சென்னையின் ஓய்வில்லா கடுமையான உழைப்பிற்குப் பின்பான நாட்களிலெல்லாம் நகுணனுடன் பெங்களூர் புறப்பட்டு விடுவதுண்டு. அந்தப்பயணம் அதிகப்பட்சம் இரண்டு நாட்களுக்கு மேல் இருக்காது. அதுவும் ஓய்வெடுப்பதாய் இருக்காது. ஓய்வென்பதும் ஓரிடத்தில் இருத்தல் நிமித்தம் என்பதாய் இருக்காது. காந்தி சாலையின் இந்தக் கரையிலிருந்து எதிர் அத்தம் வரையிலுமானதாக இருக்கும். இந்தப் பயணமும் நகுணனுடன் பெங்களூரில் வீசும் குளிர் கலந்த வெயிலில் நடந்தவாறே எந்த நோக்கமுமில்லாமல் புத்தகக் கடைகளில் ஏறி இறங்கி எனது மனவெளிக்குள் கட்டுண்டு கிடக்கும் உலகத்தைப் புதிப்பித்துக் கொள்ளும் முயற்சியாய் இருக்கும்.
அம்மாதிரியான ஒரு பயணத்தில் தான் அனைஸ் நின்னை நகுணன் அறிமுகப்படுத்தினார். அப்பொழுது அனைஸ் நின்னின் ஏராளமான நூல்களை ஒரே இடத்தில் பார்க்கக் கிடைத்தும் வாங்குவதற்குப் போதிய பணம் இல்லை ஒன்று. மேலும் அந்த எழுத்தாளர் என் உலகத்திற்கு உவப்பானவரா என்று அவரின் ஒரு நூலை படித்துப் பார்க்காமல் தொடர்ந்துவாசிக்க இயலாது என்னால் என்ற முடிவில் அனைஸ் நின்னின் ‘Delta of Venus’ நூலை வாங்கினேன். இம்மாதிரியான நூல்கள் குறித்த மனத்தடையையோ எந்த எதிர்ப்பார்ப்பையோ நான் ஏற்றி வைத்துக் கொள்ளவில்லை என்பதால் அவர் நூற்கள் ஒரு புத்தம் புதிய அனுபவத்திற்கான வாயில்கள் என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை.
பாலின்ப இலக்கியம் என்பது அபத்தமான கிளர்ச்சிகளை உண்டுபண்ணும் பாலின்ப உறவுகள் அல்லது பாலின்ப இச்சைகளைத் தூண்டுவதற்கான நூல் என்று மட்டுமே பொருள் இல்லை. ஒரு மனிதனின் பாலியல் அறிவின் வழியாகவே அவனின் ஞானம் எழுச்சி அடைவதாக குரானின் நபியைப் போலவே நானும் நம்புகிறேன். ஆனால் பொய்மையும் கபடும் மனிதனை மனிதன் எத்திப் பிழைக்கும் உலகில் பாலின்பம் என்பது மிகவும் கொச்சையாகவும் மலினப்படுத்தப்பட்டதாகவும் ஆகிவிட்டது. ஆக, பாலியலை அதன் அழகும் அந்தரங்கமும் புதுமையும் நூதனமும் கலைக்காமல் மனிதனுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே பாலின்ப இலக்கியம் என்பது அனைஸ் நின்னை வாசித்த பிறகு தோன்றியது. எழுத்தில் எங்குமே வலிந்து பாலியலின் அறத்தை மீறுபவரோ தயக்கங்களை மதிப்பவரொ இல்லை அனைஸ் நின்.
இங்கு பாலியல் அறம் என்பது பாலின்பத்தின் எல்லையோ கட்டுப்பாடோ இல்லை. அதன் உச்சத்தை எந்த விதச் சிதறலும் கவனக்குலைப்பும் இன்றி சென்று சேர்வது என்று அறிந்துணரப்படவேண்டியது என்ற பொருளிலே தான் குறிப்பிடுகிறேன்.
