நம் குரல்

புலி வேட்டை


ஆள்கொல்லிப் புலிகளை வேட்டையாடிய ஜிம் கார்பெட்டின் ‘குமாயுன் புலிகள்நூலை உங்களில் எவரேனும் வாசித்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை. புலனுக்கும் அறிவுக்கும் ஒரேசமயம் இன்பமளிக்கும் இத்தகைய நூலை சமீபத்தில் நான் வாசிக்கவில்லை. புலிகளை வேட்டையாடும் மனிதன், மனிதர்களை வேட்டையாடும் புலிகள் என இரண்டு எதிரெதிர் சமூக இயக்கங்களின் வெளிகளாக விரியும் இந்நூலை தி.ஜ.ர. (திங்களூர் ஜகத்ரட்சகன் ரங்கராஜன்) மொழிபெயர்த்திருக்கிறார். நீரில் தூண்டிலிட்டு அல்லது புடவைத் தலைப்பை நீருக்கடியில் பறக்கவிட்டு மீன்பிடிக்கக் காத்திருக்கும் அதே அனுபவம் இந்த நூலை படிக்கும் பொழுதும் ஏற்படுகிறது.


ஆட்கொல்லிப் புலிகள் என்று அறிவிக்கப்பட்டவற்றை அடர்ந்த காட்டுக்குள் தேடிச் சென்று வேட்டையாடிய வேட்டை அனுபவ நூல் இது. ஜிம் கார்பெட் அதற்காக அந்தந்தக் காட்டை ஒட்டிய கிராமங்களில் சென்று தங்கி, ஆட்கொல்லிப் புலிகளின் குணங்களையும் வாழ்முறையினையும் அறிந்து கொண்டு அவற்றைத் தேடிச்செல்லும் அனுபவங்களை பதிவுசெய்திருக்கிறார். நிறைய கிளைக்கதைகளும் ஆங்காங்கே முளைத்து நம்மைப் பரவசப்படுத்துகின்றன. வேட்டைக்கு உடன் அழைத்துச் செல்லும் நாய் ராபினின் கதை நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதுடன் ராபினை நாம் அதிகமாய் நேசிக்கத் தொடங்கிவிடுகிறோம்.


மலை காடு ஆறு என நில, நீர்வெளியை நுணுக்கமாக அதன் அங்க அடையாளங்களுடன் விவரித்து, அதன் கட்டுடையாமல் நம் கண்முண் நிறுத்துகிறார் ஜிம் கார்பெட். அவர் நுழைந்திருக்கும் காட்டின் வரைபடம் அதிகச் சிரத்தையுடன் நம் முன் எழுதப்படுகிறது. இரவும் பகலும் காட்டிற்குள் முறையே சிறுத்தையையும் வேங்கையையும் தேடிச் செல்லும் அவரது பயணத்தின் சிரமங்களும் திருப்புமுனைகளும் ஏற்கெனவே தென்மாநில காடுகளுக்குள் பலமுறை பயணித்த என் போன்றவர்களுக்கு இன்னும் பரபரப்பூட்டுவதாகவும் கற்பனையைத் தூண்டுவதாகவும் இருக்கின்றன. வாசிக்கத் தொடங்கினால் புத்தகத்தைக் கீழே வைக்க முடியாத அளவுக்கு உரைநடையின் நாவல் மொழியும் சுவாரசியமும் இயல்பான கச்சிதமான சொற்சேர்க்கையுடன் ஆளப்பட்ட மொழியாக்கமும்.


ஓர் இயற்கைச் சூழலில் இருக்கும் அத்தனை உயிர்ச்சித்திரங்களையும் அவற்றைப்பற்றிய துல்லியமான சப்த உருவக்குறிப்புகளுடன் இவ்வேட்டைப் பயண நூலில் பதிவுசெய்திருக்கிறார் ஜிம். அவை வெறுமனே ஒரு விவரக்குறிப்பாக இல்லாமல் சம்பவத்துடன் கூடிய ஓர் அனுபவ விவரிப்பாகவும் இருக்கிறது. ஓர் வேட்டையாளன் தனது செவிப்புலனறிவு, நாசிப்புலனறிவு, கட்புலனறிவு ஆகியவற்றுடன் இவை எல்லாவற்றையும் ஒரே சமயம் கையாளும் மாயவித்தையையும் கொண்டிருக்க வேண்டும். பல இடங்களில் புலியின் தன்மையும் அதை வேட்டையாடும் வேட்டையாடியின் தன்மையும் ஒரே குண இயல்புகளைப் பெற்றுள்ளதைப் போல தோன்றுகிறது. வேட்டை அனுபவத்தை அவர் விவரித்துக் கொண்டிருக்கையில் நடையின் எந்த இடத்திலிருந்து புலியின் சுவடுகள் தொடங்குமோ என்னும் ஆர்வக்குறுகுறுப்பு நம்மை நிமிண்டிக்கொண்டே இருக்கும்.


