நம் குரல்

உடலின் வடிவம்



வீடு, கொதிக்கும் வெப்பத்தால் ஆனது என்று சொன்னால் நம்பும் பெண்களுக்குத்தான் இந்தச் சொற்களும். வீட்டைச் சுமந்து கொண்டு அலைய முடியாது, முதுகு முறிக்கும் கனத்துக்கிடையே அவதிப்படும் உங்களுக்கு இந்தச் சொற்கள் ஆறுதலை அளிக்கும் என்ற என் உத்திரவாதமும். ஏனென்றால், வீடு என்றால் ஆணின் குடும்பத்தை கட்டியெழுப்புவதற்கான கூடு என்று தான் பொருள். இந்நிலையில், பயணமூட்டையில் அடுக்கும் பொருட்களுக்கிடையே வீட்டையும் முடிந்து கொள்வது பலருக்குப் பழக்கமாக இருக்கலாம். அல்லது, வீடே பயணமூட்டையாக மாறி, பயணம் முழுக்க, அழுக்குக் களையப்படாத நினைவுகளாகத் தேங்கிக் கனக்கலாம். ஆனால், பயணம் என்பது வீட்டின் திறந்த வாயிலில் தொடங்குவது என்பது பெண்கள் பலரும் அறியாதது.



எந்த ஒரு புதிய நகரத்திற்குச் சென்றாலும், என் தனிமையே என் ஆளுமையாகி, அது வரை என் வீட்டளவிற்குச் சுருண்டிருந்த என் திசைகள் கைகளை நீட்டி விரிகின்றன. நகரத்தில் வேறு வழியில்லை. எல்லோரும் கட்டம் கட்டமாய்ச் சிந்திக்கிறார்கள். மூலைகளும், விளிம்புகளும், குறுக்கங்களும் அவர்கள் உடலின் வடிவங்களாகின்றன. நிலைத்து விட்ட நகர வீதிகளில் உடல்கள் கண்மூடிக்கொண்டு வேகமெடுக்கின்றன. நகரத்தின் ஆகாயம் அறையின் இடுப்பு நாடாவால் சுருக்கிக் கட்டப்பட்டிருக்கிறது.என்றாலும், இரவுக்குள் உறங்கும் நகரத்தின் தெருக்களில் நானும் அவனும் மீண்டும் மீண்டும் பயணித்து இரவையும் உடலையும் ஒரு பெருநகராக்குகிறோம். கண் கூசும் ஒளியின் திட்டவட்ட நடவடிக்கைகளால், கட்டுப்படுத்தப்பட்ட உடல் அசைவுகளும் கழிவுகளை அவசரமாக வெளியேற்றும் தீவிரங்களும் வன்மங்களும் இரவின் நகரத்துக்கு இல்லவே இல்லை.



வீடுகள் மூச்சடைத்து நிற்க வேண்டிய நிலை ஏற்படும் போதெல்லாம், அறை மனிதர்களை உந்தி வெளியே தள்ளுகின்றன. திசையின் வேகமெடுத்துச் சென்றுவிட்டு வா என்று முதுகை முட்டித்தள்ளுகின்றன. பயணம் என்பதே தனியாய்த் தொடங்குவது. அது தரும் எதிர்பாராத கடினமான தருணங்களை, முகம் சுளிக்காது கடந்து வருவது. அத்தருணங்கள் தாம் பின்னாளில் நாட்குறிப்பேடுகளில் மயிலிறகுகளாகின்றன. வழித்தங்கும் அறைகளையெல்லாம் பால்வெளி அளவுக்கு விரிப்பதும், காலத்தின் நூதனமான பருவங்களையெல்லாம் சுவைக்கும் வாய்ப்பெடுத்துக் கொள்வதும் தாம் மனிதப் பகுத்தறிவின் கொடை. அப்பொழுது, நான் எவரும் தீண்டமுடியாத உடல் வெளியைக் கொள்கிறேன். நீள்வட்ட வெளியில் நீந்துகிறேன். அப்பொழுதைய என் சிறகின் இழுவிசை எதிர்பாராத கடினமான தருணங்களால் கூடக் காயப்படுவதே இல்லை.



நீண்ட பயணத்துக்குப் பின்பு, ஒளியைக் கொத்திக் கொணர்ந்து பகிர்ந்து கொள்ளும் கணங்களையும் பாய்களையும் வீடு தான் கொண்டிருக்கிறது. என்றாலும், விட்டு விடுதலையான நீண்ட ஆசுவாசமான பயணத்திற்குப் பின்பு தான் அது சாத்தியமாகிறது. இப்பொழுது வீடு, நான் இல்லாத சமயத்தில் பறவைகள் வந்து இளைப்பாறிக் கழிந்த எச்சங்களின் தடங்களால் அழகுபெற்றிருக்கிறது. அதன் சோபையை, என்னிடம் பகிரமுடியாது தவித்த காலங்களாலும் அதன் வெவ்வேறு பருவங்களாலுமான என் காதலனுக்குப் பரிசளிக்கிறேன்! வீட்டின் முகட்டில் பெருத்த நிலவொன்று காய்த்திருக்கிறது இன்று!

குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: