நம் குரல்

யோனியின் மதகைத் திறக்கிறது உன் நினைவின் பெருக்கு

‘உடலின் கதவு’ என்ற என் நான்காவது கவிதைத் தொகுப்பு என்னைப் பொறுத்தவரை ஒரு பரிசோதனை வடிவிலான தொகுப்பு. தீவிர இலக்கிய வாசிப்பின் விதிகள் மடியும் துணிவின்மையும் நிறைந்தவை என்று எனக்குத் தோன்றும். காலங்காலமாகப் பழகிவந்த விதிகளை நொந்தவாறோ அல்லது விமர்சனம் பாராட்டாதோ தொடர்ந்து பின்பற்றுவது வழக்கமாக உள்ளது. அவற்றையெல்லாம் வேகத்தடையென மனதில் ஏற்காது, இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமானால் புறங்கையால் தள்ளிவிட்டு நூற்றுக்கும் மேலான கவிதைகளையும் அதிக அளவில் நீள் கவிதைகளையும் கொண்டு உருவான தொகுப்பு இது. வாசகர்களின் கவன ஈர்ப்பைக் கணக்கில் வையாமல் என்னையே நான் தொடர்ந்து சென்ற போது கண்டடைந்த பதிவுகளின் தொகுப்பு.




கருப்பொருளிலும் வேறு வேறு தளங்களைக் கண்டடைய உதவிய தொகுப்பு என்று சொல்லவேண்டும். பல வகையான பெண்கள் என்னுள் உறைந்து கிடப்பதாயும் அவர்களின் ஆளுமை வளர வளர என் புறத்தேவைகள் குறைவதாயும் தோன்றும். சந்தர்ப்பத்திற்கேற்றாற் போல அவை உருக்கொண்டு எழுந்து நிகழ்வுகளுடன் உரையாடுவதைப் போலவும் தோன்றும்.


அவ்விதம் எழுந்த கவிதைகள் இந்தத் தொகுப்பில் நிறைய உள்ளன. அரசியின் மேதமை, வனதேவதை, காந்தாரி, மணப்பெண், கண்ணகி, வனம் திரட்டிய சுகுணா, கடலை வரைந்தவள், பாட்டியின் ஆவி, நீலியின் கண்ணொளி… என்னில் மட்டுமல்ல எல்லோரிலும் இப்படித்தான் தருணங்களுக்கேற்ற பெண் படிமங்கள் உயிர்கொள்வார்கள் என்று எண்ணுகிறேன்.


ஒரே மூச்சில் படிப்பதற்குத் திணறல் தரும் தொகுப்பென்றாலும் அப்படி ஒரே மூச்சில் படிப்பதற்கு இல்லை கவிதைத் தொகுப்பு என்பது என் நம்பிக்கை.


எழுதி, திருத்தி, லயம் தொடர்ந்து, சொல்லவந்ததன் அருகில் சென்று திரும்பி, மீண்டும் மீண்டும் சரியாகச் சொல்லிவிட்டோமா என்று தன்னையே ஆராய்ந்து மீளும் வேதனை நிரம்பிய உருவாக்க முயற்சிக்குப் பின்பாக ஒரு தருணம் இளைப்பாறல் வந்து குடியேறும். அப்பொழுது தான் கவிதை முற்றுப்பெற்றதாய் ஒரு நிம்மதி. சொல்ல வந்ததைச் சிறு சொல் பிசிறும் இல்லாமல் சொல்லமுடிந்து விட்டால் அக்கவிதை யார் வாசிப்பிற்கும் இலகுவானது. மற்றபடி மொழியின் ஜாலங்கள் எனப்படுபவை எல்லாம் கவிதையைப் பொறுத்தவரை பேத்தல்கள் தாம்!


எனக்கு நண்பர்கள் இருவர் இருக்கிறார்கள். வேணு மாதவன் மற்றும் சந்திரா கமலநாதன். என் கவிதையை முதல் தொகுப்பிலிருந்து இதோ வெளிவரப்போகும் ஐந்தாவது தொகுப்பு வரை நுட்பமாக வாசித்திருப்பதுடன் இயல்பாகவே என் கவிதைகளை மனனம் செய்தவர்கள். எந்த ஒரு சொல்லையும் அதே அர்த்தத்தில் மீண்டும் நான் பயன்படுத்த நேர்ந்தாலோ படிமப்பிசகு இருந்தாலோ எங்கிருந்தாலும் வேதாளம் போல் முன்வந்து குதித்து இரைபவர்கள். அவர்கள் என் நெடுஞ்சாலையைச் செப்பனிட்டு என்னைப் பயணப்படுத்துபவர்கள். நான் அவர்களின் திறனுக்கு என்றென்றும் கடன்பட்டிருக்கிறேன்.



‘உடலின் கதவு’ தொகுப்பில் பக்கம் 16-ல் இடம்பெற்றுள்ள கவிதை இது:

நினைவின் மதகு
உனது நினைவின் மதகு
ஒரு மழைக்காலத்தின் வருகையை அறிவிப்பதாய்ப்
பெருகி வீழ்கிறது என் வெயில் பிரதேசமெங்கும்
கொஞ்சமும் தளராத வேட்கையுடன்
நுரை சுழித்த திமிரில் எனது பூமியில் குழிபறிக்கிறது அது
ஒரே நாளை ஆயிரம் முறைகள் வாழநேர்ந்ததாய்ச்
சலிப்பூட்டும் அதிகாலைகளைக் கசக்கி எறிகிறது
குகையினூடே ஒளி துளைக்கும்
அதன் சீற்றத்தின் கொதிப்பு உணர்ந்தும்
கைகள் பொசுங்க அள்ளிப் பருகுகிறேன்
நெடிய மரங்களினூடே அலையும் என் பார்வை
ஓர் அற்புதமான குறிஞ்சிப்பூவைக் கண்டுகளிக்கிறது
தொடுவானத்தை இடித்துவிடாமல் இருக்கட்டும்
நமது பிரிவு
இறக்கைகள் வலைக்கண்ணிகளில் சிக்காத பறவையைப் போல
பாயட்டும் நமது உடல்விசை
சிந்தும் ஒவ்வொரு துளியும்
கடலின் கருவறையைத் தொடக்கூடும் ஒருநாள்
யோனியின் மதகைத் திறக்கிறது உன் நினைவின் பெருக்கு








குட்டி ரேவதி

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ரேவதி,அடித்து நொறுக்குகிறீர்கள்.வாழ்த்துக்கள்.

குட்டி ரேவதி சொன்னது…

நன்றி, அமுதம்!

என்றாலும் ’அடித்து நொறுக்குகிறீர்கள்’ என்ற பதில் கவிதைக்கான கருத்துரையாக இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சூப்பர் ஸ்டார் படம் பார்த்த எஃபெக்டில் எழுதிய கருத்துரை போல இருக்கிறது.

எப்பொழுதுமே விமர்சனமோ மதிப்புரையோ வெறுமனே, ’நல்லாயிருந்தது!’ அல்லது ‘மோசம்!’ என்று குறிப்பிடுவதைக் காட்டிலும் எவ்வகையில் அது நல்லது எவ்வகையில் மோசம் என்று செம்மையான வார்த்தைகளால் எழுதினால் என் போன்றவர்களுக்கு ஊக்கமாயிருக்கும்.
இல்லையா, அமுதம்?

மேலும் கவிதை என்பது எதையும் அடித்து நொறுக்குவதற்கல்ல! மழையைப் போல கனத்த துளிகளால் மீண்டும் மீண்டும் வீழ்ந்து பாறையையும் கரைக்கும் முயற்சி தான்!