வேட்டை என்பது நிஜமானதொரு மெய்வருத்தும் பணி. அதற்குத் தேவையான அதிமுக்கியமான அறிவு கற்பனை வளம். சண்டைக்கான இயற்கையான உணர்ச்சிகள் உச்சம் பெறும் தருணம் வரை வேட்டையில் ஈடுபடுபவர், அவர் மனிதனாயிருந்தாலும் புலியாயிருந்தாலும் பதுங்கி இருக்க வேண்டும். உடல் முழுதும் புலன்களின் ஆணைகளைத் தட்டாமல் ஏற்கும் இராணுவம் போல செயல்படவேண்டும். இவ்வாறு வேட்டையை தனிமனித சுபாவத்துடன் இணைத்துப் பார்க்கும் அளவுக்கு பொதுத்தன்மையையும் கொண்டிருக்கிறது. ஜிம் கார்பெட் தன் வேட்டை அனுபவங்களுக்கு அப்பாற்பட்டு பயின்ற, நுகர்ந்த மனிதத் தன்மைகளும் அவற்றுடன் இயல்பாகவே தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டதும் தாம் இதைச் சாத்தியப்படுத்துகின்றன.


‘குமாயுன் புலிகளை’ப் படித்து முடிக்கும் ஒருவர், காட்டுக்குள் பிரவேசிக்க விரும்பும் தன் இச்சையை நிறைவேற்றிக் கொள்ளாதவரை நீருக்குள் நீச்சலடிப்பது பற்றி புத்தகத்தில் படிப்பது போலாகிவிடும். என்ன தான் நூலில் வாசித்தாலும் காட்டுக்குள் பயணிக்கும் அனுபவம் என்பது ஒரு மனிதனின் அடிப்படையான தேவை என்பதை பலசமயங்களில் நான் உணர்ந்திருக்கிறேன். அது பெண், ஆண் என்ற பேதமில்லாமல் ஒரு பரிபூரண விடுதலை உணர்வைக் கொடுக்கிறது. இனியொரு முறை காட்டுக்குள் நுழைய நேர்ந்தால் வழியில் புலியின் சுவடுகள் தென்படுமா? அவை முன் சென்ற சுவடுகளைக் காணும் வாய்ப்பைத் தருவதற்கேனும் புலிகள் மீதமிருக்குமா என்ற கேள்விகளுடன் இதை முடித்துக் கொள்ளலாம்.

குட்டி ரேவதி

2 கருத்துகள்:

Shubashree சொன்னது…

நல்ல ஆய்வு! நான் தமிழில் கார்பெட்டின் மொழிபெயர்ப்பை படிக்கவில்லை ஆங்கிலத்திலும் அவருடைய மொழிவளம் நீங்கள் சொல்வதை போலவே ஒரு வித இசை கலந்த நடையாக தான் உள்ளது. அது தமிழிலும் கொண்டுவரப்பட்டிருப்பது மொழிபெயர்த்தவரின் ஆளுமைக்கு ஒரு எடுத்துக்காட்டு!
காடு இன்னொரு உலகம்... அதன் கதைகள் அதன் மக்களிடமிருந்து கேட்டு தெரிந்து கொள்ளவேண்டியவை...

குட்டி ரேவதி சொன்னது…

நன்றி, சுபா! ஜிம் கார்பெட் ஆங்கிலத்திலும் இதே அனுபவத்தைத் தருவார் என்பதில் ஐயமே இல்லை. ‘இசை கலந்த நடை’, இவர் மொழிக்குப் பொருத்தமான சொற்கோர்வை!