நம் குரல்

டென்மார்க் பயணம் 5 - க்ரீன்லாந்து நாயகியும் மான்கறியும்


இது எதேச்சையாகத்தான் நடந்தது. ஒரு கவிதை வாசிப்பு நிகழ்வில் என்னுடன் தன் நாடகத்தை நிகழ்த்துவதற்காக ஜெஸ்ஸி என்ற நாடகக்கலைஞரும் அழைக்கப்பட்டிருந்தார். இவர் க்ரீன்லாந்திலிருந்து இடம்பெயர்ந்து, டென்மார்க்கில் வாழ்ந்து வருபவர். ஒரு மாலை நேரத்தில் இவர் வீட்டில் காபி அருந்தி விட்டு அங்கிருந்து இருவருமாக கவிதை வாசிப்பு நிகழ்விற்குச் செல்வதாகத் திட்டம். டென்மார்க்கில் வந்து இறங்கிய முதல் நாட்களிலேயே ஒரு முறை இவரைச் சந்தித்திருந்தேன். சந்தித்த சில கணங்களிலே, நீங்கள் மாயமந்திரங்களில், சடங்குகளில் நம்பிக்கை உள்ளவரா என்று கேட்டேன். அந்த அளவிற்கு அவருடய உடல் அசைவுகளும் அணுகுமுறைகளும் பெருவடிவில் இருந்தன. மாலையில் இவர் வீட்டிற்குள் நுழைந்ததுமே, சிறிய அறையின் குறுகலான வெளி, நகர அமைப்பு என எந்தக்கட்டுக்குள்ளும் அடங்காத ஒரு பெண்ணின் வீடு என்று விளங்கியது. க்ரீன்லாந்தின் பனிப்பிரதேசங்களில் சீல், வால்ரசுகளை வேட்டையாடி வாழும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் இவர். வீட்டிற்குள்ளும் ஒரு பனிப்பிரதேசத்தை, அல்லது அதன் நினைவுகளைக் கொண்டு வர முயன்றிருந்தார். ஒவ்வொரு சிறிய இடத்திலும், நூற்றுக்கும் மேலான நுட்பமான பொருட்களை, பனிநிலம் சார்ந்த கலைப்பொருட்களையும் சேகரிப்புகளையும் ஒரு சடங்கின் நுணுக்கத்துடன் வைத்திருந்தார். கலைப்பொருளின் கண்காட்சியகம் போல இருந்தாலும், எதையும் தொட்டுப்பார்ப்பதற்கான தயக்கமும் கூடியது. அந்த அளவிற்கு ஒவ்வொரு பொருளுக்கு இடையேயும் உறவும் அர்த்தமும் தொனிக்க அவை வைக்கப்பட்டிருந்தன. உள்ளே நுழைந்ததுமே அவருடைய கணவர் எங்கள் இருவருக்கும் காபி கொண்டு வந்து கொடுத்தார். அவருடன் இன்னும் சில ஆண்களும் இருந்தனர். ஜெஸ்ஸி, சொன்னார். சுவீடன் காடுகளில் வேட்டைக்காகச் சென்றிருந்த அவருடைய கணவனின் சகோதரர் திரும்ப இருப்பதாகவும், அவருடைய வேட்டைக்கறியைப் பெறுவதற்காகக் காத்திருப்பதாகவும் கூறினார்.

அப்பொழுது, தொலைபேசி அழைப்புவர எல்லோரும் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் வீட்டிற்கு வெளியே ஓடினர். சிலநிமிடங்களில், திரும்பிய அவருடைய கணவர் கையில், மானின் தொடைக்கறியும் விலா எலும்புக்கறியும் காகிதத்தில் பொதியப்பட்டு இருந்தன. பச்சை மாமிச வாசனை, தாவர வாசனை கலந்து வீசியது. வீட்டிற்குள் மான்கறி வந்ததும் ஜெஸ்ஸி உற்சாகமாக நடனமாடினார். எங்களுக்கோ நிகழ்விற்கான நேரம் ஆகிக்கொண்டிருந்தது. அவருடைய கணவர், க்ளாஸ், அந்தக்கறியை சிறிய அழகான துண்டுகளாக நறுக்கினார். வாணலியில் சிறிது ஆலிவ் எண்ணெய் விட்டு மான்கறியைப் போட்டுப்புரட்டினார். மிளகுப்பொடியைத் தூவினார். ஏற்கெனவே வதக்கிவைத்திருந்த முள்ளங்கி, தக்காளி, வெங்காயத்துண்டங்களைப் போட்டுப்புரட்டி தட்டில் வைத்தார். மான்கறி சாப்பிடாமல் போனால், இன்று நிகழ்வில் குறை நிகழும் என்று ஏதோ சங்கேதம் போலச் சொன்னார். நீண்டநாட்களாக நோயுற்று இருந்த தன் நண்பன் அன்று காலையில் மறைந்த செய்தி வந்ததிலிருந்து அவனுக்காக நான் ஏதேனும் செய்யவேண்டுமென்று துடிப்புடன் இருக்கிறேன். அவனுக்கு இன்றைய மாலை நிகழ்வை அன்பளிப்பாக்கப் போகிறான் என்றார்.

மாலை நிகழ்வில், எல்லோரின் கண்களிலிருந்தும் கண்ணீர் உகுக்க வைத்துவிட்டார். ஏனெனில், விடுதலையைச் சிந்திக்கும் உடல் அத்தகைய மாண்புகளையும் ஆற்றல்களையும் தனக்குள் சேகரித்து வைத்துக்கொள்கிறது. அதை இயக்கும் தட்டாமாலை போல உடலுக்குள்ளிருந்து எல்லா நினைவுகளும் உணர்வுகளும் வீச்சுடன் வெளிப்படுகின்றன. ஜெஸ்ஸிக்கு ஐம்பது வயது. தன் நிகழ்த்து அனுபவங்களை ஒரு நூலாக எழுதியிருக்கிறார். தன் ஒட்டுமொத்தச் சிந்தனையையும், அன்றாடங்களையும் உடலுக்குள் நிரப்பிவைத்திருக்கிறார். எங்கேயோ விட்டுவந்த க்ரீன்லாந்து நினைவுகளும், பனிப்பிரதேச வேட்டைகளும் இயற்கையுடன் ஒன்றுதலும் அவருடைய உடலாகி இருப்பதாகத் தோன்றியது. நிலம் விட்டு நிலம் ஏகுபவர்கள் நிலத்தையும் தம்முடன் சுருட்டி எடுத்துச் செல்கின்றனர்.

குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: