நம் குரல்

பெண்பேய் - காரைக்கால் அம்மையார்




காரைக்கால் அம்மையாரை வாசித்தேன். சில பாடல்களில் அவரின் உடல் எழுந்து நின்று உருக்கொண்டு ஆடும் தாளலயம் சொற்களின் பின்னிருந்து ஒலிக்கிறது. அவரின் உடற்சித்திரமும் பெண்ணெனும் பொது உருவிற்கு முற்றிலும் எதிரானது. புதிதானது.



பெண்பேய் என்னும் உருக்கொள்ளும் விருப்பீர்ப்பில் வந்து விழும் சொல்லாட்சி அவரை அப்பெண்பேயாகவே ஆக்குகிறது.



சுடுகாட்டை பெண்ணின் உலவுவெளியாகவும் பொதுவெளியாகவும் ஆக்கிய ஆளுமை. அதற்கு பக்தி ஒரு சாக்கு.



பெண்பேய் என்பது தன்னைத் தானே சிதைவின் தளத்தில் இருத்திப்பார்க்கும் ஒரு பெண்ணின் நுட்பமான குறியீடு.



நாடகார்த்தமான அனுபவத்தைத் தருகிறது. காரைக்கால் அம்மையார் நாடகத்திற்கான ஒரு கதாபாத்திரம். உடல் எழுச்சியும் மனோவேகமும் மிக்க பெண்கள் முயன்று பார்க்கலாம்.



கள்ளிக் கவட்டிடைக் காலை நீட்டிய பெண்பேய், பழைய தமிழ்திரைப்படங்களில் நிலைபெற்றதொரு கற்பனை.



இங்கு எனக்குப் பிடித்த மூன்று பாடல்களைத் தந்திருக்கிறேன்.


கள்ளிக் கவட்டிடைக் காலை நீட்டி


கடைக் கொள்ளி வாங்கி மசித்து மையை


விள்ள எழுதி வெடுவெடென்ன


நக்கு வெருண்டு விலங்கு பார்த்துத்


துள்ளிச் சுடலைச் சுடுபிணத்தீச்


சுட்டிட முற்றுஞ் சுளிந்து பூழ்தி


அள்ளி அவிக்க நின்றாடும் எங்கள்


அப்பனிடந் திரு ஆலங்காடே


-மூத்த திருப்பதிகம் 1:2


எட்டி இலவம் ஈகை சூரை காரை படர்ந்தெங்கும்


சுட்ட சுடலை சூழ்ந்த கள்ளி சோர்ந்த குடர்கெளவப்


பட்ட பிணங்கள் பரந்த காட்டிற் பறைபோல் விழிகட்பேய்


கொட்ட முழவங் கூளி பாடக் குழகன் ஆடுமே.

-மூத்த திருப்பதிகம் 2:13


கொங்கை திரங்கி நரம்பெ ழுந்து
குண்டுகண் வெண்பற் குழிவ யிற்றுப்
பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு
பரடுயர் நீள்கணைக் காலோர் பெண்பேய்
தங்கி யலறி யுலறு காட்டில்
தாழ்சடை எட்டுத் திசையும் வீசி
அங்கங் குளிர்ந்தண லாடும் எங்கள்
அப்பனிடம்திரு ஆலங் காடே.

-மூத்த திருப்பதிகம் 1:1


குட்டி ரேவதி

2 கருத்துகள்:

Aathira mullai சொன்னது…

இதுவரையும் இனியும் படிக்கும் ஆர்வமுடன். கருத்துரை பதியும் தடம் அடைபட்டிருந்ததால் வருந்தி... மீண்டும் முயற்சி செய்து..வந்துள்ளேன். தொடர்ந்து உங்கள் எழுத்துகளை எண்ணி படிக்கும் ஆர்வத்தாள்..இவள்..காரைக்கால் அம்மையார் பாடல்களை ரசித்தேன். தங்கள் எழுத்துகளையும்..நிறைவாக..

குட்டி ரேவதி சொன்னது…

ஆதிரா, உங்கள் கருத்துரை முத்திரைச் சுருக்கமாய் அழகாய் இருக்கிறது. நன்றி!