நம் குரல்

சாபோ - காதலியரின் ராணி




சாபோ, ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்கப் பெண் கவிஞர். அவரது காலத்தில் அவரைப் போல எழுத்தில் அந்தரங்கக்கூறுகளைக் கொண்டு வந்த பெண் எவருமில்லை என்று புகழப்படுகிறார். அதாவது தன் தனித்த வாழ்வின் விவரங்களை வெளிப்படையாக முன் வைத்தவர். லெஸ்போஸ் என்ற தீவில் ஆடம்பரமான வாழ்க்கையையும் அணிகலன்களையும் அதன்பால் மிகுந்த விருப்பீர்ப்பையும் கொண்ட பெண்ணாக இருந்திருக்கிறார் சாபோ. ஒரு கப்பலோட்டியுடனான தன் காதல் நிறைவேறாமல் போனதற்காக மலையிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார் என்ற கட்டுக்கதையும் உண்டு. இவரது மொத்த எழுத்தும் ஒன்பது நூல்கள் அளவிற்குச் சேகரிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் சில கவிதைகளாக இல்லாமல் நன்கு செதுக்கப்பட்ட கூழாங்கற்களைப்போன்ற வழவழப்பான சொற்களுடைய, சொல்லாட்சிகளுடைய வாக்கியங்களாகவே கிடைக்கின்றன.

இன்றும் ஒருபால் உறவுடைய பெண்களுக்கான அடையாளமான சொல், ‘லெஸ்பியன்என்பது சாபோ பிறந்த தீவின் பெயராலும் சாபோவினாலுமே உருப்பெற்றது. இளம்பெண்கள் பாலான இவரது ஈர்ப்பு கவிதைகளிலும் வாழும் முறைகளிலும் வெவ்வேறு வடிவங்களில் ஆளப்பெற்றிருக்கிறது. தன் காதல் உறவுக்கு எதிரிகளாக இருக்கும் பெண்களின் மீதான வெறுப்பு, பொறாமை அல்லது அவர்கள் மீதான இரக்கம் ஆகியவை இவர் கவிதைகளில் ஆழமாக இடம்பெற்றுள்ளன. இளம்பெண்களை திருமணத்திற்கும், ஆண்களுடனான உடலுறவு மற்றும் மண உறவுக்கும் தயார்செய்யும் பணியை இவர் தொழில் முறையாகச் செய்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. கவின் கலை நிபுணத்துவம் என்பது பெண்களுக்குத் தேவையான ஒன்று என்பதை இவர் அடிப்படையான பெண்ணுரிமையாக நம்பியிருந்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் அப்பால் உடன் வாழும் பெண்கள் மீது தனக்கு ஏற்பட்ட காம எழுச்சியை நேரடியாகவும் வெளிப்படையாகவும் எழுத்தில் பதிவுசெய்தவர் என்று வியக்கப்படுகிறார். இதனாலேயே கிறித்துவமத நிறுவனங்களால் நிராகரிக்கப்பட்டவர்.

இவர் எழுதிய ஒவ்வொரு சொல்லின் அடியிலும் காதலும் காமமும் பாலுறவு இன்பமும் கனல்கின்றன. ‘காதல் என்பது கற்பிதங்களையும் கட்டுக்கதைகளையும் நெய்யும் நெசவாளிஎன்பது இவரது நம்பிக்கையாக இருந்தது. கவிதையின் வழக்கமான கட்டமைப்புகளை உடைத்து தன் மொழிதலுக்கேயான தனித்த கவிதை அலகுகளைப் படைத்துக் கொண்டார். அக்கவிதைகள் வழியாகப் புது அழகியலுக்கான இயக்கத்தையும் உருவாக்குவதில் முனைந்தார். கடவுள் பற்றிய புராதனக் கற்பனைகளைத் துடைத்து எறிந்ததுடன் அதற்கான கருவாகக் காதலைப் பயன்படுத்திக் கொண்டவர். கிரேக்கத் தத்துவ அறிஞர் பிளாட்டோ இவரைப் பற்றிக் குறிப்பிடுகையில், ‘பத்தாவது கலைத்தெய்வம்என்று குறிப்பிடுகிறார். கிரேக்க புராண மரபிக்குரிய ஒன்பது கலையணங்குகளான காவியக் கலைத்தெய்வம், வரலாற்றுக்கலைத் தெய்வம், உணர்ச்சிக் கவிதைத் தெய்வம், இசைக்கலைத்தெய்வம், வீறுநாடகத் தெய்வம், தெய்வப்பாடல் தெய்வம், நடனத்தெய்வம், களிநாடகத்தெய்வம், வானூல் தெய்வம் இவர்களைக் கடந்த பத்தாவது கலையணங்கு, சாபோ என்பது பிளேட்டோவின் குறிப்பு.