பிரெஞ்சு எழுத்தாளரான அனைஸ் நின்னின் மூன்று நூல்களை படித்திருக்கிறேன். ‘Delta of Venus’, ‘White Stains’ மற்றும் ‘Under a glass bell’. ‘Delta of Venus’ தரும் இலக்கிய நவிற்சியும் பாலியல் விழிப்புணர்வும் அலாதியானது. எல்லாமே மனிதன் தன் சுயவாழ்க்கையின் வழியாக பாலியல் அறிவைக் கண்டுணர முயற்சிக்கும் பாதையின் சுரங்க வழிகள். மேலும் ஒரே மாதிரியான அலுப்பூட்டும் பாலின்பத்தை அவர் மாந்தர்கள் மீது ஏற்றிச் சுமத்துவதில்லை என்பதால் அந்நூல்கள் காவிய இலக்கிய வகையைச் சேர்ந்து விடுகின்றன. மறைமுகமாக அல்லது அவரின் தனிப்பட்ட உள் பிரக்ஞையாக இருக்கலாம், பாலின்ப அரசியலின் எம்மாதிரியான சுவரையும் அவர் எழுதும் நிகழ்வுகள் சுவரேறிக் குதிக்கின்றன.
ஒவ்வொரு மனிதனையும் பாலியல் ஒடுக்குமுறையின் செருப்படியில் அகப்பட்டுக் கிடப்பதிலிருந்து விடுவிக்க அவர் எழுத்து உதவுகின்றது. அவர்களைக் கைப்பிடித்து இருண்ட அறைகளிலிருந்தும் படுக்கை அறைகளிலிருந்தும் மோட்டார் பம்புசெட் அறைகளிலிருந்தும் நதிக்கரைகளிலிருந்தும் மலைக்குகைகளிலிருந்தும் சொர்க்கம் எனப்படும் மனோவெளிக்கு அழைத்துச் செல்கிறது.
தன் உள்ளுணர்வைத் தொடர்ந்து பயணிக்கும் எவரும் பயணத்தின் இடைவழியிலோ ஏன் தொடக்கத்திலே கூட தன் பாலின்பத்திற்கான தண்ணீர்ப் பந்தலைக் காணக்கூடும். ஆனால் அதில் இளைப்பாறாது அதன் குளிர்ச்சியை உணராது அதைப் புறக்கணித்து நகரக்கூடும். தனது முழுப் பயணவழியிலும் அதை நிராகரித்ததின் வலியும் சுமையும் தாகமும் நம் முதுகில் வியர்வையாய் ஒட்டியிருக்கக் கூடும். அம்மாதிரியான சுமைகளுக்கும் குற்றவுணர்வுகளுக்கும் இழப்புகளுக்கும் எளிதான நிவாரணம் அளிக்கக்கூடிய கற்பனையும் மெய்ம்மையின் அருகிலான அடர்ந்த வெளியும் அவர் தன் எழுத்தில் தருகிறார். அதன் கள்ளங்கபடமற்ற உலகம் ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் உடல் ரீதியாகக் கண்டடைவதற்கு உதவுகிறது. பெரும்பாலானோர் தத்தம் உடலின் அமைப்பையும் செயற்பாடுகளையும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. என்னவோ அதை மருத்துவர்கள் மட்டும் தான் அறிய வேண்டும் என்பதைப் போல.
ஆனால் ஆணும் பெண்ணும் பாலிய உறுப்புகள் வழியாக இணைவதால் தரும் இன்பத்தை அதன் முழுமையான அறிவின்றி உணரமுடியாது. அவ்வாறே ஏதோ முறையற்ற பாலியல் உறவுகளே இன்பம் என்ற கட்டுக்கதையும் மறைமுகமான அம்மாதிரியான இலட்சியமும் எல்லோருடைய மனதிலும் மறைந்திருக்க்க் கூடும். ஆனால் தன் உடல் எழுப்பும் அலைகளில் பயணிக்கும் திராணியுடையவரைக் கண்டடையும் பயணம் தான் பாலுறவும் அது தரும் இன்பங்களும்.
மனிதனிடம் அவனது பாலின்ப நிலை பிரக்ஞையற்ற நிலையிலும் இருக்கிறது என்று டி.ஹெச்.லாரன்ஸைப் போலவே அனைஸ் நின்னும் நம்பினார்.
