நம் குரல்

வம்சம் - விமர்சனம்


இயக்குநர் பாண்டிராசுக்குக் கதை சொல்லும் திறன் இருக்கிறது. ஆனால் கதை தான் சிக்கமாட்டேன் என்கிறது.



இரண்டு ஊரின் பகைக்கிடையில் சிக்கிக்கொள்ளும் நாயக, நாயகி மற்றும் இதர கதாபாத்திரங்கள். இது தான் கதை. ‘களவாணிதிரைப்படத்தின் ஒரு வரிக்கதையும் இதுதான்!



நாட்டார் பண்பாடு, இனவரைவியல் என்றெல்லாம் வகைப்படுத்தி, ஒரு குறிப்பிட்ட இனக்குழுச் சமூகம் பற்றிய திரைக்கதையை என்னதான் நியாயப்படுத்தினாலும் சரியான அணுகுமுறையும் பக்குவமும் இல்லாததால் அர்த்தமிழந்து உதிர்கின்றன.



செய்ய விரும்பிய கொலையைச் செய்து விட்டு, ‘பட்டைச்சாராயமும் பன்னிக்கறியும் திங்கவச்சுட்டாங்களேய்யாஎன்று சப்பைக்கட்டாய்த் தாழ்த்தப்பட்டவர்களின் குறியீடுகளை உள்ளே இழுத்துக் கொள்ளுவதற்கு வாய்ப்பாக அமைந்த ஏராளமான சண்டைக் காட்சிகள் இயக்குநரின் நோக்கங்கள் குறித்த கேள்விகளை எழுப்புகின்றன.



கோடம்பாக்கத்தை ஒட்டி வசிப்பவர்களுக்குத் தான் தெரியும் இந்தப்படத்தின் கதாநாயகனுக்குச் செய்யப்பட்ட அளவுக்கு மிஞ்சிய விளம்பரப்பலகைகளும் சுவரொட்டிகளும். வாசலில் தட்டி வைத்து மறித்தது போல் திரையரங்கில் கூட்டமே இல்லை.



சண்டைக்காட்சிகளுக்கு முன்பான நீள நீள நடையும் ஓட்டமுமான முன்னோட்டக் காட்சிகள் அயர்ச்சியைத் தருகின்றன.



தேவர் சமூகப் பெண்களின் அம்சங்களாகக் காட்ட முயற்சித்திருக்கும் அத்தனைக் காட்சிகளும் பெண்களுக்கு அழகு கூட்டாமல் நிகழ்வுகளுடனும் பொருந்தாமல் முகம் தொங்கிப்போகின்றன.



துடைப்பத்தையும் அரிவாள்மனையையும் காட்டும் பெண்கள் புத்திசாலிப்பெண்களாக இல்லாமல் போய்விடுவார்களா என்ன?



மற்ற சாதிப் பெண்களை விட, தேவர்சாதிப் பெண்களுக்கு, அச்சாதியின் கட்டுப்பாடுகளையும் முறைகளையும் நிறைவேற்றுவதற்கான வற்புறுத்தல்கள் அதிகம். ஆகவே, அவர்கள் மீது செலுத்தப்படும் ஒடுக்குமுறைகளிலிருந்து வெளியேற முடியாத தவிப்பு நிறைந்த பெண்களாய்த் தான் யதார்த்தத்தில் அவர்களை பார்த்திருக்கிறேன்.



கதாநாயகனின் அம்மா பள்ளி ஆசிரியையாக இருந்தாலும் முடிவெடுக்கும் துணிவு மிக்கவர் என்றாலும் பிற்பாடு தன் வீரத்தை இழந்து அடக்க ஒடுக்கமாய் மாறிவிடுவதற்குக் காரணம், ‘எப்பாடுபட்டாலும் பிற்பாடு கெடாதவர்என்ற வம்சப் பெருமையையும் வம்சத்தையும் காப்பாற்றிக் கொள்ளுதலாம்.



கிராமக்கதை என்ற பூச்சுடும் வேலையெல்லாம் பாரதிராஜாவுடன் ஏற்கெனவே நிகழ்ந்து விட்டது. இப்பொழுதைய சமூக அமைப்பின் புதிய குளறுபடிகளைப் பேசியிருந்தால் இச்சமயத்தில் வரவேற்கத்தக்கதாக இருக்கும். செல்ஃபோன் நகைச்சுவைகள் மட்டும்தாம் புதியதாய் இருக்கின்றன.



அரைகுறையான யதார்த்த சினிமா. யதார்த்த சினிமா என்னும் பெயரில் முன்வைக்கப்படும் இயல்பான சாதீயக்கதை, சாதிப்பெருமைகள்! சாதி, அண்டை அயல் மக்களுடன் கொண்டிருக்கும் முரணைப் பேசாமல் விடும்போது, அல்லது புரிந்து கொள்ளத் தயங்கும்போது இயக்குநனான கலைஞன் யதார்த்தத்தின் பக்கம் நிற்கமுடியாமல் தோற்றுப்போவது தெரிகிறது.


காதுக்கு ஓய்வே இல்லாமல் இசை வெறும் இரைச்சலாய் குடைந்துகொண்டே இருக்கிறது.



இந்தப் படத்தின் வழியாகச் சொல்லப்பட்ட தேவர் சாதிப் பெருமையையும் வம்ச விருத்தியைக் காப்பதற்கான நியாயங்களையும் இப்படத்திலிருந்து தொடங்கி ‘தமிழ் சினிமாஇன்னும் பல படங்களுக்குத் தொடரும் என்று வெகுநிச்சயமாய் எதிர்ப்பார்க்கலாம்.


என்ன தான் பெண்ணை தெய்வமாகப் பார்க்கும் சாதி என்றாலும் பள்ளிக் கல்வியில் மாநிலத்திலேயே முதலாவது மதிப்பெண் பெற்ற பெண்ணை மாடு மேய்ப்பதற்கு அனுப்புவதில் பெருமை கொள்ளும் சாதியும் கூட.



திரைக்கதைக்கு என எடுத்துக் கொண்ட கருப்பொருள் அரைவேக்காட்டுத்தனத்துடன் இருப்பதால், படத்தில் இடம்பெற்றிருக்க வேண்டிய புதிய நிலவெளிக்கான ஒளிப்பதிவுக்கும் இசைக்கும் ஏராளமான சாத்தியங்கள் இருந்தும் கருப்பொருளே கலைஞனின் யத்தனத்தை குறுக்கி முடக்குகிறது.



‘தேவர் சாதிஎன்று நேரிடையாக என் கருத்துகளைக் குறிப்பிட்டது குறித்து சாதி விசுவாசிகள் வருத்தமுற வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். ஒரு படமே நேரிடையாக இதை முன் வைத்துப் பேசும் போது என் கூற்று ஒன்றும் பெரிய பாதகத்தை ஏற்படுத்திவிடாது.


‘எப்பாடு பட்டாலும் பிற்பாடு படம் ஓடாதுஎன்பதற்கான போதிய காரணங்கள் இருப்பதால் மக்கள் மனதில் இடம்பெறுவதற்கான எந்த அம்சமும் இல்லாத ‘வம்சம்’!


குட்டி ரேவதி

2 கருத்துகள்:

Shubashree சொன்னது…

ரேவதி... நான் மகான் இல்லை - பார்த்தீர்களா? உங்கள் விமர்சனத்தை எதிர்பார்க்கிரேன்...

குட்டி ரேவதி சொன்னது…

இன்னும் பார்க்கவில்லை சுபா. சமயம் வாய்ப்பும் வாய்த்தால் கண்டிப்பாய் எழுதுகிறேன்.