பெண்களிடமிருந்து பறிபோன இன்னொரு உரிமை, கதை சொல்லும் உரிமை. விசித்திரமாயிருக்கலாம். பாட்டிகள் தான் கதைகள் சொல்லுவார்கள் என்ற பொது வழக்கின் பின் வேறு வேறு அரசியலும் வரலாறும் சமூகவியலும் அடுக்கடுக்காகப் படிந்துள்ளன. கதை சொல்லுவது பெண்கள் மத்தியில் ஓர் அன்றாடப் பழக்கம். நிகழ்வுகளைப் பாத்தவர்கள், பார்த்தவர்களிடமிருந்து கேட்டவர்கள், கேட்டவர்களிடமிருந்து கேட்டவர்கள் என ஒரு நிகழ்வைச் சொல்லும் முறை திரிபடைந்து சுவையான கதைகளாகியிருக்கின்றன. அந்தக் கதைகளுக்குள் அவர்கள் சொல்லவந்த நீதிகளும் அறங்களும் புதைந்திருக்கின்றன. அப்படிக் கதைகளைச் சொல்லிச் சொல்லி பெண்கள் அன்றாட வாழ்வினுடன் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். பண்பினக்கம் செய்து கொண்டார்கள். இன்றைப் போல் அன்று ஊடகங்கள் இல்லை. நிகழ்வுகளைப் பற்றி அறிந்து கொள்ள பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் இல்லாத காலகட்டங்களில் மனிதர்களின் வாய்களும் காதுகளும் தான் ஊடகங்களாக இருந்தன. பொதுவெளிக்குச் செல்ல முடியாமல் பெண் சமூகம் ஒடுக்கிவைக்கப்பட்டு வைத்திருந்த போது கதை சொல்லுதல் தான் பெண்களை பொது வெளியோடு இணைத்தன. கேட்ட ஒன்றிரண்டு தகவல்களைக் கூட்டியும் பெருக்கியும் கற்பனை செய்யத் தூண்டின.
இந்தக் காலத்தில் போல் அந்தக்காலங்களில் மனிதனுக்கு ‘பொழுதைப் போக்கும் வசதிகள்’ தேவைப்படவில்லை. மாறாக, ‘பொழுதைப் பயன்படுத்தும் ஊக்கங்கள்’ தாம் தேவைப்பட்டன. மானுட நலம் பேணும் பணிகளில் மனிதர்கள் ஈடுபட்டுத் தம் சுயதேவைகளையும் பூர்த்தி செய்து கொண்டனர். அதற்கு ஏற்றாற் போல கதைகளும் கதை சொல்லும் முறையும் உருவாகி இருந்தன. கதை சொல்லல் ஒரே சமயத்தில் கலை வடிவமாகவும் சமூகப்பயன்பாடாகவும் இருந்திருக்கவேண்டும். இன்றைய மனிதனின் தேவை தற்காலிக சுவாரசியங்களை நோக்கியதாக இருக்கிறது. செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகள் மக்களை சுவாரசியப்படுத்துவதற்காக எத்தகைய அறம்மீறலையும் செய்யத் துணிகின்றனர். தொலைக்காட்சியும் திரைப்படங்களும் பார்வையாளர்களுக்குத் தற்காலிகமான சுவாரசியங்களைத் தந்து ஓர் ஈர்ப்பிற்குள் கட்டிவைப்பதில் முனைந்துள்ளன. அவை பார்வையாளர்களை திரை நிகழ்ச்சிகளின் கருப்பொருளுடன் ஈடுபடுத்த வேண்டிய அவசியமில்லை. அவர்கள் பொழுதைப் போக்க வேண்டும்; கரைக்க வேண்டும். அவ்வளவு தான்! ஆகவே தான் பெண்கள் தொலைக்காட்சி தொடர்களின் முன் கண்ணிமைக்காமல் உட்கார்ந்திருக்கின்றனர். கதைகளைச் சொல்ல வேண்டியவர்கள், கதைகளைப் பார்ப்பவர்களாகவும் கேட்பவர்களாவும் மாறியிருப்பது ஒரு வணிக உத்தி. சமூக இழிவு.