தன் வாழ்க்கை முழுதும் ஓர் இலட்சியப்பூர்வமான பாலின்ப வாழ்க்கையை முன் வைத்துக் கொண்டே இருந்தார்.
பாலின்ப பரவசத்தை – உச்சத்தை தன் துணிவான செயலாகவும் ஒரு சாகசமென்றும் கூறுகிறார்.
உணர்ச்சிப்பூர்வமானதாக இருக்க இருக்க மனித உறவு தன்னுள் அடிமைத்தனத்தைப் பொதிந்து வைத்துக் கொள்கிறது என்பது அவரின் அரசியல். அப்படி இருந்தால் அந்தப் பொழுது கடுந்துயரமான ஒரு நினைவாக மனித மூளையில் பதிந்துவிடுகிறது.
தன் அன்றாட வருமானத்திற்காக சிரமப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் புனைபெயரில் பாலின்ப இலக்கிய எழுத்தில் மிகவும் தீவிராமக ஈடுபட்ட அனைஸ் நின், ஒரு கட்டத்தில் தன் பெயரிலேயே எழுத்தைத் தொடர்ந்தார். தன் பாலின்ப அனுபவத்தை அன்றாடம் நாட்குறிப்புகளாகவும் பதிவு செய்து வைத்தார்.
பல ஆண்களுடனான உறவுகளைப் பற்றியும் விளக்கமாகவும் நுட்பமாகவும் எழுதிய நின், அடிப்படையில் தன் சுயம் எதிர்கொள்ளும் முரண்களையும் யதார்த்தங்களையும் பதிவுசெய்திருக்கிறார்.
காம இச்சையின்பாற் பெண்கள் கொண்டிருக்கும் உயிர்ப்பற்ற உறவுக்கு முற்றிலும் எதிரான ஓர் ஆளுமையாக இருந்த நின், தன் சுயவாழ்க்கையிலும் படைப்பிலும் அதை நிறுவினார்.
அவருடைய எழுத்து, கூருணர்வுத் திறன் மிகுந்த ஆணுக்காக எழுதப்பட்ட பெண்ணின் பார்வை.
புலனறிவு மற்றும் அதன் இன்பத்தை உச்சரிப்பதற்கான சொற்களால் தான் விழிப்புணர்வை ஏற்படுத்தமுடியும் என்பதால் தன் உணர்வுகளைத் தெளிவாகத் தன்னால் பேசமுடிகிறதா என்பதற்கான தொடர்ப்பயிற்சி தான் பாலின்ப வகை இலக்கியம் என்றார்.
ஆண்களுடன் பாலின்பத்தைப் பகிர்ந்து கொள்வதும், பாலுறவு வைத்துக் கொள்வது மட்டுமே விடுதலையைத் தராது. அத்தகைய உறவில் உண்டாகும் உணர்வுகளுக்கேற்ற மொழியையும் பார்வையையும் உருவாக்குவதிலும் முனையவேண்டும். இது ஒரு கூட்டுச் செயல்பாடு என்பதையும் முன்வைத்தார்.
மெல்ல மெல்ல ஒரு பெண் தான் வாழும் தருணத்திற்கும் சூழலுக்கும் ஏற்றவாறு எந்த ஒரு சட்டத்தையும் வளைத்துக் கொள்ளமுடியும். முரட்டுத்தனமாக ஒரு கற்பனைவாதத்தைச் செயல்படுத்துவதை விட இது இலகுவானது. முரட்டுத்தனமான பொருள்விளக்கங்கள் இன்னும் சிக்கலைத் தான் தரும் என்றார்.
அனைஸ் நின்னின் இலக்கியத்தை வாசித்தப் பின்பு புதிதான ஓர் இலக்கிய வகையென பாலின்ப இலக்கியத்தை அடையாளப்படுத்தும் அதே சமயம் நவீன பெண்ணெழுத்தின் முத்திரையாகவும் அவரையே அடையாளம் காண முடிகிறது.
குட்டி ரேவதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக