பவருக்குள்ளேயே மெளனமாய் பழையவொரு காதலைப் போல தங்கிவிடுகிறது. உடலையும் மனத்தையும் நிர்வாணமாக்குகிறது. தடையின்றி, செழிக்கச் செழிக்கப் பூத்துக் கொண்டே இருக்கின்றன நல்ல கவிதைகள், காட்டுப்பூக்களைப் போலவே! எல்லோருக்கும் அத்தகைய நல்ல கவிதைகளையே வாசிக்கும் வாய்ப்பு கிட்டட்டும்!குட்டி ரேவதி

3 கருத்துகள்:

சமுத்ரா சொன்னது…

உண்மை தான்..

ரமணி சொன்னது…

கவிதைபற்றிய முழு அறிவும் இல்லாத காரணத்தாலேயே அதை கடந்துவர முயல்கிறேன். புரிதலுக்காக செய்யவேண்டிய குறைந்தபட்ச உழைப்பையும் செலுத்த மனது தயாராக இல்லை. தங்களின் இது போன்ற முயற்சி தற்போது மிக அவசியமான ஒன்று.

குட்டி ரேவதி சொன்னது…

நன்றி, ரமணி!

முந்தைய தலைமுறையினரிடம் காணப்பட்ட சிறப்பான குணாம்சமாக நான் கருதுவது, எதையும் மெனக்கெட்டுச் செய்வது. அது கோரும் குறைந்தபட்ச உழைப்பையும் வழங்கத்தயாராயிருந்தனர். அது இந்தத்தலைமுறையினரிடம் இல்லையோ என்றும் தோன்றுகிறது, ரமணி!