அந்தக் காலங்களுக்குச் செல்வோம். எழுத்தறிவு ஏற்படும் முன் வாய்மொழி தான் மக்களின் பொதுவான ஊடகம். எழுத்து மொழி தோன்றிய பொழுதும், எழுத்து மொழி தோன்றும் முன், குறிப்பாக சமூக நிறுவங்களான மதம் திருமணம் குடும்பம் சாதி போன்றவை அழுத்தமாகத் திணிக்கப்பட்டதும் பெண்களுக்கு பொதுவெளிகளும் சமூக வெளிகளும் மறுக்கப்பட்டன. அதாவது பெண்கள் தன் குடும்பத்திற்கு உணவு உற்பத்தி செய்யும் அரவை இயந்திரங்களைப் போல மாறிப் போயினர். கிராமங்களில் ஊர்களில் நடக்கும் பொது நிகழ்வுகளில் பெண்களுக்கு இருந்த பங்கும் முன்னிலையும் பறிபோயின. நிகழ்வுகளில் பங்கு பெறும் அனுமதி மறுக்கப்பட்ட பெண்கள் கதை சொல்லிகளாக மாறினர்.
ஏனெனில், எப்போதும் தம் உரிமைகளாக, இயல்பூக்கங்களாக இருந்த கற்பனை வளம் வறண்டு போவதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. வெவ்வேறு கதை முறைகளை உருவாக்கினர். பாட்டும் கதையும் வாய்மொழி மரபின் ஆணிவேர் என்று சொல்லலாம். மேலும் நினைவுகளைத் தேக்கி வைக்கும் ‘வட்டு’ (DISC) போல அவர்கள் தங்கள் நினைவுகளை கதைகளாக மாற்றி வைத்துக் கொண்டனர். அக்கதைகளில் சுயவரலாறும் வரலாற்றில் இடம்பெறாமல் போன உள்ளூர் வரலாறுகளும் தன்னையொத்த பெண்கள் போராடிய வரலாறும் இருந்தன. அக்கதைகள் வழியாக அவர்கள் வெளிப்படுத்த விரும்பிய அரசியல் பார்வைகள் சிலேடையாக மரபுச் சொற்களாக வெளிப்பட்டன. பகடியும் விமர்சனமும் பூடகங்களாக இருந்தன. மேலும், கால ஓட்டத்தில் சம்பவங்களும் உணர்ச்சிகளும் தொலைந்து போகாமல் இருப்பதற்காக, அவற்றைக் கதைகளாக வடிவமைத்து வைத்துக் கொண்டனர். எழுத்து மொழி மறுக்கப்பட்ட போது பெண்களுக்கு இடையே இக்கதை சொல்லும் மரபே முதன்மையான ஊடகமாக மாறியது. அடுத்த தலைமுறைகளுக்கு தம் வாழ்வின் நீதிகளை கடத்தும் வழிமுறையாக இருந்தது. எல்லா அடிப்படையான உரிமைகளும் மறுக்கப்பட்டு, ஆண் - பெண் ஏற்றத்தாழ்வுகள் பயிலப்பட்டு வந்த பொழுது பெண்களுக்கு இருந்த ஒரே வழிமுறையாக கதை சொல்லுதலே இருந்தது. திரெளபதி அம்மன் கதை. சுடலைமாடன் கதை, முப்பாட்டன் கதைகள் வாய்மொழிகளாய் சொல்லப்பட்ட போது அவற்றின் செவ்வியல் வடிவத்திற்குள் அந்தந்த ஊர்களின் கதைகளும் பின்னிக்கொண்டன. ஒப்பாரிகளுக்குள்ளும் கதைகள் ஒளிந்திருந்தன. தாலாட்டுகளுக்குள் இழந்த உரிமைகளும் எதிர்நோக்கிய போராட்டங்களும் பொதிந்து வைக்கப்பட்டிருந்தன.
இன்று கதை சொல்லும் ஊடகங்களிலிருந்து பெண்கள் முழுதுமாக புறந்தள்ளப்
கதைகளைச் சொல்லும் கலையின் உச்சபட்ச வடிவம் தான் திரைப்படங்கள். அங்கும் பெண்கள் பார்ப்பவர்களா
குட்டி ரேவதி
குறிப்பு: ‘பெண்ணெணும் பெருந்தகை’ எனும் பொருளில் அரும்பு இதழில் தொடர்க்கட்டுரைகள் எழுதிவருகிறேன். இது சென்ற மாதம் வெளியாகியுள்ள கட்டுரை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக