என் கவிதைகளுடனான உறவை அவ்வப்பொழுதே அறுத்துக் கொள்கிறேன். என்னால் இது வெகு இயல்பாகவே முடிகிறது. அப்பொழுது தான் அடுத்த கவிதையை என்னால் எழுத முடிகிறது. எழுதிய கவிதைகளின் நீள அகலங்கள் வழியே நான் பயணித்த தூரத்தை கருத்தில் எடுத்துக் கொள்கையில் பத்துவருடம் என்பது மலைப்பாகவும் திகைப்பாகவும் இருக்கிறது. எவ்வளவு கண்டனங்கள் விமர்சனங்கள் தூற்றல்கள் என்பதை அடையாளமாய் வைத்துக் கொள்ளவில்லையென்றாலும் நினைவு ஒரு பொழுதும் அதன் தடயங்களை அழித்துக்கொள்ளாது. எந்தவொரு கண்டனத்திற்கும் விமர்சனத்திற்கும் என் உடல் ஒருபொழுதும் செவி மடுத்ததில்லை. தன்னிலை குலைந்ததில்லை. பதட்டப்பட்டதே இல்லை. எனக்குக் கவிதை தொழில் அன்று. அதை வைத்து பணமோ புகழோ அங்கீகாரமோ அதிகாரமோ ஈட்ட முடிந்ததில்லை. காட்டில் புலி போல வாழ்கிறேன். காட்டின் வரைபடத்தையும் அங்கு வாழும் வனமிருகங்களின் அசைவையும் துல்லியமாய் நினைவில் வைத்திருக்கிறேன். என் உடல் தனக்கான வேகத்திலிருந்து தனக்கான திசையிலிருந்து தன்னை முகம் திருப்பிக் கொள்ள ஒரு பொழுதும் நான் அனுமதித்ததே இல்லை. என் உடல் சொல்வதைக் கேட்பவள் நான் என்பதால் வேறெந்த சொல்லும் என் உடலுக்குள் என் அனுமதியின்றி நுழைந்ததே இல்லை.
இந்த பீடிகைக்குக் காரணம் சென்ற வாரம் எனக்கு வந்த ஒரு நீள மடல், என்னவோ தமிழகத்தில் பெண் கவிஞர்களின் பாலியல் முறைகேடான போக்கின் தொடக்கம் நான் தான் என்பதாய்.
என் கவிதை உருவாக்கத்திற்கான விதை, என் உடல் என்னும் பரப்பில் தான் வேர்விட்டெழுகிறது என்ற என் நம்பிக்கைக்கு உலகாயதம், சித்தர் தத்துவம் போன்ற ஆழமான தத்துவ மரபுகளையெல்லாம் எனக்காக வாதிட அழைக்க முடியும். என்றாலும் எந்தத் தத்துவத்திற்கும் மயங்கும் முன் என் உடலின் இயக்கங்கள் கூறுகள் உணர்வுகள் இச்சைகள் மறுப்புகள் மறுமொழிகளுக்கு நான் வசப்படுகிறேன். இவை என் தாய் தந்தையின் மொழிகளை விட எனக்கு முக்கியமாகப்படுகின்றன. ‘இந்த உடலில் தான் என் முழு வாழ்க்கையும்’ என்னும் எளிய நேரடியான காரணமே இதற்குக் காரணமாயிருக்கலாம்.
எழுதப்பட்டு அச்சிற்குச் சென்ற என் கவிதைகளிலிருந்து தொலைதூரம் வந்திருக்கின்றேன். என்றாலும் அவை என்னுள் விளைந்த மதலைகளாய் சீரான வளர்ச்சியைக் கருத்திலும் மொழியிலும் கொண்டு என்னோடே வளர்ந்து வந்திருப்பதை நன்கு உணரமுடிகிறது இன்று. ஒவ்வொரு கவிதையும் கவிஞன் குடித்த காற்றையும் தின்ற உணர்ச்சிகளையும் அபகரித்துத் தான் உருவாகிறது. ஒவ்வொரு கவிதையின் உருவாக்கமும் மிக அசாதாரணமான தருணங்களைக் கொண்டிருக்கின்றன. ஒரு நிமிடம் பொறுங்கள். ஜன்னலை திறந்து வைத்துக் கொள்கிறேன். இப்படியானதொரு ‘கவிதை உருவாக்கம்’ பற்றிய கட்டுரையை ஒவ்வொரு கவிஞரிடமிருந்தும் பெற்று வெளியிட வேண்டும் என்றும் எனது இந்த ஆவலைப் பெண்ணிய இலக்கிய இதழான, ‘பனிக்குடம்’ இதழிலேயே செய்யவேண்டும் என்றும் எண்ணியிருந்தேன். எனக்கு, இப்பொழுது தான் வாய்க்கிறது.