பெண்களில் திறன்மிக்கோர் இல்லாமல் இல்லை. காலந்தோறும் தங்கள் ஆளுமைகளை போராட்டத்தினூடேயும் துயரினூடேயும் செழுமைப்படுத்திக் கொண்டே தாம் இருக்கின்றனர். சாபோவின் சிறப்பம்சம் என்பது மனிதனின் உச்சப்பட்ச உணர்ச்சியான காதலை விடுதலையின் குறியீடாகக் கொண்டதும் சகப் பெண்களுடன் வளர்த்துக் கொண்ட இணக்கமான உறவை விடுதலைக்கான பெருஞ்சக்தியாக உணர்ந்ததும் தாம். தன்னைத் தனித்த பெண்ணாக அடையாளம் கண்டோர் தனக்கு மட்டுமேயான ஆதாயங்களைத் தேடிக்கொண்டனர். ஆனால் பொது அடையாளமாக தன்னை வரித்துக் கொண்டோர் சாபோவைப் போல நூற்றாண்டுகளுக்கு மேலே எதிரொலிக்கும் குரல்களாக சொல்லாட்சிகளாக கவித்துவம் நிரம்பும் கவிதைகளாக இருக்கின்றனர். சாபோவும் ‘தன் பாலுறவை விடுதலையின் வெளிப்பாடாகவும் தன்னையொத்த பெண்களின் மீதான பெருங்கருணையாகவும் அடையாளம் கண்டிருக்க வேண்டும்.
சாபோவின் கவிதை ஒன்று - (ஆங்கில வழி மொழியாக்கம்)
அவன் எனக்குக் கடவுளுக்கு நிகரானவன்
உனக்கு எதிரில் அமர்ந்து
உன்னிடம் இனிய வார்த்தையைப் பேசிக்கொண்டிருக்கிறானே
உனது வனப்பான புன்னகைக்கு
பதிலளிக்கிறானே
அவன் எனக்கு கடவுளுக்கு நிகரானவன்.
உண்மையாகவே என் இதயம் என் நெஞ்சுக்கூட்டுக்குள்ளே
சிறகடிக்கிறது.
உன்னை ஒரு கணம் பார்க்க நேர்ந்தால் கூட
என்னால் பேசமுடியவில்லை
என் நாக்கு உடைந்து போகிறது.
என் தோல் மீது மெலிதான தீநாக்கு
பாய்ந்து பரவுகிறது.
என் கண்களால் எதையும் பார்க்கமுடியவில்லை.
என் காதுகள் இரைகின்றன
வியர்வை வழிகிறது.
நடுக்கம் என் உடலை ஆட்டுகிறது.
முழுதுமாய் என்னைப் பறிகொடுக்கிறேன்.
காய்ந்த புல்லை விட வெளுப்பாய் மாறுகிறேன்.
அந்தச் சமயங்களில்
நான் செத்துவிடுவேன் போல இருக்கிறது.

குட்டி ரேவதி

1 கருத்து:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

என்னை கவர்ந்த வரிகள்
கவின் கலை நிபுணத்துவம் என்பது பெண்களுக்குத் தேவையான ஒன்று என்பதை இவர் அடிப்படையான பெண்ணுரிமையாக நம்பியிருந்திருக்கிறார்.

தெளிவான நடை.