நம் குரல்

பெண்படைப்பாளிகளின் கவிதை மொழிதல் நிகழ்ச்சி - பாண்டிச்சேரி

சாகித்திய அகாதெமி ஏற்பாடு செய்திருக்கும் அஸ்மிதா பெண் படைப்பாளிகள் கவிதை மொழிதல் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன். ச.மதனகல்யாணி, வைகைச் செல்வி, மாலதி மைத்ரி, ச.மல்லிகா, கோ.பொற்கலை, ந.செ.கி.சங்கீத் ராதா ஆகியோருடன் கவிதைகள் வாசிக்கிறேன். இரா.மீனாட்சி தலைமை தாங்குகிறார். பாண்டிச்சேரி ஜெயராம் உணவகத்தின் கருத்தரங்க வளாகத்தில் 5—02-2011 அன்று மாலை 5.30 மணிக்குத் தொடங்குகிறது.

கவிதை வாசிப்பு நிகழ்வுகள் பெரும்பாலும் மனதோடு ஒட்டுவதில்லை. அத்தகைய வாசிப்பிற்கு, இன்றைய நவீன கவிதைகள் உதவுவதுமில்லை. அரசியல் மேடைகளில் நிகழ்ந்தேறும் கவியரங்கத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட வாசிப்பைக் கோரும் நிலையை இன்றைய கவிதை இயக்கம் வந்தடைந்திருக்கிறது. வடிவத்திலும் அதன் கருப்பொருள் அளவிலும் வேறுபட்ட நிலையை வந்தடைந்திருக்கிறது. என்றாலும் வாசிப்பிற்குத் தேவையான தாள லயத்தைக் கவிதை அதற்கான நடையாகவும் ஊட்டமாகவும் தாம் இன்னும் கொண்டிருக்கிறது.


என்றாலும், இம்மாதிரியான கவிதை நிகழ்வுகள் கவித்துவ எழுச்சிக்கான தருணங்களை முற்றிலுமாக இழந்துவிடவில்லை. கவிதை வாசிக்கையில், ஒருவர் தன் கவிதையை அரசியல் கவியரங்கப்பாணியில் பெருமுழக்கமாக வாசிக்கவில்லையென்றாலும் எழுதுபவரின் முழு உணர்வெழுச்சியும் வெளிப்பட அக்கவிதையின் சொற்களே போதுமானவை. கூத்துப்பட்டறை நடிகை கலைராணி ஒருமுறை இம்மாதிரியான கவிதைகள் எப்படி வாசிக்கப்படவேண்டும் என்ற சில முறைகளை என்னுடன் பகிர்ந்து கொண்டார். ஒவ்வொரு சொல்லுடனும் ஒட்டியிருக்கும் உணர்ச்சியையும் தொடர்வது முக்கியம் என்பார் அவர்.

ஒவ்வொரு கவிதை வாசிப்பிலும் அத்தருணத்திற்கான கவிதைகளை புதிதாக எழுதி வாசிப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். அது கவிதை எழுதும் பயிற்சியைத் தொடர வைப்பதுடன், அத்தருணத்திற்கான ஒருங்கிணைவையும் கவிஞர்களிடையே ஏற்படுத்துகிறது. வேறுவேறு கருப்பொருட்களுடனும் வெளிப்படுத்தும் மொழிதலுடனும் இயங்கும் கவிஞர்களிடையே ஒருமித்த உணர்வெழுச்சியையும் ஏற்படுத்துகிறது. வேறென்ன காரணம் வேண்டும் ஒரு கவிதையை எழுதுவதற்கும் வாசிப்பதற்கும்?குட்டி ரேவதி

2 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

//ஒவ்வொரு கவிதை வாசிப்பிலும் அத்தருணத்திற்கான கவிதைகளை புதிதாக எழுதி வாசிப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். அது கவிதை எழுதும் பயிற்சியைத் தொடர வைப்பதுடன், அத்தருணத்திற்கான ஒருங்கிணைவையும் கவிஞர்களிடையே ஏற்படுத்துகிறது. //

paaraattukkal

குட்டி ரேவதி சொன்னது…

நன்றி, சரவணன்! தொடர்ந்து படிப்பதுடன் கருத்துரையும் இடுகிறீர்கள்!