‘இறுதி விருந்து’ என்ற இக்கவிதை 2002 – ம் ஆண்டு வெளியான ‘முலைகள்’ என்ற என் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றிருந்தது. இயல்பான என் பெண்ணுடலுக்குள் நிகழும் காம அலைக்கழிப்பும் அலைவரிசைக்குள் பொருந்தியவரையெல்லாம் நுகர்ந்து பார்க்கத் துடிக்கும் விழைவும் சமூகப்படிகளின் வழியாகவே நடந்து செல்ல பணிக்கப்படும் இக்கட்டும் என உடல் வதையுறும் ஒரு பெண்ணாய் நான் இருக்கையில்,
என் உடல் எதிரி மன்னனின் அரண்மனைக்குள் மாற்று ரூபத்தில் நுழையும். அவன் அரசவையின் நம்பிக்கைகளைப் பெறும். அவன் ரசிக்கும் பெண்களில் முதன்மையானவளாக என்னை தகுதிப்படுத்திக் கொள்ளும். அவனுக்கு விருந்தளிக்கும் வாய்ப்பையும் எனதாக்கிக் கொள்ளும். மதுக்கிண்ணத்தில் நிரம்பிய விஷத்தை மதுவென்று நம்பவைக்கும் காம எழுச்சிக்கும் உச்சத்திற்குமான தருணத்தை ஏற்படுத்திக் கொள்ளும். என்னுள் ஊறும் இரசாயன காமநொதியே விஷமாகும். நான் ஒரு விஷ கன்னிகையாய் மாறினேன் இக்கவிதையில். இப்படியான இலட்சியம் எனதாகியிருந்த பொழுதில் எழுதப்பட்ட கவிதை இது!
இறுதி விருந்து
நட்சத்திரங்கள் பொடிந்து உதிரும்படியாக
இரவு அதிர்கிறது
கனவு பிரமாண்டமாகையில்
விஷமாய் இரசாயனம் மாறிக்கொண்டிருக்கிறது
வழிய இயலாத கண்ணீரும்
இருளில் மக்கும் கனவுகளும்
இவரா அவரா எனத்தீண்டிப் பார்க்கின்றன
சுருண்டு தவிக்கும் காமத்தின் நீலநரம்புகள்
எனது ஒவ்வொரு வார்த்தையையும்
கூர்மையாகச் சீவுகிறேன் பற்களினூடே
நுரையீரலுக்குள் காற்றின் புயல்
இருதயத்துக்குள் ரத்தத்தின் சுழல்
மார்புகள் கனிந்து தொங்குகின்றன
அதன் இரு கிண்ணங்களிலும்
திடமான விஷம்
திரண்ட ஒவ்வொரு துளிவிஷமும்
மலையைக் குடையக் கூடியது
இந்த விருந்தின் சுவையானதொரு பதார்த்தமாய்
உன் கோப்பையில் நிறைந்திருக்கிறேன்
இனி நீ சுவைக்கலாம் என்னை.
(முலைகள், முதல் பதிப்பு: 2002, தமிழினி, இரண்டாம் பதிப்பு: 2003, பனிக்குடம் பதிப்பகம்,
பக்கம்; 16)
குட்டி ரேவதி
5 கருத்துகள்:
‘இந்த உடலில் தான் என் முழு வாழ்க்கையும்’.......
நல்ல பதிவு.
நன்றி, வசு!
தங்களின் மேதாவிலாச கவிதைபோன்றிருக்கும் இலக்கியப் படைப்பான ஒன்றில் தங்களுடைய படைப்பினில் உடல் பற்றிய விஞ்ஞான மொழியில் இயம்பி இருக்கிறீர்கள் கலை நயமாக புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆரம்பத்தில் புரியாது எப்படி பின்னால் புரிந்ததோ அதுபோல தங்களின் மேலான இலக்கியப் படைப்பினையே புரிந்துகொள்ள நான் முயன்று தோற்றுவிட்டேன்!
இனியொரு நாள் நான் திரும்ப படிக்கும்போது அதுபுரியும் நாளில் உண்மை விமர்சனம்எழுதுவேன்
பகிர்வுக்கு நன்றி. கவிதை அருமை. வாழ்த்துக்கள்
நுரையீரலுக்குள் காற்றின் புயல்
இருதயத்துக்குள் ரத்தத்தின் சுழல்
மார்புகள் கனிந்து தொங்குகின்றன
அதன் இரு கிண்ணங்களிலும்
திடமான விஷம்
திரண்ட ஒவ்வொரு துளிவிஷமும்
மலையைக் குடையக் கூடியது
இந்த விருந்தின் சுவையானதொரு பதார்த்தமாய்
உன் கோப்பையில் நிறைந்திருக்கிறேன்
இனி நீ சுவைக்கலாம் என்னை.
ரேவதி,என்ன ஒரு ஆழம்,கூர்மை.தன்னை வுணர்ந்து சுழற்றும் சாட்டை.நடத்துங்கள்.
கருத்துரையிடுக