இந்த ஒரே ஒரு வாழ்க்கைக்குள்...
வாழ்க்கையே... இந்த ஒரே ஒரு வாழ்க்கைக்குள்
மலை முகட்டிலிருந்து ஒரு சிறு பாறையென
என்னை உருட்டித் தள்ளிவிடு
துயரங்கள் எழும்பி அடங்கும் கடலுக்குள்
உணர்ச்சிகளில் உடலை நீந்தவிடு
சிதிலங்களின் மறைவில் வாழப்பணி
முலைகள் பூக்கத் தொடங்கும் போது
பருவத்தின் படகில் வந்து மிதந்து பறித்துச்செல்
மலைகளின் உடலுக்குள்ளிருந்து புறப்படும்
மிருகங்களின் வாயினைச் சந்திக்கவை
இரத்தம் சூடாகிப் பிளிறும்போது
கண்ணாடிகளை அழைத்துவா எதிரில்
நெருப்புக்கங்குகளான எனது வார்த்தைகளாலேயே
என்னைச் சாம்பலாக்கித் தூவிவிடு
பிசாசுகள் கோஷமிட்டுச் செல்லும் தெருவில்
கடவுள் என்பவரின் சுவடுகளைக் காட்டு
உடலை எரியூட்டும் காதலோடு
வேசியாய் அலையவிடு தெருமுனைகளில்
பூமியெங்கும் இரத்தம் மடை திறக்கையில்
மானுடர்க்கு மத்தியில் ஒரு புல்லாக்கிக் கருக்கு
என்னை
நட்சத்திரங்கள் சுடும் உயரத்தில்
ஒரு பறவையாகி உடலை நீட்டவேண்டும்
ஒவ்வொரு குடிசைக்கும் ஒரு சூரியன் உண்டல்லவா?
(முலைகள், முதல் பதிப்பு: 2002, தமிழினி, இரண்டாம் பதிப்பு: 2003, பனிக்குடம் பதிப்பகம்,
பக்கம்; 55)
2002 -ல் வெளியான ‘முலைகள்’ தொகுப்பில் இடம்பெற்ற கவிதை இதுவும். உடலின் சாத்தியங்களை அதிகப்படுத்துதலையும் அசாத்தியங்கள் என நிர்ப்பந்திக்கப்பட்டவைகளைப் பரிசோதனைகளாக உடல் தேர்ந்தெடுத்துக் கொள்ளுதலையும் முன்மொழியும் தொனி. அடுத்தடுத்த வரிகளிலேயே இருமையின் இரு முகங்களையும் கொண்டு விரியும் இக்கவிதையின் ஊடுபாவாய் தொனிக்கும் ‘பிரக்ஞை’ என்பது பற்றிய சந்தேகம் என் வாழ்வின் பாதைகளோடும் சம்பந்தப்பட்டவை என்பதால் இங்கு அது குறித்து எழுதலாம்.
இந்த ஒரு சிறு கவிதைக்குள்ளேயே என் ஒட்டுமொத்த பிரக்ஞையையும் நிறைத்துவிடத்துடித்தேன். பிரக்ஞை என்பது ஒரு தனி மனிதன் பிரபஞ்சத்துடன் கொண்டிருக்கும் உறவைச் சுட்டும் புலனுணர்வு என்று சரியாகப் பொருள் கொள்வோமானால், அதை என்னுடல் வழியாகவே முழுமையும் நிறைவேற்றிக் கொள்ள முடிந்ததை பல முறை நான் உணர்ந்திருக்கிறேன். இது பெரிய தத்துவ விசாரம் மட்டும் அன்று; தர்க்கப்பூர்வமானதும்.
ஆண்மைக்கு ஒரே ஒரு தட்டையான உடல் தான். பெண்மைக்கு பருவந்தோறும் எழுச்சியுறும் பல பரிமாண உடல்கள். எனில் பெண்ணென்பவள் மனதின் விழிப்பு நிலைகளையெல்லாம் எவ்வாறு ஒன்றாகத் திரட்டிச் செயல்படுகிறாள் என்பதை வியப்புறுகிறது இக்கவிதை. பெண்ணுக்கு மறுக்கப்பட்ட எல்லா வெளிகளையும் அபகரிக்கும் தீவிரத்தையும். எல்லாவிதமான உணர்வுகளும் பெருகிப்பாயும் பேராற்றில் பாய்ந்து நீந்தும் தீரத்தையும்.
என்னைப் இப்பிரபஞ்சத்துடன் இணைக்கும் முயற்சியே இக்கவிதை. நான் எழுதியிருந்த ஒரு கவிதை மனித மரணத்தைப் பற்றியதாக இருக்க, ஒரு கவிஞர் கிண்டலடித்தார்: இந்த வயதில் மரணத்தைப் பற்றி எனக்கு என்ன தெரிந்துவிடப் போகிறது என்று. நான் சித்தமருத்துவம் பயில விரும்பி இரண்டு வருட முயற்சிக்குப் பிறகு தான் அந்த வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இரு வருடங்களுக்குப் பிறகும் நான் பிடிவாதமாக அம்மருத்துவம் படிக்க விரும்பியதன் நோக்கம், உடல் எனும் விந்தையை முழுமையாய் அறிதலில் எனக்கு இருந்த தீவிரமும் அதன் கட்டமைப்பு மற்றும் செயல்பாடு குறித்த தத்துவப் பின்புலத்தை அறிவதில் இருந்த ஆர்வமும் தான்.
உடல் ஐம்பூதங்களின் கூட்டுக் குழம்பு. மரணத்தின் போது அது ஐம்பூதங்களாய்ச் சிதைந்து போகிறது, அவ்வளவே என்று நான் திடமாக நம்புகிறேன். ஆனால் என் கவிதைகளின் வழியாக என் உடல் உணர்ந்த பிரக்ஞையைத் துல்லியமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். என் பிரக்ஞையின் தூல வடிவமே கவிதை. படைப்பூக்கம் உள்ள ஒவ்வொருவரும் தன் பிரக்ஞைக்குத் தான் வடிவம் கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர்.
ஒவ்வொரு முறை இக்கவிதையை படிக்குந்தோறும் எழுதும் போது உணர்ந்ததைக் காட்டிலும் அதிக நீட்சியடைந்த பிரக்ஞையை என் உடல் உணர்கிறது. பூத்துக்குலுங்குகிறது. மேலெழுந்து பறக்கிறது. தன்னைச் சிதைத்துக் கொள்கிறது. மீண்டும் புது உருக்கொள்கிறது. என் பேரரசை விரிக்கிறது. உடலின் பிரக்ஞையைச் சொற்களுக்கு ஊட்டும் வித்தையே கவிதை என்பதை முன்மொழிகிறேன். இப்பொழுது மீண்டும் கவிதையை படித்துப் பாருங்கள். வேறெவரின் கவிதையையும் கூட. அதில் பிரக்ஞை தொனித்தால் கவிஞனின் புலன்கள் இனியன என்பதையும் ருசித்துப்பாருங்கள்!
குட்டி ரேவதி
தலைப்பு: பாரதியாரின் ‘முதற்கிளை: இன்பம்’ வசனகவிதையின் ஒரு வரி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக